Published : 11 Apr 2020 08:01 am

Updated : 11 Apr 2020 08:01 am

 

Published : 11 Apr 2020 08:01 AM
Last Updated : 11 Apr 2020 08:01 AM

சம்ஸ்காரா: ஒரு கரோனா வாசிப்பு!

samskara

கரோனா காலத்தில் அதிகம் வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாவல்களுள் ஒன்று கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’. காரணம், இந்நாவலில் ஒரு கொள்ளைநோய் வருகிறது. 55 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நாவலின் பிரதான நோக்கம் ஒரு கொள்ளைநோய் அனுபவத்தை விவரிப்பது அல்ல. என்றாலும், ஒரு சமூகம் எப்படிக் கொள்ளைநோயை எதிர்கொண்டிருக்கிறது, இலக்கியத்தில் அது என்னவாகப் பதிவாகியிருக்கிறது என்பதாக வாசித்துப் பார்ப்போம்.

முதல் மரணம் நாரணப்பாவிடமிருந்து தொடங்குகிறது. ‘சிவமொக்கேயிருந்து வந்தவங்க ஜொரம்னு படுத்தாங்க. நாலுநாள் ஜொரம். அவ்ளதான். அள்ளவயித்துப் பக்கத்துல கட்டி வந்துருச்சு; நோவுக்கு வர்ற நெரிக்கட்டி மாதிரி’ என்றுதான் பிராணேஸாசார்யாரிடம் சந்தரி விவரிக்கிறாள். அதற்கு மேல் என்ன காரணம் என்று தெரியவில்லை. நாரணப்பா ஒரு பிராமணர் என்பதாலும், அவர் ஒரு சூத்திரப் பெண்ணோடு குடும்பம் நடத்தினார் என்பதாலும் அங்கே வேறு விதமான நெருக்கடி உருவாகிறது. தகனத்துக்காகப் பிணம் காத்துக்கொண்டிருக்கிறது. இந்தக் களேபரத்தில் ஊருக்குள் ஒரு கொள்ளைநோய் பரவப்போகிறது என்பது யாருக்கும் உரைக்கவில்லை. சிவமொக்கேக்கு அவ்வப்போது மூன்றெழுத்து பயங்கர வியாதி வருமே என்று தோன்றுவது பக்கத்து ஊர்க்காரர் மஞ்சய்யாவுக்குத்தான். அவரும் அதை வெளியே சொல்லப் பயப்படுகிறார்.


இரண்டாவது மரணம் குறித்துத் தெரியவருவது பெள்ளியிடமிருந்து. “பிள்ளனும் அவன் பொலைச்சியும் பேயடிச்சிதோ என்ன கதையோ, செத்துப்போயிடுச்சுங்க சாமி இன்னைக்கி. ஜொரம் வந்து செத்துதுங்க. மூடியிருந்த கண்ணு தொறக்கவே இல்ல” என்று ஸ்ரீபதியிடம் சொல்கிறாள் பெள்ளி. நாரணப்பா செத்துப்போயிருப்பது இவர்கள் இருவருக்கும் தெரியாது. அவனிடம் இன்னொரு ஆச்சர்யத்தையும் விவரிக்கிறாள்: “எங்க கொட்டாய்லே என்னா இருக்குது துன்றதுக்குன்னு இந்தப் பெருச்சாளிங்க வருதோ? மோட்டுலேருந்து தொப்பு தொப்புன்னு உழுந்து கிருகிருன்னு சுத்தி செத்துப்போகுதுங்க. இந்த மாதிரி அவஸ்தய நான் கண்டதேயில்ல. சாமியாடியக் கூப்பிட்டு தெய்வம் வரவளச்சிக் கேக்கணும்.”

அங்கிருந்து நாரணப்பாவைப் பார்க்கக் கிளம்புகிறான் ஸ்ரீபதி. நாரணப்பாவின் அறையில் கெட்ட நாற்றமடிக்கிறது. மெத்தென சில்லென்று இருந்த ஒன்றை மிதித்துவிடுகிறான். பேட்டரி அடித்துப் பார்க்கிறான். எலி. காலை மேல்நோக்கி விரித்துக்கொண்டு மல்லாந்து செத்து விழுந்திருக்கும் எலி. அதன் மேல் உட்கார்ந்த ஈக்கள் பேட்டரி வெளிச்சத்துக்குக் குய்யென்று பறக்கின்றன. மூக்குமுட்டப் போட்டுக்கொண்டு வெறுந்தரையில் இப்படி இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறானே என்று சிரித்துக்கொண்டு நாரணப்பாவை அசைக்கிறான். மீண்டும் எலியை மிதித்துவிட்டதைப் போன்ற சில்லென்ற தொடுஉணர்வு அவனுக்கு ஏற்படவும், கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு பேட்டரியைக் கொளுத்துகிறான். மேலே குத்திட்டுநின்ற பார்வையற்ற திறந்த கண்கள். பேட்டரி வெளிச்சத்தின் வட்டத்துக்குள் ஈ, புழு, நாற்றம்.

அன்றிரவு, துர்நாற்றத்தை ஊர் உணரத் தொடங்குகிறது. நாரணப்பாவின் பிணம்தான் பேயாகி அலைந்துதிரிந்து துர்நாற்றத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதனால், பதற்றமும் அச்சமும் உருவாகிறது. மறுநாள் வெளியே திரியும் பிள்ளைகளை வீட்டுக்குள் அடைக்கிறார்கள்; பிள்ளைகளை நாரணப்பாவின் பேய் அடித்துவிடுமோ என்று பயந்துதான். என்றைக்கும் இல்லாமல் பட்டப்பகலில் வீட்டுக்கதவைத் தாழ்ப்பாள் போட்டு மூடி வைக்கிறார்கள். வீதியே வெறிச்சென்று கிடக்கிறது.

பெள்ளியின் அப்பாவும் அம்மாவும் காய்ச்சல் வந்து படுத்திருப்பதால் பெள்ளிக்குப் பதில் சின்னி சாணம் வார வருகிறாள் அக்ரஹாரத்துக்கு. சேரியில் சௌடாவும் அவன் மனைவியும் செத்துப்போனதைச் சொல்கிறாள். கூடவே, “எம்மாம் எலிங்க இப்பிடி பொறப்பட்டுனுகீதுங்க வெளியோ. என்னுமோ கண்ணால ஊர்கோலம் போற மாதிரி. அது என்னா வாழ்வோ அதுங்களுக்கு” என்கிறாள். அக்ரஹாரத்திலும் எலிகள் ஊர்கோலம் போகின்றன. நிலைமை இன்னும் தீவிரமாகிறது. அரிசிக் கிடங்கில் செத்து விழுந்திருந்த எலியின் வாலைப் பிடித்தெடுத்து வெளியே எறிவதற்கு சீதாதேவி போகும்போது, ஒரு கழுகு பாய்ந்து வந்து வீட்டுக்கூரையின் மீது உட்கார்வதைக் கண்டு அலறுகிறாள். அந்தக் காட்சியை அனந்தமூர்த்தி இப்படி வர்ணிக்கிறார்: ‘கழுகு, கழுகு, கழுகு – நீலவானம் நிறைய மிதந்துகொண்டும் பறந்துகொண்டும் வட்டவட்டமாகச் சுற்றிக் கீழே பாய்ந்துவந்துகொண்டும் இருந்தன. …அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தங்கள் வீட்டின் மேல் உட்கார்ந்த கழுகு நாட்டியக்காரியைப் போல கழுத்தை வளைத்து, சுற்றிலும் பார்த்து, ‘பர்’ என்று அவர்களின் காலடியில் பாய்ந்து, உக்கிராணத்திலிருந்து புழக்கடைக்கு ஓடிவந்துகொண்டிருந்த எலியொன்றைக் கொத்திக் கவ்விக்கொண்டு வீட்டின் மேல் உட்கார்ந்தது.” இப்படி நான்கு பக்கத்துக்கு விரிகிறது. சூழலின் தீவிரத்தை அந்த வர்ணனை பிரம்மாண்டமாக உணர்த்துகிறது. இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.கே.ராமாநுஜன், பிளேக் வந்த எலிகளைக் காகமோ கழுகோ சீண்டாது என்று பின்னுரையில் குறிப்பிடுகிறார்.

காய்ச்சல் கண்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. உயிரிழப்பும் கூடிக்கொண்டே போகிறது. மஞ்சய்யாவுக்கு மட்டும் உண்மை துலக்கமாக உறைக்கிறது. கொள்ளைநோய் பயம் ஆட்கொள்ளத் தொடங்குகிறது. மற்றவர்களுக்கோ தர்மக்கேட்டினால் நேர்கிறது என்பதாக பயம். மஞ்சய்யாவுக்குத் தன் வீட்டில் வந்து உப்புமாவு சாப்பிட்டுவிட்டுப் போனவன் இறந்துவிட்டதை நினைத்து பயம். அவருக்கு உண்மையான பயம். பிளேக்கால் செத்த எலியை ஒரு கழுகோ காக்கையோ கொண்டுவந்து போட்டுவிட்டாலும் போதும். எச்சரிக்கையடைகிறார் மஞ்சய்யா. நான்கு காரியங்களை உடனடியாகச் செய்ய நினைக்கிறார். ஒன்று, முனிசிபாலிடிக்குத் தெரிவித்துப் பிணத்தை எடுக்கச் செய்ய வேண்டும். இரண்டு, டாக்டரை அழைத்துவந்து இனாகுலேஷன் ஊசி குத்த வைக்க வேண்டும். மூன்று, பம்பு வரவழைத்து நச்சுப்புகையைப் பொந்துகளிலெல்லாம் நிரப்பி எலி வளைகளை மூட வைக்க வேண்டும். நான்கு, தேவையென்றால் அக்ரஹாரத்தை விட்டு எல்லோரும் போய்விட வேண்டும். சில நாட்களுக்காவது.

இரண்டு விதமான அச்சங்கள், இரண்டு விதமான விளைவுகளை உருவாக்குகின்றன. மஞ்சய்யாவின் அச்சம் தீர்வை நோக்கி இட்டுச்செல்கிறது. மற்றவர்களின் அச்சமோ பதற்றத்தை உருவாக்குகிறது, உயிர்களைப் பலிகொடுக்கிறது, விளைவை இன்னும் விபரீதமாக்குகிறது. மேலும் பாவம், தர்மம் என்பதாக ஒன்று; நவீன மருத்துவரீதியிலான அணுகுமுறை இன்னொன்று என இரண்டு விதமான மனோபாவங்களைப் பார்க்க முடிகிறது. அதை ஒவ்வொரு பேரழிவின்போதும் நம் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

சம்ஸ்காரா

யு.ஆர்.அனந்தமூர்த்தி

தமிழில்: தி.சு.சதாசிவம்

அடையாளம் பதிப்பகம்

புத்தாநத்தம், திருச்சி - 621310.

விலை: ரூ.160

தொடர்புக்கு: 04332-273444


Samaskaraசம்ஸ்காரா: ஒரு கரோனா வாசிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x