Published : 02 Mar 2020 07:22 PM
Last Updated : 02 Mar 2020 07:22 PM

சூழலியலைக் காப்பதற்கான பண்பாட்டுப் போர் உக்கிரமடைந்துள்ளது: எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

சூழலியல் செயல்பாடுகளில் உள்ள உத்தி ரீதியான வேறுபாடுகள், சங்கடங்கள், முரண்கள், அமைப்பு ரீதியான சிக்கல்கள், எழுத்தாளர்களிடம் இருக்கும் சிக்கல்கள் குறித்து எழுத்தாளர் நக்கீரன் பகிர்ந்து கொண்டார்.

'தமிழ்ப் பண்பாடே நீர் பண்பாடுதான்' என்ற நக்கீரன் உடனான நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.

சூழலியலைக் காக்க தண்ணீர், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சில ஆர்வலர்கள் ஆலோசனைகள் கூறுகின்றனர். இந்த அறிவுரைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவை முட்டாள்தனமானவை. இவையெல்லாம் முதலாளித்துவ கற்பனையில் பிறந்த வாதங்கள். அவை என்ன செய்யும் என்றால், முழு சூழலியல் சீர்கேட்டுக்கும் தனி மனிதனைப் பொறுப்பாக்கி அவனின் மனசாட்சியைச் சிதைக்கும். தண்ணீர் குழாயை மூடுவது எல்லாம் சரி. உலகில் 3-ல் 2 பங்கு பசுங்குடில் வாயு வெளியேற்றத்துக்குக் காரணம், உலகிலுள்ள 90 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.

என் குழாயை மூடச் சொல்லும் அதே நேரத்தில், கோகோ-கோலா நிறுவனம் உறிஞ்சும் தண்ணீரை மூடச் சொல்ல முடியுமா? அவன் நிறைய தண்ணீர் உறிஞ்ச வேண்டும் என்பதற்காக என் குழாயை மூட வேண்டுமா? அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஈடாக 16 இந்தியக் குழந்தைகள் நுகர்கின்றனர். அவர்களின் நுகர்ச்சியை மறைப்பதற்காக என்னை எளிமையாக இரு என்று சொல்கின்றனர்.

பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறையுங்கள் என்கிறோம். ஆனால், நீங்கள் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறீர்கள். மக்களைத் திசை திருப்பி, நாம்தான் அவற்றுக்குக் காரணம் என நம்ப வைப்பதுதான் வணிக லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பெருநிறுவனங்களின் வேலை.

தனிநபர்களாக சூழலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கும், அமைப்பு ரீதியாக சூழலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஏனெனில், அமைப்பாக இயங்கும் பல என்ஜிஓக்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

பத்தாண்டுகளுக்கு முன்பு சூழலியல் என்ற கருத்தியல், ஆங்கிலம் பேசக்கூடிய மேட்டுக்குடி மக்களுடையதாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஏதாவதொரு என்ஜிஓவைச் சார்ந்துதான் இருந்தனர். நான் எப்படி வெளிநாட்டில் இருந்த வேலையை விட்டு மனைவியின் பணத்தில் இயங்க வேண்டும் என நினைத்தேனோ அப்படித்தான் சூழலியல் ஆர்வலர்கள் இருப்பார்கள் என நினைத்து அணுகினேன். ஆனால், அவர்கள் இதன் மூலம் நிறைய சம்பாதித்ததைப் புரிந்துகொண்டேன். எந்தவொரு அமைப்பையும் நான் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. நிதி இருந்தால்தான் அவர்கள் சேவை செய்வார்கள் என்பது தெரிந்தது.

நிதியை மையப்படுத்திய செயல்பாடுகள் மட்டும்தான் என்ஜிஓக்களின் பிரச்சினையா? மக்களிடம், குறிப்பாக பழங்குடியின, மலைவாழ் மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதில் என்ஜிஓக்களுக்கும், மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறதே?

நிதி ஆதாரத்தை வைத்து, விளம்பரச் செயல்பாடுகள் மூலமும் செயல்படும் என்ஜிஓக்கள், அதிகபட்சம் மெரினாவில் கண்ணகி சிலை முன்பு கூடி, தொப்பி, டி-ஷர்ட் அணிந்துகொண்டு அதனை மிகப்பெரிய சாதனையாக நினைத்துப் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், தனி சூழலியல் ஆர்வலர்களாக இயங்கும் நாங்கள் சொந்தக் காசைப் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். என்ஜிஓக்களிடம் நான் கேட்க விரும்புவது மக்களிடம் சென்றடையாமல் எப்படி சூழலியலை காக்கப் போகிறீர்கள்?

தனிப்பட்ட வகையில் இயங்கும்போது மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்தால் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

எழுத்து மிகப்பெரிய ஆயுதம். இல்லையென்றால் எழுத்தாளர்களைச் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எழுத்து அறிவு சார்ந்த ஆயுதமாக இருப்பதால், அதன் மீது எப்போதும் எல்லா வல்லாட்சியர்களுக்கும் பயம். எழுத்தாளர்களை ஒழித்துவிட்டால், எழுத்தை ஒழித்து விடலாம் என, பல நூற்றாண்டுகளாக இந்தத் தவறைச் செய்துகொண்டே வருகின்றனர். அதுவொரு விதை.

படிப்பவர்களின் எண்ணிக்கை பெரிதாக இல்லாவிட்டாலும், விதைத்த விதை பலமாக இருக்கும். இது ஈராயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் போர். இன்று நேற்று தொடங்கியது அல்ல. இந்திய நிலப்பரப்பின் எந்தப் பகுதியிலும் மொழி, பண்பாட்டு ரீதியாக அவர்கள் வெற்றி கொண்ட அளவுக்கு தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. ஏனென்றால் இங்கு தனித்த பண்பாடு இருக்கிறது. இந்த பண்பாட்டை நாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாலே போதும். அதை எதிர்த்துப் போராட முடியும்.

ஆனால், அதற்கு அடிப்படையில், ஒரு தனிப்பட்ட செயற்பாட்டாளர் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா?

நிச்சயமாக. தனியார் நிறுவனங்கள் குறித்து எழுதும்போது, முன்பு மிரட்டல்கள் வந்தன. இப்போது வருவதில்லை. "பெரிய ஆளாயிட்டான்" என அவர்களே நினைத்துக்கொண்டார்களா எனத் தெரியவில்லை. 3 ஆண்டுகளாக யாரும் மிரட்டவில்லையே என நினைத்திருக்கிறேன். என்னுடைய எழுத்துகளில் நான் பல சான்றுகளை முன்வைத்திருப்பேன். 'விஷயம் இல்லாமல் எழுத மாட்டான் என நினைக்கிறார்கள். மக்கள் என் எழுத்தை நம்புகின்றனர். அதனால் என் எழுத்தை எதிர்ப்பது அவர்களுக்குச் சிக்கலைத் தரும் என நினைத்திருக்கலாம்.

'எழுத்தே எனது ஆயுதம்' என சொல்வதால் கேட்கிறேன். சூழலியல் எழுத்தாளர் என ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் இயங்குவதால் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?

உள்ளே நுழையும்போது அப்படித்தான் இருந்தது. இப்போது சூழலியல்தான் வாழ்வியல் என எல்லோரும் தெரிந்துகொண்டனர். தமிழகத்தில் இன்று நடக்கக்கூடிய அனைத்துப் போராட்டங்களும் சூழலியல் போராட்டங்களாக இருப்பதுவே இதன் வெளிப்பாடுதான். இனி இந்தத் துறையில் இருந்து விலகுபவர்கள் தான் அந்நியமாகத் தெரிவார்கள். ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு சூழலியல் பிரச்சினைகள் உள்ளன. கூடங்குளம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களைப் பாதிக்கின்றது. எத்தனை எழுத்தாளர்கள் அவர்களின் போராட்டங்கள் குறித்து எழுதினர்? நீங்கள் கவிதை எழுதும்போது, போபாலில் நடந்தது போன்ற ஆபத்து நேரிட்டால் என்ன செய்வீர்கள்? மற்ற எழுத்தாளர்களைப் பார்த்து ஏன் நீங்கள் சூழல் குறித்து எழுதுவதில்லை என கேட்கும் காலம் இது. சூழலியல் குறித்து எழுத்தாளர்களிடம் கருத்துக் கேட்டால் அவர்கள் மவுனமாகக் கடந்துபோவதையும் பார்க்கலாம்.

சூழலியல் எழுத்து என்றாலே மிகப் பாதுகாப்பான சூழலில் இருந்து தட்டையான எழுத்துகளை எழுதுவார்கள் என்கிற விமர்சனம் இருக்கிறது. நீங்கள், சூழலியலுடன் அரசியல், சமூகப் பார்வையுடன் எழுத முனைந்தது எப்படி?

பொதுவாக சூழலியல் என்றாலே பறவைகளைப் பார்ப்பது, காடுகளுக்குக் ‘காண் உலா’ செல்வது என்றுதான் இருந்தது. இதனை இரு விதங்களில் அணுகலாம். ஒன்று அவர்களின் விருப்பம் அதனைத் தாண்டியதாக இல்லை. மற்றொன்று, அரசியல் ரீதியாக எழுதினால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைத்திருக்கலாம். அவர்களின் அணுகுமுறைகள் குறித்தும் எனக்குத் தெரியும். அதற்கு காடோடி நாவல் எடுத்துக்காட்டு.

பறவைகள் அழிகிறது என்று எழுதினால் அவை ஏன் அழிகின்றன, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன, பின்புலத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்களின் பங்கு என்ன என்பது குறித்துப் பேசாமல் என்னால் விலங்குகளின் அழிவு குறித்துப் பேச முடியாது. இதனால் துணிவதற்குப் பலருக்கு யோசனை இருந்திருக்கலாம். எனக்கு எதிர்ப்புகள் வந்தபோதுதான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதைப் புரிந்து இன்னும் தீவிரமாக சூழலியலில் அரசியலை இணைத்து எழுத ஆரம்பித்தேன். அப்போது, ஆள் இல்லாத மைதானத்தில் நான் மட்டும் தான் விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் நிறைய பேரை விளையாடுவதற்கு அழைக்கிறேன். ஆனால், வேடிக்கை பார்ப்பதற்குத்தான் ஆட்கள் இருக்கின்றனர்.

ஆனால், இது சூழலியல் எழுத்தாளர்களிடம் மட்டுமே இருக்கும் பிரச்சினையா என்ன?

சூழலியல் மட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்தவரை எந்த எழுத்தாளராவது சமூக விழிப்புணர்வுடன் எழுதுகிறார்களா? நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் நடக்கும்போது எந்த எழுத்தாளரும் வாய்திறக்க மறுக்கிறார்கள்.

சக உயிர் போவதை நான் பேசாமல் எப்படி இருக்க முடியும்? ஆனால், இதுபற்றிப் பேசுவது என் எழுத்துத் தளம் கிடையாது. ஆனால், குறைந்தபட்சம் நான் யார் பக்கம் நிற்கின்றேன் என்பதையாவது காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், மற்ற எழுத்தாளர்கள் 'இது என்னுடைய தளம் அல்ல' என ஒதுங்குகின்றனர். அந்த வகையில், இலக்கியத்தின் பங்கு மிகக்குறைச்சலாக இருக்கிறது என்பதில் விமர்சனங்கள் இருக்கின்றன. அதில் நானும் உடன்படுகிறேன்.

சூழலியல் அரசியலின் மிக முக்கியமான அம்சம், அது ஒரு பண்பாட்டு வாழ்க்கையோடு இயைந்த அரசியல். சூழலியல் அரசியலைப் பேசும்போது பண்பாட்டு ரீதியான முரண்களுக்கு முகம் கொடுப்பது முக்கியம். இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் பண்பாட்டுப் போர் இப்போது உக்கிரமடைந்திருக்கிறது. பண்பாட்டு ரீதியான போரை எதிர்ப்பதற்கான கருத்தாயுதத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது எழுத்தாளர்களின் கடமை. என்றைக்கும் பொய் கவர்ச்சியாக இருக்கும். அதனால் அதனை எளிதில் நம்பிவிடுவார்கள். உண்மை என்றைக்கும் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பல பொய்களைச் சொல்கின்றனர். அவர்களின் பொய்யை நிரூபிக்கக் கருத்து பலம் இருக்க வேண்டும். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, பல தோல்விகளில் இருந்து தங்களை மீட்டு பலமாகச் செய்கின்றனர். நம்மிடம் கொஞ்சம் அலட்சியம் நிலவிவிட்டது. அவர்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற அலட்சியம். ஆனால், அப்படி அலட்சியமாக இருக்க முடியாது என்பதை காலம் இப்போது உணர்த்தியிருக்கிறது.

என்ஜிஓக்கள் மீது இருக்கும் இன்னொரு விமர்சனம், அத்தகைய அமைப்புகளை கையில் வைத்திருப்பவர்களின் சமூகப் பின்புலம். அடித்தள மக்களின் அரசியலாக சூழலியல் மாறுவது எட்டாக்கனியா?

மேட்டுக்குடி மக்களிடம் இருந்த சூழலியலை எளிய மக்களிடம் கொடுக்க என்னிடம் இருந்த ஆயுதம் எழுத்து. இளைஞர்களிடம் அந்த கருத்துகள் வலுவாக போய்ச் சேர்ந்திருக்கின்றன. வருகின்ற காலத்தில், அவர்கள் அதனைக் கடத்துவார்கள். இதற்கான பல களப்பணிகளைச் செய்திருக்கிறேன். அதன் பலன், நட்சத்திர உணவகங்களில் நடந்த சூழலியல் கருத்தரங்குகள் இன்றைக்கு மரத்தடியில் நிகழ்கின்றன. இது மிகப்பெரிய மாற்றம். இதனால், மேட்டுக்குடி சூழலியல் ஆர்வலர்களுக்கு என்மீது கோபமும் இருக்கிறது. அவர்கள் சொத்தைப் பிடுங்கி கொடுத்துவிட்டதாகக் கருதுகிறார்கள். இப்போது எந்த என்ஜிஓக்களும் சூழலியலின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியாது. எந்தெந்த என்ஜிஓக்கள் எந்த வேலைகளைச் செய்கின்றனர் எனப் பேசும் அளவுக்கு மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டனர்.

ஆனால், சமூக வலைதளங்களில் வருவதை மட்டும் படிக்கும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டது; அறிவுச்செயல்பாட்டோடு முன்னேறுவதற்கு இந்தப் போக்கு ஒரு பெரும் தடை என்கிற கருத்து இருக்கிறதே?

இளைஞர்கள் வாசிக்கவில்லை என்பதுதான் பல எழுத்தாளர்களின் கருத்து. அதனை நான் முழுப் பொய் என்று சொல்வேன். ஒரு தலைமுறைக்கு முன்பு இருந்த வாசகர்களுடன் ஒப்பிடுகையில் வாசிப்பு குறைந்துவிட்டது என்பது உண்மைதான். இன்றைக்கு 20 வயதைத் தாண்டிய அத்தனை பேரும் வாசிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் வாசிக்கத் தேவையான எழுத்துகள் இங்கு இல்லை. இளைஞர்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். என்னுடைய வாசகர்களில் சரிபாதி பேர் பெண்கள். அவர்கள் கேட்கும் கேள்விகள், முன்வைக்கும் வாதங்கள் ஆச்சர்யமாக உள்ளன. தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர். தான் வாழக்கூடிய சமுதாயத்தைப் பற்றி இந்த எழுத்தாளர் என்ன கவலைப்படுகிறார் எனப் பார்க்கின்றனர். அவர்கள் கைகளில் உள்ள புத்தகங்களக் கவனியுங்கள், அதுபோதும்.

ஒரு சூழலியல் செயற்பாட்டாளர் தன்னை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது?

எழுத்தாளர், அடிப்படையில் நான் ஒரு ஹோமோசேப்பியன். ஹோமோசேப்பியன் என்றால் எனக்கு மதம், சாதி கிடையாது. மொழி கூட தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால், இந்த நிலத்தில் பிறந்ததால் குறிப்பிட்ட மொழியை, பண்பாட்டைச் சார்ந்திருக்கிறேன். அடிப்படையில் நாம் எல்லோரும் ஹோமோசேப்பியனாக இருந்தால், உலகம் அமைதியாக இருக்கும்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x