Last Updated : 11 Jan, 2020 10:02 AM

 

Published : 11 Jan 2020 10:02 AM
Last Updated : 11 Jan 2020 10:02 AM

குழந்தைகளுக்காக எழுதுவது எப்படி?

‘ஒரு வெள்ளை முயல், அக்கா. சட்டைப் பையிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்த்தபடி, ஐயோ நேரமாகிவிட்டதே என்று இதோ இந்தப் பக்கமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. இதென்ன அதிசயம் என்று முயல் பின்னால் ஓடினால் அது ஒரு குழிக்குள் காணாமல்போய்விட்டது. மறுநொடியே நானும் உள்ளே பாய்ந்துவிட்டேன். கீழே, கீழே, கீழே போய்க்கொண்டே இருந்தேன். உறங்கிவிட்டேனா, மயங்கிவிட்டேனா என்று தெரியவில்லை. கண் விழித்தால் புத்தம் புதிதாக ஓர் உலகம்.’

ஆலிஸ் தன் கதையைச் சொல்லத் தொடங்கும்போதே அவள் அக்கா பொறுமை இழந்துவிடுகிறாள். ‘நிறுத்து. நீ சொல்வது ஒன்றுகூட நம்பும்படியாக இல்லை. எல்லாமே கதை. வெறும் கனவு. இதையெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை, ஆலிஸ்’ என்கிறாள்.

குழந்தைகளுக்கு எழுதுவது என்றால் என்ன? அந்த எழுத்து எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கக் கூடாது? அதற்கென்று இலக்கணம் ஏதாவது இருக்கிறதா? எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்று ஏதேனும் பட்டியல் உள்ளதா? சிறந்த படைப்பை எப்படிக் கண்டறிவது? நான் சொல்கிறேன் என்று புன்னகையோடு ஆலிஸ் பதிலளிக்க ஆரம்பித்தாள். இனி வருபவை அவள் சொற்கள்.

‘எனக்கு லூயிஸ் கரோல் பிடிக்கும். அவர் எனக்காக ஓர் அதிசய உலகை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த உலகம் என்னில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஐயோ நேரமாகிவிட்டதே என்று பரபரப்போடு ஓடும் ஒரேயொரு முயலை உங்களால் உருவாக்க முடியும் என்றால் நீங்கள் எழுதுவது நல்ல எழுத்து என்பேன். அதெப்படி முயலிடம் கடிகாரம் இருக்கும், அது எப்படிப் பேசும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டு நிற்காமல், எல்லாவற்றையும் மறந்து உங்கள் முயல் பின்னால் என்னால் ஓடி ஓடிச் செல்ல முடியும் என்றால் உங்கள் எழுத்து உயிரோட்டமானது என்று அர்த்தம். உங்கள் முயலால் கவரப்பட்டு, நீங்கள் அமைத்திருக்கும் குழிக்குள், அது ஒரு குழி என்று தெரிந்தே கண்ணை மூடிக்கொண்டு பாய்கிறேன் என்றால் நான் உங்களை நம்ப ஆரம்பித்துவிட்டேன் என்று பொருள். இனி என்னால் உங்கள் கரங்களை நம்பிக்கையோடு பற்றிக்கொள்ள முடியும். ஆழ்கடல் முதல் ஆகாயம் வரை நீங்கள் எங்கே அழைத்துச்சென்றாலும் உங்களோடு என்னால் வர முடியும். எனக்காக நீங்கள் அளிக்கும் உலகில் என்னால் தொலைந்துபோக முடியும். லூயிஸ் கரோல் செய்தது அதைத்தான். உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பதும் அந்த ஒன்றைத்தான்.’

எனக்கு ஆலிஸ்தான் வழிகாட்டி. சொற்களிலிருந்து முயலை வரவழைக்கும் மாயத்தை எவர் நிகழ்த்துகிறாரோ அவரே என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல எழுத்தாளர். எந்த எழுத்து ஆலிஸுக்குப் பிடிக்கிறதோ அதுவே நல்ல எழுத்து. எந்தக் கதையை விட்டு வெளியில் வருவதற்கு ஆலிஸ் தயாராக இல்லையோ அது நல்ல கதை. நான் ஒருபோதும் குழந்தைகளுக்காக எழுதுவதில்லை. ஒரேயொரு ஆலிஸுக்காக எழுதுகிறேன். அந்த ஒரேயொரு ஆலிஸின் கண் பார்வையில் விழும்படி ஒரேயொரு முயல் குட்டியை உருவாக்கி ஓட முடியுமா என்று பார்க்கிறேன். அதை உருவாக்கிவிட முடியுமென்றால் எத்தனை பெரிய உலகையும் கட்டியமைத்துவிட முடியும்.

ஒரு நல்ல கதை ஆலிஸை ஈர்க்க வேண்டும் என்றால் ஒரு சிறந்த கதை, ‘நீ சொல்வது ஒன்றுகூட நம்பும்படியாக இல்லை’ என்று சலித்துக்கொள்ளும் ஆலிஸின் அக்காவை விழிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். இது இன்னமும் கடினமானது. அக்கா வளர்ந்தவர் என்பதால் அவர் கற்பனையை, கதையை, கனவை நம்பத் தயாராக இருக்க மாட்டார். ஒரு சிறந்த கதை அவருக்குள்ளிலிருந்து வெளிவர மறுக்கும் குழந்தையைக் கண்டறிந்து அந்தக் குழந்தையோடு உரையாடுகிறது.

எனில் எது இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது? அதோ ஒரு முயல் என்று ஆலிஸ் கூச்சலிடும்போது அதே உற்சாகத்தோடு அக்காவும் ஓடி ஓடிச் சென்று இருவரும் கரம் கோர்த்து குழிக்குள் பாய வேண்டும். காலத்தை வென்று, சிறியவர்கள் பெரியவர்கள் என்னும் வேறுபாட்டைக் கடந்து இந்தப் பாய்ச்சலை எது நிகழ்த்துகிறதோ அதுவே இலக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x