Published : 29 Dec 2019 09:24 AM
Last Updated : 29 Dec 2019 09:24 AM

வெண்ணிற நினைவுகள்: மதராஸைத் தாக்கிய ஜப்பான்

எஸ்.ராமகிருஷ்ணன்

இரண்டாம் உலகப் போரின் நடுவில் 1943 அக்டோபர் 11-ம் தேதி மதராஸ் மீது ஜப்பான் குண்டு வீசித் தாக்கியது. இதனால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலரும் மதராஸை விட்டு இடம்பெயர்ந்தார்கள். பல்லாயிரக்கணக்கில் சென்னை நகரத்தை விட்டு வெளியேறினார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனால், சாலைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் நிலையத்தில் தாங்க முடியாத கூட்டம். மின்சார விளக்குகள் செயல்படாத காரணத்தால் நகரமே இருண்டுபோனது. எங்கே மறுபடியும் ஜப்பானிய விமானங்கள் குண்டு போடுமோ எனப் பயந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறினார்கள். அலுவலகங்கள்கூட இடமாற்றம் செய்யப்பட்டன. நான்கைந்து குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து மாட்டுவண்டி, காரை ஏற்பாடு செய்து பயணம் கிளம்பினார்கள்.

இந்த நிகழ்வு குறித்து தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆனால், சென்னை நகரம் இரண்டாம் உலகப் போரில் என்ன பாதிப்புக்கு உள்ளானது என்பது குறித்து தனியாகப் புத்தகம் எதுவும் எழுதப்படவில்லை. மதராஸைத் தாக்குவதற்கு முன்பாக ஜப்பானிய ராணுவம் ஏப்ரல் 5-ம் தேதி, இலங்கையில் தாக்குதல் நடத்தியது. எழுபதுக்கும் மேற்பட்ட ஜப்பானிய விமானங்கள் தாக்குதலை நடத்தி குண்டுமழை பொழிந்தன. இந்த விமானத் தாக்குதலுக்குப் பயந்து இலங்கையிலிருந்தும் தமிழ் மக்கள் வெளியேறி தமிழகம் வந்துசேர்ந்தார்கள் என்கிறார்கள். மதராஸை மீண்டும் ஜப்பான் தாக்கலாம் என்பதால் ராணுவம் கடுமையான எச்சரிக்கைகளை அறிவித்தது. தினசரி அபாய ஒலி எழுப்பவும் செய்தது. ‘ஆல் கிளியர் சிக்னல்’ ஒலிக்கும் வரை மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

மதராஸ் மீது ஜப்பான் குண்டு வீசித் தாக்கிய நிகழ்வின் ஒரே சாட்சியமாக இருப்பது ஏவிஎம் தயாரிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம். ‘பராசக்தி’ படத்தில் விமானத் தாக்குதல் காரணமாக மதராஸுக்குச் சென்ற கப்பல்கள் கரைசேரவில்லை என்ற தகவல் சொல்லப்படுகிறது. 2015-ல் வெளியான ‘டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி’ என்ற வங்காளப் படம் கல்கத்தாவை ஜப்பானிய ராணுவம் தாக்கத் திட்டமிட்டிருந்த நிகழ்வை விவரிக்கிறது. இப்படி ஒன்றிரண்டு பதிவுகளே யுத்த காலத்தை நினைவூட்டுகின்றன.

‘அந்த நாள்’ படத்தில் சிவாஜி கணேசன் இந்தியாவின் ரகசியங்களை ஜப்பானுக்கு விற்கும் துரோகியாக ஆன்டிஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பண்டரிபாய் கதாநாயகி. படத்தின் கதையை எழுதியவர் ஜாவர் சீதாராமன். இயக்கியவர் எஸ்.பாலசந்தர். மிக அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எஸ்.மாருதி ராவ். இப்படத்தில் பாடல்களும் சண்டைக்காட்சிகளும் கிடையாது. முக்கியக் கதாபாத்திரமான சி.ஐ.டி.சிவானந்தம் பாத்திரத்தில் ஜாவர் சீதாராமன் நடித்திருக்கிறார்.

விக்டர் ஹியூகோவின் ‘லே மிஸரபிள்ஸ்’ என்ற பிரெஞ்சு நாவலைத் தமிழில் ‘ஏழை படும் பாடு’ என சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்திருக்கிறார். இவர்தான் ஷேக்ஸ்பியர் என்பதைத் தமிழில் செகப்பிரியர் என்று மொழியாக்கம்செய்தவர். 1950-ல் ‘ஏழை படும் பாடு’ நாவலைத் திரைப்படமாக்கினார்கள். அதில் ஜாவர்ட் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்தார் சீதாராமன். அதன் பிறகே அவரது பெயர் ஜாவர் சீதாராமன் ஆனது.

ஜாவர் சீதாராமன் நிறைய ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் கொண்டவர். ஆகவே, அவரைத் தனது கதை விவாதத்துக்கு எஸ்.பாலசந்தர் அழைத்துக்கொண்டார். அப்படித் தொடங்கிய நட்புதான் ஜாவரைத் திரைப்பட வசனகர்த்தாவாக்கியது. ஏ.வி.எம். தயாரித்த ‘களத்தூர் கண்ணம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘ராமு’ முதலிய படங்களுக்கு ஜாவர் சீதாராமன்தான் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார். ‘பிராஸ் பாட்டில்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி இவர் உருவாக்கியதே ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம்.

‘அந்த நாள்’ படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடைபெறுகிறது. யார் கொன்றார்கள் என்பதைப் பல கோணங்களில் படம் விவரிக்கிறது. அந்த வகையில் இது அகிரா குரசோவாவின் ‘ரஷோமோன்’ பாணியைக் கொண்டிருக்கிறது. ஆனால், அகிரா குரசோவா முன்வைத்த விஷயமும், ‘அந்த நாள்’ படத்தின் களமும் வேறுவேறானது. ‘தி வுமன் இன் கொஸ்டீன்’ என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில்தான் இப்படம் உருவாக்கப்பட்டது என்று திரை விமர்சகர் ராண்டர்கை குறிப்பிடுகிறார்.

‘அந்த நாள்’ படத்தின் தொடக்கக் காட்சியிலே மதராஸ் மீது ஜப்பான் குண்டு வீசித் தாக்கியது குறிப்பிடப்படுகிறது. அத்தோடு கொலையை விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரியும் நகரை விட்டு அவர்கள் வெளியேறிப் போகக் கூடாது எனத் தடுக்கிறார். நாங்கள் இங்கேயே இருந்து குண்டுவீச்சில் சாக வேண்டுமா என ஹேமா கதாபாத்திரம் கோபித்துக்கொள்கிறது.

ரேடியோ என்ஜினியரான ராஜன் முப்பது ரூபாய் செலவில் ரேடியோ தயாரிக்க முயல்கிறான். வீட்டுக்கு ஒரு ரேடியோ வழங்க வேண்டும் என்பதே அவனது கனவு. ஆனால், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. ஆகவே, தன்னை மதிக்காதவர்களைப் பழிவாங்கும் விதமாக மதராஸின் வரைபடத்தை ஜப்பானிய ராணுவத்துக்குத் தர முன்வருகிறான். ஜப்பானிய ரேடியோ ஒலிபரப்பில் மதராஸின் மீது குண்டு போடப்படும் செய்தி தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதலின் சேதம் குறித்து ராஜன் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். தேசபக்தி மிகுந்த அவனது மனைவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் ராஜனுடன் போராடுகிறாள். சண்டைபோடுகிறாள்.

‘அந்த நாள்’ திரைப்படம் 17 நாட்களில் படமாக்கப்பட்டது. 1954 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்டபோதும் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால், இப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் தமிழின் இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய விமானம் மெட்ராஸின் மீது வீசிய குண்டின் மிச்சம் இப்போதும் சென்னை மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. சினிமா பார்த்த கையோடு அதையும் ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்பேன். நூறு நாட்கள் ஒடி வசூலில் சாதனை செய்த எத்தனையோ படங்கள் காலத்தில் மறைந்துபோய்விட்டன. ஆனால், இன்றும் ‘அந்த நாள்’ திரைப்படம் முக்கியமான வரலாற்று ஆவணமாகக் கொண்டாடப்படுகிறது. அதுதான் சிறந்த திரைப்படத்தின் அடையாளம்.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x