Published : 15 Dec 2019 10:03 AM
Last Updated : 15 Dec 2019 10:03 AM

வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்

எஸ்.ராமகிருஷ்ணன்

பெர்ஷியாவின் புகழ்பெற்ற கதைத்தொகுப்பான ஆயிரத்தொரு இரவுகளில்தான் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதை இடம் பெற்றிருக்கிறது. எனது பள்ளி நாட்களில் இப்படம் பார்த்த பாதிப்பில் கோவில்பட்டியின் கதிரேசன் மலைக்குப் பின்னுள்ள புலிக்குகையின் முன்பாகச் சிறுவர்கள் ஒன்றுகூடி ‘அண்டா காகசம், அபு காகசம், திறந்திடு சீசேம்’ என்று கத்தியிருக்கிறோம். ஒரு மந்திரச்சொல்லைக் கற்றுக்கொள்வதிலும் அதைப் பயன்படுத்துவதிலும் சிறுவர்களுக்கு உள்ள மகிழ்ச்சி அளப்பரியது. ஆனால், படத்தில் வருவதுபோல குகையின் கதவு திறக்கவில்லை. காரணம், குகைக்குக் கதவுகளே இல்லை என்பதுதான்.

திருடர்கள் முன்புபோல குகையில் வசிப்பதில்லை. இப்போது நம்மோடு ஒன்றாக நகருக்குள்தானே வசிக்கிறார்கள். நாற்பது என்றிருந்த திருடர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் மடங்கு பெருகியிருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய செய்தி. திருடர்களிடம் திருடுகிற நாயகனைப் பற்றிய கதை சினிமாவில் எப்போதும் வெற்றியடையக்கூடியது. இன்று வரை அதுபோன்ற கதைகள் திரும்பத் திரும்பப் படமாக்கப்பட்டுக்​கொண்டேவருகின்றன. ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ ஓர் சிறந்த உதாரணம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளே அதிகம் திரைப்படமாக்கப்​பட்டிருக்​கின்றன. எங்கோ அரபு தேசத்தில் சொல்லப்​பட்ட ஆயிரத்தோரு இரவுகள் கதைத் தொகுப்பி​லிருந்து தமிழில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ மட்டுமல்ல; ‘பாக்தாத் திருடன்’, ‘பாக்தாத் பேரழகி’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போன்ற பல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாக்தாத் நகரம் பற்றியோ, அரபுப் பண்பாடு பற்றியோ எதுவும் அறிந்திராதபோதும் தமிழ் மக்கள் இப்படங்களைக் கொண்​டாட​வே செய்தார்கள். அதுதான் சினிமாவின் அதிசயம்.

இன்று ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு பாக்தாத் நகரை அழித்துச் சிதைத்துவிட்டது. ஒரு நகரை யுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால், கதைகளின் வழியே பதிவான அதன் நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதன் அடையாளமே பாக்தாத். பாக்தாத் படங்களைக் கொண்டாடிய தமிழ் மக்கள் ஏன் பாக்தாத்தின் சமகால அரசியல் மற்றும் யுத்தம் பற்றிக் கவனமே கொள்ளவில்லை?

1956-ல் மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர், பானுமதி நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம்தான் தமிழின் முதல் வண்ணப்படம். இதே படம் 1941-ல் கறுப்புவெள்ளையிலும் உருவாக்கப்பட்டிருக்​கிறது. அப்போது அலிபாபாவாக நடித்தவர்
என்.எஸ்.கிருஷ்ணன். அலிபாபா கதைக்கும் திரைப்படத்துக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன. கதையில் அலிபாபா திருமணம் செய்துகொண்டவன். மார்சியானா ஒரு அடிமைப்பெண். திருடர்கள் குகையின் முன்பாக அலிபாபா நின்றுகொண்டு, ‘திறந்திடு சீசேம்’ என்றுதான் சொல்கிறான். அதுதான் உலகின் முதல் பாஸ்வேர்ட் என்று நினைக்கிறேன்.

அலிபாபா திருடிய தங்கத்தை எடைபோட்டுப் பார்க்க சகோதரன் வீட்டில் தராசு இரவல் வாங்குகிறான். தராசில் மெழுகை ஒட்டவைத்து அவனது அண்ணி தங்கக் காசுகளை எடைபோட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறாள். இதுவெல்லாம் படத்தில் கிடையாது. கதையில் கொள்ளையன் அபு ஹுசைன் முன்னால் மார்சி​யானா வாள் ஏந்தி நடனமாடி தந்திரமாக அவனைக் கொல்​கிறாள். இதனால், அவளுக்கே தனது மகனைத் திருமணம் செய்து வைக்கிறான் அலிபாபா. இப்படித்தான் அராபிய இரவுக் கதைகளில் வருகிறது. ஆனால், படத்துக்காகச் செய்த மாற்றங்களில் முக்கிய​மானது. மார்சியானாவை அலிபாபாவின் காதலியாக்கியது.

‘மாசிலா உண்மைக் காதலே’ பாடல் மிக இனிமையானது. ஏ.எம்.இராஜா - பி.பானுமதி பாடிய இப்பாடலை எழுதியவர் கவிஞர் அ.மருதகாசி, இசை எஸ்.தெட்சிணாமூர்த்தி. பானுமதி சிறந்த நடிகை மட்டுமல்ல; அவர் ஒரு எழுத்தாளரும்கூட. சிறந்த சிறுகதைகளை எழுதியதற்காக ஆந்திர சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார். அவரே படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தின் உடையலங்காரம் சிறப்பானது. குறிப்பாக, இப்பாடலில் பானுமதி அணிந்துள்ள ஆடையும் அவரது தலையலங்காரமும் அணிந்திருக்கும் நகைகளும் அவரது கண்ணசைவும் அபாரம். அலிபாபா படத்தின் சலாம் பாபு பாடலில் நடனமாடுகின்ற பெண்களில் ஒருத்தியாக ஹிந்தி சினிமாவின் தாரகை வஹிதா ரஹ்மான் ஆடியிருக்கிறார். அவர் ஹிந்தி சினிமாவில் அங்கீகாரம் பெறாத காலமது. இந்தப் படத்தில் தங்கவேலு குலாம், செருப்பு தைக்கும் தொழிலாளியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். திருடர் குகையில் அகப்பட்டுக்கொண்ட காசிம், பிணத்தைத் தைத்துக் கொடுத்துப் பணம் பெற்ற பிறகு அவர் சந்தோஷத்தின் மிகுதியில் ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், தய்யடா தய்யடா தய்யடா, நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா...’ என ஆடிப்பாடும் பாடல் மறக்க முடியாதது.

ஆயிரத்தோரு இரவுகளின் அலிபாபா கதை எப்படி தமிழ் சினிமாவுக்கு வந்தது? இந்நூலின் முதல் மொழிபெயர்ப்பு 1704-ல் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. அந்தோனி கல்லேன்டு இதை மொழியாக்கம் செய்திருந்தார். இதன் பிறகு, ரிச்சர்ட் பர்ட்ன் மொழிபெயர்ப்பில் ஆயிரத்தோரு இரவுகள் 1885-ல் ஆங்கிலத்தில் வெளியானது. அதன் பிறகே உலகெங்கும் அராபிய இரவுகளின் மீது கவனம் குவிய ஆரம்பித்தது. மௌனப்படங்கள் காலத்தில் 1902-லேயே அலிபாபா திரைப்படமாக்கபட்டுவிட்டது. அதன் பிறகு, 1937-ல் வங்காளத்தில் இப்படத்தை உருவாக்கினார்கள். 1942-ல் ஆங்கிலத்திலும் 1954-ல் ஹிந்தியிலும் உருவாக்கப்பட்டு பெரும் வெற்றி​யடைந்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழில் 1956-ல் மார்டன் தியேட்டர்ஸ் இப்படத்தை உருவாக்கியிருக்​கிறார்கள்.

படத்தில் வரும் கொள்ளையன் அபு ஹுசைன் எண்ணெய் வணிகன்போலவே நகரினுள் வருகிறான். அமெரிக்க நடத்திய ஈராக் யுத்தத்தின் பின்னால் இருப்பதும் எண்ணெய் வணிகத்தின் ஏகபோகமே. அலிபாபா இன்று ஒரு குறியீடாக உருமாறியிருக்கிறான். அலிபாபாவின் வெற்றிக்கு, வில்லனாக நடித்த பி.எஸ்.வீரப்பாவின் பங்கும் முக்கியமானது. அன்று அலிபாபா போல இன்னொரு கலாச்சாரத்தை, வாழ்க்கையை விவரிக்கும் ஒரு தமிழ்ப் படத்தை எடுத்து வெற்றியடையச் செய்ய முடிந்திருக்கிறது. ஆனால், பிஜி தீவின் கரும்புத் தோட்டத்துக்கு அடிமையாகப்போன தமிழர்களின் வாழ்க்கை பற்றியோ, ஆப்பிரிக்காவுக்குக் கூலிகளாகப்போன தமிழ் மக்கள் பற்றியோ, பிரெஞ்சு கயானா தமிழ் மக்கள் பற்றியோ, உலகெங்கும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்களின் துயர வாழ்க்கை பற்றியோ தமிழ்ப் படங்கள் உருவாக்கப்படவில்லை.

கதையில்லை, கதையில்லை என்று தமிழ் சினிமா எத்தனை காலத்துக்குத்தான் கதைவிடுவார்களோ தெரிய​வில்லை.
- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x