Published : 29 Sep 2019 10:20 AM
Last Updated : 29 Sep 2019 10:20 AM

கைக்குள் அடங்கும் காந்திய நூலகம்

கவனகன்

காங்கிரஸ் இயக்கத்தை அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்த காந்தி, உறுப்பினர் சந்தாவை நாலணா என்று நிர்ணயித்தார். காந்தியை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் விதமாக தேசிய காந்தி அருங்காட்சியகமும் அதேபோல ஒரு முடிவை எடுத்திருக்கிறது. காந்தியைப் பற்றிய அறிமுகங்களையும் ஆவணங்களையும் கொண்ட ஊடகத் தொகுப்பை ரூ.100 விலையில் விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது.

காந்தியின் புத்தகங்கள், காந்தியைப் பற்றிய புத்தகங்கள், ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம், காந்தியும் அவரது ஆசிரமங்களும் பற்றிய காணொலி, காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் 100 புகைப்படங்கள், காந்தி ஆற்றிய உரைகளின் ஒலித் தொகுப்பு ஆகியவற்றுடன் காந்திக்குப் பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதோ போன்ற பாடல்களும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

இருமொழிகளிலும் மின்னூல்கள்

தேசியக் கட்டுமானம், சமூக ஒற்றுமை, கடவுள், சமயம், கீதை, ராமாயணம், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, உணவு, மருத்துவம் ஆகியவை தொடர்பாக காந்தி எழுதிய, பேசிய கருத்துகளின் தொகுப்புகளாக வெளிவந்த 30 ஆங்கில நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘சத்திய சோதனை’ என்ற தலைப்பில் காந்தி எழுதிய சுயசரிதையும், அவரது பிரபலமான புத்தகங்களில் ஒன்றான ‘இந்திய சுயராஜ்ஜியம்’ ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அடங்கியுள்ளன. கிருஷ்ண கிருபளானி, ராய் வாக்கர் ஆகியோர் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் உள்ளன. காந்தியின் வாழ்க்கையை மாற்றியமைத்த ரஸ்னின் எழுதிய ‘அன்டூ திஸ் லாஸ்ட்’ (கடையனுக்கும் கடைத்தேற்றம்) நூல், காந்தியின் முன்னுரையுடன் இடம்பெற்றுள்ளது.
தமிழில் 19 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ரா.வேங்கடராஜுலு மொழிபெயர்ப்பில் வெளியான ‘சத்திய சோதனை’யும் ‘ஆரோக்கியத் திறவுகோல்’, ‘இந்திய சுயராஜ்ஜியம்’, ‘கிராம சுயராஜ்ஜியம்’, ‘சத்தியாகிரகம்’, ‘சமூகத்தில் பெண்கள்’, ‘சர்வோதயம்’, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’, ‘நிர்மாணத் திட்டம்’, ‘பெண்களுக்கு’ ஆகிய தலைப்புகளில் மதுரை காந்திய இலக்கியச் சங்கம் வெளியிட்ட புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழில் காந்தியைப் பற்றி நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் வெளிவந்த எட்டு புத்தகங்கள் இத்தொகுப்பின் மிக முக்கியமான அம்சம்.

சென்னை காந்தி கல்வி நிலையத்தின் நிறுவனர் டி.டி.திருமலை எழுதிய ‘காந்தி’, எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து வெ.சாமிநாத சர்மா மொழிபெயர்த்த ‘மகாத்மா காந்தி’, வின்சென்ட் ஷீன் எழுதி சி.சிவசாமி மொழிபெயர்த்த ‘மகாத்மா காந்தி’, திரு.வி.க. எழுதிய ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, கல்கி எழுதிய ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’, ரொமெய்ன் ரோலந்து எழுதி ஜெயகாந்தன் மொழிபெயர்த்த ‘வாழ்விக்க வந்த மகாத்மா’, மா.பா.குருசாமி எழுதிய ‘காந்தியுகம்’ ஆகிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் காந்தியை வெவ்வேறு கோணங்களிலிருந்து அறிமுகப்படுத்துபவை.

பல்துறை அறிஞர்களின் பார்வையில்...

குறிப்பாக, எஸ்.ராதாகிருஷ்ணனின் தொகுப்பு காந்தி உயிருடன் இருந்தபோதே 1939-ல் அவரது 70-வது பிறந்த நாளையொட்டி வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை பர்மாவில் இருந்த தமிழர்கள் உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றனர். அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன், குழந்தை வளர்ப்பியல் அறிஞர் மேரியா மாண்டிசோரி, வரலாற்றாசிரியர் எச்.ஜி.வுட், நுண்கலை அறிஞர் ஆனந்த குமாரசாமி என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்துறை ஆளுமைகளும் இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீதாராமையா முதலான ஆளுமைகளும் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காந்தியைக் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

அ.ராமசாமி எழுதிய ‘தமிழ்நாட்டில் காந்தி’ புத்தகமும் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க காலகட்டத்திலிருந்தே தமிழகத்துக்கும் காந்திக்கும் இருந்துவந்த நெருக்கத்தைப் படம்பிடிக்கும் இந்த மின்னூலில் அ.ராமசாமியின் பெயர் ஏனோ விடுபட்டிருக்கிறது.

உலகம் சுற்றிய தமிழர்

ஏ.கே.செட்டியாரின் 15 ஆண்டு கால உழைப்பிலும், ஒரு லட்சம் மைல்களுக்கு மேற்பட்ட அவரது பயணத்திலும் நான்கு கண்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட படச்சுருள்களிலிருந்து எடித் மார்டின் தயாரித்த காந்தியைப் பற்றிய ஆவணப்படத்தின் தமிழ் வடிவம் இத்தொகுப்பின் குறிப்பிட்டத்தக்க மற்றொரு அம்சம். காந்தியின் இளமைப்பருவம், அவருடைய தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தைப் பற்றிய காணொலிப் பதிவுகள் இந்தப் படத்தில் இல்லை என்றாலும் கருப்பு-வெள்ளைக் காணொலியில் காந்தியைக் காணும் அனுபவம் நம்மை சுதந்திரப் போராட்டக் காலத்துக்கே அழைத்துச்சென்றுவிடுகிறது.
‘காந்தியும் அவரது ஆசிரமங்களும்’ என்ற தலைப்பிலான காணொலி தென்னாப்பிரிக்காவின் ஃபீனிக்ஸ் பண்ணை, டால்ஸ்டாய் பண்ணை ஆகியவற்றைப் பற்றியும் கோச்ரப் ஆசிரமம், சபர்மதி ஆசிரமம், சேவாகிராமம் ஆகியவற்றைப் பற்றியும் அறிமுகத்தை வழங்குகிறது.

காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் வகைலும் புகைப்படக் காட்சிக்கு ஏற்ற வகையிலும் காந்தியின் 100 புகைப்படங்களின் தொகுப்பும் குறிப்புகளோடு இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. காந்தியின் புத்தகங்கள், புகைப்படங்கள், ஆவணப்படங்கள், குரல் பதிவுகள், பக்திப் பாடல்கள் என்று ஒரு குட்டி நூலகத்தையே நமது கைக்கு வெறும் ரூ.100-க்குத் தருகிறது தேசிய காந்தி அருங்காட்சியகம். ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் காந்தியை அடுத்தத் தலைமுறையிடம் எடுத்துச்செல்லும் தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அ.அண்ணாமலையின் முயற்சி பாராட்டுக்குரியது.

காந்தி 150: மகாத்மா காந்தியின்
அரிய பல்லூடகத் தொகுப்பு
தேசிய காந்தி அருட்காட்சியகம்
புதுடெல்லி-110002
99529 52686, 99108 03676
நேரடியாகப் பெற: ரூ.100
அஞ்சலில் பெற: ரூ.200

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x