Published : 24 Aug 2019 09:45 AM
Last Updated : 24 Aug 2019 09:45 AM

வேனல்: சிக்கலான நவீன ஓவியம்! 

வேனல்
கலாப்ரியா
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை-83.
விலை: ரூ.460
044 – 24896979

கலாப்ரியா 1970, 1980-களில் வெளியிட்ட ‘வெள்ளம்’, ‘தீர்த்தயாத்திரை’, ‘மற்றாங்கே’, ‘சுயம்வரம் மற்றும் கவிதைகள்’, ‘எட்டயபுரம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் தமிழ்க் கவிதை மரபில் புதிய சாத்தியங்களை உருவாக்கின. இலக்கியத்துக்குள் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகள் கழித்து கலாப்ரியா எழுதிய முதல் நாவல் ‘வேனல்’. எனினும், உரைநடை எழுத்துக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட கரங்கள். கலாப்ரியா மூலம் அறிமுகமான திருநெல்வேலி என்ற கதைக்களம், இந்நாவலில் பேருரு கொண்டிருக்கிறது. பிள்ளைமார் சமூகத்தின் மதிப்புமிகுந்த குடும்பமாகிய கொட்டகை வீட்டின் மூன்று தலைமுறையினர் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் இந்நாவல் பேசுகிறது.

எந்நிலையிலும் குடும்பம் என்ற அமைப்பின் சிக்கலான வடிவத்துக்குள் பெண்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறார்கள் என்பதே நாவலின் அடிநாதமாக ஒலிக்கிறது. கொட்டகை வீட்டுக் குடும்பத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; சினிமாவின் அசுர வளர்ச்சியும் அதன் தாக்கங்களும் கீழ்மத்தியதரக் குடும்பத்தினரின், குறிப்பாகப் பெண்களின் மீது செலுத்தத் தொடங்கிய ஆதிக்கமும், சினிமாவின் வருகையால் வீழ்ந்த நாடகக் கலையும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நலிவும், திராவிடக் கட்சிகளின் உதயமும், அது மத்தியதரக் குடும்பத்து இளைஞர்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களும் நாவலின் ஓட்டத்தில் இழையோடுகின்றன. எல்லாவற்றுக்கும் வேனல் காலம் மௌன சாட்சியமாக நிற்கிறது. போலவே, நாவலில் பதிவாகியிருக்கும் அந்தக் காலகட்டத்துக்குரிய சினிமா, அரசியல் சார்ந்த விஷயங்களெல்லாம் வாசகருக்கு ஒரு காலகட்ட ரசனைகளையும் வாழ்க்கை முறையையும் இயல்பாகக் கடத்துவதாக இருக்கிறது. இதுவரை புனைவுலகு கண்ட திருநெல்வேலி வாழ்க்கையையும் வட்டாரப் பேச்சுக்களையும் சொலவடைகளையும் இந்நாவல் விஞ்சிவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது.

இந்நாவலின் பலமாகப் பெண் பாத்திரப் படைப்புகளைச் சொல்லலாம். அவர்களின் கண்ணீரும் குமுறல்களும் மிகக் காத்திரமாகப் பதிவாகியிருக்கின்றன. கொட்டகை வீட்டுப் பெண்களான உலகு ஆச்சி, சங்கரபாகம், சிவஞானத்தாச்சி, மீனா, பார்வதி, மலையாள மருமகள் சாந்தா, பக்கத்து வீட்டு பாலம்மா, சீரங்கத்தா, பணிப் பெண்களான தாயம்மா, ஆவுடை, மூக்கம்மா, உமையா என அத்தனை பேரும் சுயமரியாதை கொண்டவர்களாக மிளிர்கிறார்கள். இருப்பினும், அனைத்துக்கும் ஒரு மறைமுக எல்லை உண்டு. அந்த எல்லைக்கோட்டைப் பெண் எனும் உயிர் வலியுடனேயே எதிர்கொள்கிறது. அவற்றில் மீனாவும் பார்வதியும் நிதர்சன உதாரணங்கள். அதேநேரம், கடை குமாஸ்தா வெங்கு அண்ணாச்சியின் மனைவி உமையாளோ பரிபூரண சுதந்திரம் கொண்டவளாக உலாவருகிறாள். உயர்வர்க்கத்தினரின் சமூக அந்தஸ்தானது பெண் மூலம் கட்டமைக்கப்படுவதாகவும், கீழ்மத்தியதரக் குடும்பங்களில் அத்தகைய இறுக்கங்கள் சற்று தளர்ந்திருக்கின்றன என்பதாகவும் இதைக் கொள்ளலாம்.

தெய்வு மற்றும் அவனது நண்பன் குளத்து மணியின் வாழ்க்கைப் போக்கை நாடக உலகின் சரிவும் சினிமாவின் வரவும் மாற்றியமைக்கிறது. தெய்வு தன் குடும்ப வழமைப்படி வியாபாரத்துக்கு வந்துவிட்டபோதும் அவனது மனமோ நாடக வாழ்வின் மீது தீரா மோகத்தில் இருக்கிறது. குளத்து மணிக்கோ தெய்வுவின் மனைவி சாந்தாவின் மீது மோகம். தெய்வுவின் அண்ணன் மகன் திரவியத்துக்கும் சாந்தாவின் மீது ஒரு கண். நாடக நடிகைதானே, அதுவும் மலையாளத்துப் பெண் என்கிற எண்ணம் அவனுக்கு. சாந்தாவை அநேகரும் இக்கண்ணோட்டத்துடனேயே நோக்கும்போது அதை அவள் கையாள்கிற விதம் அநாயாசம்.
ஆண்களின் தீராக் காம வேட்கையின் வெம்மையில் தம்மையே பலியிட்டுக்கொள்ளும் பெண்மை மீண்டும் முழு வீச்சுடன் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது. கொட்டகை வீட்டின் மருமகளான மீனா அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாக ஒளிர்கிறாள். அநேகப் பெண் பாத்திரங்கள் தற்சார்பும் நிர்வாகத் திறமையும் மனோ பலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இயல்பிலேயே தங்களது அகவலிமையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆணின் காமத்தைப் போலவே பெண்ணின் காமத்தையும் ‘வேனல்’ பதிவுசெய்திருக்கிறது. கணவனை இழந்த பாலம்மாவின் தனிமைக் காமம், கணவனால் கைவிடப்பட்ட விசாலத்தின் வீம்பான காமம், கைவிடப்பட்ட வெள்ளச்சியின் பழிவாங்கும் காம உணர்வுகளையெல்லாம் விரசமற்ற தொனியில் அப்பட்டமாக நாவல் முன்வைக்கிறது.

நம் முன்னால் முன்னும் பின்னுமாக விரவிக்கிடக்கும் வாழ்வின் ஒரு விள்ளலை ‘வேனல்’ பதிவுசெய்திருக்கிறது. நாவல் முற்றுப்பெறும் இடம்கூட ஒரு சங்கிலிபோல் சரடை விட்டுச்செல்கிறது. ஏராளமான கதை மாந்தர்கள், ஏராளமான சம்பவங்கள் என மாபெரும் படுதாவில் தீட்டப்பட்ட ஒரு சிக்கலான நவீன ஓவியம்தான் ‘வேனல்’. அந்த ஓவியக்கீற்று என்றென்றைக்கும் வாசகருக்குள் வெளிச்சமிடும்.

- நர்மதா குப்புசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x