Published : 10 Aug 2019 09:35 AM
Last Updated : 10 Aug 2019 09:35 AM

360: மன்னார்குடியில் புத்தகக்காட்சி

ஒற்றை வாக்கியத்துக்கு விருது கிடைக்குமா?

புத்தக உலகில் மிகவும் பிரபலமான பரிசான ‘மேன் புக்கர் பிரைஸ்’ தனது இறுதிப் பட்டியலை சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதில் மார்கரெட் அட்வுட், சல்மான் ருஷ்தி உள்ளிட்ட 13 எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பலரையும் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கும் நாவல் லூஸி எல்மேனுடையது. ‘டக்ஸ், நியூபரிபோர்ட்’ என்ற தலைப்பிலான இந்த நாவல் ஒரே ஒரு வரியை மட்டும் கொண்டது. ஆனால், அந்த வரி ஆயிரம் பக்கங்கள் நீள்வது என்பதுதான் இதில் விசேஷம். ஒரு இல்லத்தரசியின் மனவோட்டங்களை நனவோடை உத்தியில் லூஸி எழுதியிருக்கிறார். அக்டோபர் 14 அன்றைக்குத் தெரிந்துவிடும் லூஸியின் ஆயிரம் பக்க வரிக்கு பரிசு கிடைக்குமா, இல்லையா என்று!

மன்னார்குடியில் புத்தகக்காட்சி

தமிழ்நாட்டின் ஆயிரம் ஆண்டு பழமையான நகரங்களில் ஒன்றான மன்னார்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும், லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெறும் 10 நாட்கள் புத்தகக்காட்சி ஆகஸ்ட் 9 தொடங்கி 18 வரை நடைபெறுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயிலை ஒட்டிய வடக்கு வீதி ஏகேஎஸ் திருமண மஹாலில் நடைபெறவிருக்கும் இப்புத்தக்காட்சியைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்துகின்றன.

பத்து நாட்களும் மாலை 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், தொல்லியல் துறை ஆணையர் த.உதயசந்திரன், ஆன்மிகப் பெரியவர் பாலபிரஜாபதி அடிகளார், கல்வியுரிமைச் செயல்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, காவல் துறை அதிகாரி ஏ.கலியமூர்த்தி, ‘தீக்கதிர்’ ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், அமைச்சர் இரா.காமராஜ், முனைவர் இரா.காமராசு உள்ளிட்டோர் தினம் ஒருவர் என உரையாற்றுகின்றனர்.

அரங்கு எண் 5-ல் ‘இந்து தமிழ்’: நம்முடைய ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘தமிழ் திசை பதிப்பக’ நூல்கள் ஐந்தாம் எண் அரங்கில் கிடைக்கும். ‘மாபெரும் தமிழ்க் கனவு’ உள்ளிட்ட நம் பதிப்பக நூல்கள் அனைத்தும் 10% தள்ளுபடி விலையில் இங்கு கிடைக்கும்.

தக்கலையில் சிறுகதை முகாம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தக்கலை கிளையும், கவிஞர் எச்.ஜி.ரசூல் நினைவு அறக்கட்டளையும் இணைந்து சிறுகதை முகாம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். தக்கலையிலுள்ள சங்கமம் அரங்கத்தில் ஆகஸ்ட் 10, 11 ஆகிய இரு தினங்களும் சிறுகதையாடலில் திளைக்கலாம்.

ஆத்மாநாம் விருதுகள் - 2019

ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ மூலமாக 2015 முதல் அவரது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. ‘அக்காளின் எலும்புகள்’ கவிதைத் தொகுப்புக்காகக் கவிஞர் வெய்யிலுக்கும், பிராகிருத மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பான ‘காஹா சத்தசஈ’ நூலுக்காக சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் இணையருக்கும் 2019-க்கான ஆத்மாநாம் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அ.வெண்ணிலாவுக்கு ரங்கம்மாள் விருது

கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த தமிழ் நாவலுக்கு ‘ரங்கம்மாள் விருது’ வழங்கப்படுகிறது. 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த நாவலாக அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’ நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x