Last Updated : 23 May, 2015 12:00 PM

 

Published : 23 May 2015 12:00 PM
Last Updated : 23 May 2015 12:00 PM

மாமா - மாப்பிள்ளை உறவைச் சொல்கிறது வரலாறு - கோம்பை அன்வர் பேட்டி

தமிழ் முஸ்லிம்களின் வேர்களை அற்புதமாகப் பதிவு செய்த ஆவணப்படமான ‘யாதும்’, அதற்குரிய முதல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. ‘வேர்ல்டுஃபெஸ்ட் ஹூஸ்டன்’ சர்வதேசத் திரைப்பட விழாவில் வெண்கல ரெமி விருதை வென்றிருக்கிறது. விருது தந்த உற்சாகத்தில் இருக்கும் படத்தின் இயக்குநரும் வரலாற்று ஆய்வாளருமான கோம்பை அன்வரைச் சந்தித்தேன்.

படத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை இந்த விருது நீக்கியிருக்கிறதா?

இந்தப் படத்தை முஸ்லிம்களைவிடவும் அதிகம் கொண் டாடியது பொதுத் தமிழ்ச் சமூகம்தான். அதைவிடப் பெரிய சந்தோஷம் என்று எதையும் சொல்ல முடியாது. ஆனால், முஸ்லிம் சமூகம் இதைப் போதிய அளவுக்குக் கவனிக்கவில்லை என்ற வருத்தம் இப்போதும் உண்டு. இதற்கு முன் ‘சிறந்த ஆவணப்படம்’ எனும் விருதை தமுஎகச வழங்கிக் கவுரவித்தது.

காலங்காலமாகப் படையெடுப்புகள் மூலமாகவே இந்தியா வுக்குள் இஸ்லாம் பரவியது எனும் கூற்று நம்பப்பட்டு வரும் நிலையில், வணிகத் தொடர்புகள்தான் இஸ்லாம் பரவியதற்குக் காரணம் எனும் முடிவுக்கு வர எது ஆதாரமாக இருந்தது?

பொதுவாகவே, இந்தியாவில் இஸ்லாம் என்பது உருது முஸ்லிம்களை மையமாகக் கொண்டே பார்க்கப்படுகிறது. இதுதான் பிரச்சினை. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை ஒன்றிணைத்த ‘நறுமணப் பொருள் வணிக'த்தின் மையப் பகுதியாகத் தமிழகம் விளங்கியது. சேர நாட்டில் விளைந்த குறுமிளகுக்கும், பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்களுக்கும் மேற்குலகில் பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது.

இவ்வணிகத்தைப் பற்றி பல சங்கப் பாடல்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. கிரேக்க, ரோமானிய நாகரிகங்களுக்கெல்லாம் முன்னரே தமிழகத்துக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையே வணிக உறவுகள் இருந்திருக்கின்றன. இவ்வணிகர்கள் மூலமாகத்தான் இஸ்லாம் அரேபியாவில் மலர்ந்த சம காலத்திலேயே தமிழகத்தையும் வந்தடைந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாகவும், செப்புப் பட்டயங்களாகவும் நிறையக் கிடைக்கின்றன. வட இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆட்சியில் அமர்வதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே நடந்தவை இவை.

பொதுவாக அறியப்பட்ட வரலாற்றுக்கும் இப்படிக் கள ஆய்வின் மூலம் பதியப்படும் வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு?

உண்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்று இதைச் சொல்லலாம். ஏனென்றால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழி, கலாச்சாரம் கொண்ட முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். நமக்குப் படிக்கக் கிடைப்பது என்னவோ முஸ்லிம் ஆட்சியாளர்கள் குறித்த பதிவுகள்தான். அதுவும் காலனியவாதிகளால் இந்திய சமூகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும், பிரித்தாளும் சூழ்ச்சியுடனும் எழுதப்பட்ட வரலாற்றை இன்றளவும் பெரும் கேள்விகள் ஏதும் இன்றி அப்படியே தான் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

அதனால், இந்திய இஸ்லாமியர்குறித்து ஒரு தவறான புரிதல்களோடுதான் நமது சமூகம் பயணிக்கிறது. இந்திய இஸ்லாமிய சமூகம் மட்டுமன்றி இந்தியச் சமூகம் எதிர் கொள்ளும் பல சிக்கல்களுக்கு இது முக்கியக் காரணம். மீள்ஆய்வு காலத்தின் கட்டாயம்.

உங்கள் ஆவணப்படத்தில் திராவிடக் கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கிக் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தொடர்பான பதிவுகள் ஆச்சரியமளித்தன...

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், தமிழ் இலக்கியத் துக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு மிகப் பெரியது என்பது. பல கடவுள்களைப் பாடி பிள்ளைத்தமிழ் பாடும் மரபுக்குப் பதிலாக, அல்லா ஒருவனை மட்டுமே புகழ்ந்து பாடிவிட்டு, பிள்ளைத் தமிழ் பாடுவது என்று இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையோடு தமிழ் முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்தை வடிவமைத்துக்கொண்டனர். அதே போல்தான் பள்ளிவாசல்களும், திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி இங்கு கட்டப்பட்டிருக்கின்றன.

தொடக்கக் காலம் முதலே இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே நெருக்கமான நல்லுறவு இருந்ததாகப் படம் சொல்கிறது...

உண்மையில் நாமெல்லாம் ஆச்சரியப்படும் வகையிலான உறவு, ‘மாமா - மாப்பிள்ளை’ என்று வெறும் வார்த்தை அளவில் மட்டும் அல்லாமல், உண்மையாகவே அப்படி உறவாடும் ஓர் உறவு ஆரம்பத்திலிருந்தே நம்முடைய முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. குடும்ப உறவுகளைப் போலவே எத்தனையோ கோயில்கள், பள்ளிவாசல்கள் விழாக்களிலும் பரஸ்பரம் மாற்று மதத்தினருக்கு முக்கியமான பங்களிப்பு இருந்திருக்கிறது. இன்றைக்கெல்லாம் மதச்சார்பின்மைபற்றிப் பீற்றிக்கொள்பவர்களே வெட்கப்படும் அளவுக்கு அவர்கள் உண்மையாக உறவாடியிருக்கிறார்கள்.

வேர்களைத் தேடிச் செல்லும் உங்களுடைய இந்தப் பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்று சொல்கிறீர்கள்...

ஆமாம். எனது முழு வேர்களையும் நான் கண்டறிய வேண்டும் என்றால், இன்னும் நான் நிறையப் பயணிக்க வேண்டும். தமிழ் முஸ்லிம்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் கடல் கடந்த தமிழ்ச் சமூகம் பற்றியதாக என்னுடைய அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்ள விரும்புகிறேன். தென் கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை என்று நம்முடைய முன்னோர் சென்ற பல இடங்களுக்கும் பயணித்துப் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆனால், இதற்கான பொருளாதார ஆதரவு இல்லாதது பல காரியங்களை முடக்கிப்போடுகிறது.

தொடர்புக்கு: மீடியா கோம்பை,
பிளாட் எண்: 5-பி, ஓனர்ஸ் கோர்ட்,
மான்ட்டியத் சாலை, எழும்பூர்,
சென்னை - 600 008.
அலைபேசி: 9444077171,
>http://yaadhum.com

- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x