Published : 30 May 2015 09:58 am

Updated : 30 May 2015 09:58 am

 

Published : 30 May 2015 09:58 AM
Last Updated : 30 May 2015 09:58 AM

சி.டி. ராஜகாந்தம்: திரை வரலாற்றின் ஒரு பகுதி

எம்.ஜி.ஆரால் ‘ஆண்டவனே’ என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகை கையால் தயாரிக்கப்பட்ட வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட தியாகராஜ பாகவதர் மரணப் படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘தில்லானா மோகனாம் பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழம்பெரும் நகைச்சுவை நடிகை சி.டி. ராஜகாந்தம்தான் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான ‘சபாபதி’ (1941) படத்தில் காளி என். ரத்தினத்தின் ஜோடியாக வேலைக்காரியாக நடித்ததன் மூலம் திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர் இவர்.

கோயம்புத்தூர் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலினுக்கு 1997-ல் அவர் அளித்த பேட்டியின் எழுத்துவடிவமாக இப்புத்தகம் வெளியாகி யிருக்கிறது. வெறும் 55 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், அறியப்படாத பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அந்தக் கால நாடக சபாக்களிலும், திரைப்பட ஸ்டுடியோக்களிலும் இருந்த திண்ணைத் தூண்களை ஓடிப்பிடித்து விளையாடும் உணர்வு ஏற்படும்.

ஒரு ரூபாய் சம்பளம்

கோவையில் பிறந்த ராஜகாந்தம், அந்தக் காலத்திலேயே 8-ம் வகுப்பு வரை படித்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகி விட்டது. 3 மாத சிசுவை வயிற்றில் சுமந்தபோது, அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரையும், அவரது குழந்தையையும் காப்பாற்றியது இசைதான். பள்ளியில் கற்றுக்கொண்ட இசைப் பாடலைப் பக்கத்து வீட்டுக்காரரின் ஆர்மோனியப் பெட்டியை வைத்து நாடக சபா தொடர்புள்ள ஒருவரிடம் பாடிக்காட்டினார் ராஜகாந்தம். அதைத் தொடர்ந்து கள்ளிக்கோட்டையில் உள்ள எஸ்.ஆர். ஜானகியம்மா நாடக சபாவில் இடம் கிடைத்தது. வாரம் 3 நாடகங்களில் பாடி நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அப்போது ஒவ்வொரு நாடகத்துக்கும் அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு ரூபாய்தான்.

அதே ராஜகாந்தம் பின்னாளில் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்தச் சமயம் எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரையும் குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்து காலை முதல் இரவு வரை உணவளித்து உபசரித்தவர் ராஜகாந்தம். இந்தத் தகவலை ஆனந்த விகடனில் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

தெரு முழுக்கப் பந்தல் போட்டு தனது மகள் ராஜலட்சுமிக்கு பாடகர் திருச்சி லோகநாதனைத் திருமணம் செய்து வைத்தது, ஏழிசை மன்னர் தியாக ராஜ பாகவதர் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் தடபுடல் விருந்துடன் அந்தத் திருமணம் 5 நாட்கள் நடந்தது, அதில் கே.பி. சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி, தண்ட பாணி தேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் என புகழின் உச்சத்திலிருந்த திரைக் கலைஞர்களெல்லாம் பங்கேற்றது என்று பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராஜகாந்தம்.

எம்.ஜி.ஆருக்குக் கடிகாரம்

எம்.ஜி.ஆரின் கல்லறைக்குள்ளிருந்து அவர் கட்டியிருக்கும் கடிகாரத்தின் ஒலி கேட்பதாகக் கல்லறை மீது காதுவைத்து கேட்பவர்கள் இன்றும் உண்டு. என்றும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் எனும் காலத்தின் குறியீடாகவே மாறிவிட்ட எம்.ஜி.ஆர். தனது வாழ்நாளில் முதலில் கட்டியது ராஜகாந்தம் பரிசளித்த கைக்கடிகாரத்தைத்தான். ஒரு முறை கல்கத்தாவில் படப்பிடிப்பில் ராஜகாந்தம் இருந்தபோது, சென்னையில் இருந்த எம்.ஜி.ஆர். தனது பொருளதார நிலைகுறித்துக் குறிப்பிட்டு, ‘கல்கத்தாவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கும் அண்ணன் சக்ரபாணிக்கும் இரண்டு நல்ல கைக்கடிகாரங்கள் வாங்கி வாருங்கள்’ என்று கடிதம் எழுதியிருந்தாராம். அவர்கள் இருவருக்கும் அழகான கைக்கடிகாரங்களை வாங்கிப் பரிசளித்தாராம் ராஜ காந்தம். இந்தத் தகவல்களைத் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டி.எல். மகாராஜன். ராஜகாந்தத்தின் மகள் வயிற்றுப் பேரன்கள்தான் இவரும் தீபன் சக்கர வர்த்தியும்.

புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஸ்டாலின், ஏற்கெனவே திரை இசைவானில் என பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரை வானொலிக்காகப் பேட்டி கண்டதைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது அப்புத்தகம். அதைத் தொடர்ந்தே தற்போது இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆவணப் படுத்துவதற்குக் கடலளவு இருந்தாலும் ஆவணப் படுத்தப்பட்டிருப்பது தினையளவே. அந்த வகையில் இதுபோன்ற ஆவணங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த நாள் ஞாபகம்: கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்

பக்கங்கள்: 55, விலை: ரூ. 100

என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், உடுமலைப்பேட்டை 642 128

அலைபேசி: 93622 11949

- கா.சு. வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சி.டி. ராஜகாந்தம்திரை வரலாறுஎம்.ஜி.ஆர்கைக்கடிகாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author