Last Updated : 17 May, 2015 04:21 PM

 

Published : 17 May 2015 04:21 PM
Last Updated : 17 May 2015 04:21 PM

சித்திர மொழியின் கதை

ஓவியம், சித்திரம், படம், கிளவி, எழுத்து போன்ற தொடர்புடைய சொற்கள் பழந்தமிழ் நூல்களில் கிடைக்கின்றன. சித்திரம் எழுதுவோர் தாம் எழுதியதை தம் தொழிலை நோக்கினார் கண்ணிடத்தே நிறுத்துதலின் கண்ணுள் வினைஞர் என மதுரைக்காஞ்சியும் ஓவியர் தம் கலையில் நிறைந்த வல்லமை படைத்திருந்தமையால் வித்தக வினைஞர் என மணிமேகலையும் ஓவியனைக் கிளவி வல்லோன் என்று அழைக்கப்பட்டதை நற்றிணையால் அறியமுடிகிறது.

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் விருதுப் பெயர்களான விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி ஆகிய பட்டப்பெயர்கள் மூலம் அவன் சித்திரக் கலையில் வல்லவன் என்பதும் அவர் காலத்தில் சித்திரக்கலை சிறந்து விளங்கியிருந்தது என்பதும் தெரிகிறது.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனை மலை தாளகிரீசுவரர் கோயில், ஆர்மாமலை குகை ஆகிய இடங்களில் காணப்படும் ஓவியங்கள் பல்லவர் கால ஓவியக்கலைக்குச் சான்றாக விளங்குகின்றன. சோழர்கால ஓவியக் கலைக்குத் திறனுக்குத் தஞ்சை பெருவுடையார் கோயில் ஓவியங்கள் மட்டுமே சான்று பகர்வனாக இருக்கின்றன. பாண்டியர்களின் கைவண்ணத்தை சித்தன்னவாசல் குடைவரை கோயில் ஓவியங்கள் வெளிப்படுத்துக்கின்றன. விசயநகர கால ஓவியங்கள் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், திருப்பருத்திக்குன்றம் சந்திரபிரபா கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவெள்ளறை புண்டரீகப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. நாயக்கர் கால ஓவியங்கள் செங்கம் வேணு கோபாலசுவாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், அழகர்கோயில் கள்ளழகர் கோயில், திருக்கோகர்ணம் கோகர்ணேசுவரர் திருக்கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

ஓவியங்களில் இராமாயணம், மகாபாரதம், புராணங்கள், தலபுராணங்கள், அவதாரக் காட்சிகள், 108 திருப்பதிகள், தெய்வ உருவங்கள், புகழ்பெற்ற திருத்தலங்கள், அடியவர்கள், வாழ்வியல் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ளன. விஜயநகர - நாயக்கர் கால ஓவியங்களின் கீழ்ப்பகுதி, மேற்பகுதிகளில் தமிழிலும் தெலுங்கிலும் காட்சி விளக்கக் குறிப்புகள் எழுப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. சிறந்த ஓவியக் கலைஞர்களைப் பாராட்டிப் பட்டம் வழங்கிய செய்தியும் கலைஞர்களுக்கு இறையிலி நிலம் கொடுக்கப்பட்டதும் ஆவணங் களில் பதிவாகியுள்ளன.

ஓவியக் கலைஞர்களுக்கு ஆதரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உள்ள குலோத்துங்க சோழன் கல்வெட்டில் இக்கோயில் திருமடைப்பள்ளி புறமாக விடான்பற்றில் வெங்கைகாவும் எயில் நாட்டில் ஓவியக்கடப்பான நரசிங்க நல்லூரும் புஞ்சை நஞ்சை நிலமாக வழங்கப்பட்டதை அறியமுடிகிறது. ஓவியக்கடப்பு என்னும் சொல் ஓவியக் கலைவளர்ச்சிக்கும் ஓவியக்கலைஞர் களுக்கும் வழங்கப்பட்ட இறையிலி நிலமாகும்.

செஞ்சி - மேல்சேவூர் ரிஷபபுரீசுவரர் கோயிலில் உள்ள முதலாம் இராசராச சோழன் கல்வெட்டில் வண்ணக்கன் ஐய்யாறன் என்ற சித்திரயாளி குறிப்பிடப்படுகிறான். இதில் சித்திர யாளி என்பவன் ராஜராஜதேவர் படை ஜநநாதத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரரில் ஒருவனாக இருந்துள்ளான். சித்திரயாளி என்பது வண்ணச் சித்திரம் எழுதுவதில் வல்லாருக்கு முதலாம் இராசராசன் அளித்த சிறப்புப்பட்டமாகும்.

ராமாயணக் காட்சிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கல்யாண மண்டப விதானத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்களை வரைந்தோரின் பெயர்களும் ஓவியம் வரையக் கொடை வழங்கியோர் பெயர்களும் காணப்படுகின்றன. வெள்ளைத் தலைபாகை கட்டி நெற்றியில் நாமமிட்டு ஜிப்பா போன்ற நீண்ட அங்கி அணிந்து தார்ப்பாய்ச்சி கட்டின வேட்டியுடன் அஞ்சலி அஸ்தத்தில் நின்று கொண்டிருக்கிறார். இடையில் துண்டு கட்டியுள்ளார். கீழ்ப்பகுதியில் ‘ரங்கமனாயக்கர் குமாரர் ரெங்கப்ப நாயக்கர்’ என்று எழுதப்பட்டுள்ளது. ரெங்கப்ப நாயக்கர் என்பவர் ஓவியம் வரைந்தவாராகக் கருதலாம். 20வது பத்தியில் ஓர் அடியவர் அஞ்சலி அஸ்தத்தில் பட்டை போட்டுக்கொண்டு தலையில் முண்டாசு கட்டிய வண்ணம் நின்ற நிலையில் இருக்கின்றார். அதன்கீழ் பொளிசுகார்ண மஹாபுத்தரபிள்ளை என்று எழுதப்பட்டுள்ளது. 17 முதல் 20 வரையிலான பத்திகள் வரைவதற்கு ஆழ்வார்திருநகரி வேலாயுதப்பெருமாள் பிள்ளை குமாரன் வீரபத்திர பிள்ளை என்பவர் ஐந்து பொன் கொடையாக வழங்கியுள்ளார்.

சித்திரவேலை சிங்காதனம்

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயில் முன்மண்டப விதானத்தில் தலபுராணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்களை வரைவதற்கு பலர் உதவிசெய்துள்ளனர். சிரீபண்டாரம் வீரப்பபிள்ளை உபயம், பொன்னம்பலம் பிள்ளை உபயம், பெரியசாமி பிள்ளை உபயம், அம்பலவாணன் செட்டி உபயம் என்று உபயதார்களின் பெயர்கள் மரங்களிலும் தனிக்கட்டங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. விக்கிரமங்கலம் இராஜேந்திர சோழீசுவரம் கோயிலில் உள்ள நாயக்கர் கால ஓவியத்தில் ஓவியக் கலைஞருக்குச் சம்பளம் தரப்பட்ட செய்தி இவ்வோவியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திருமங்கலக்குடி பிரணநாகேசுவரர் திருக்கோயில் முகமண்டப விதானத்தில் தல புராணம், பெரியபுராணம், பன்றி வேட்டைக்காட்சி, கோயில் பிரசாதம் வழங்கும் காட்சி ஆகியன வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களைக் கண்ணக்குடை பொன்னம்பலப்பிள்ளை பூமிபாலகன் குமாரன் சுவாமிநாதபிள்ளை எழுதினார் என்றும் கோவிந்தப்ப நாயக்கர் மகன் வேங்கடபதி நாயக்கன் எழுதினான் என்றும் குறிப்புள்ளது. திருவாரூர் தேவாசிரியன் மண்டபத்தில் இறைவுருவங்கள், முசுகுந்த புராணம், விழாக்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களை வரைந்தவன் ‘சித்திரவேலை சிங்காதனம்’ என்ற பெயருடன் அவனது உருவமும் வரையப் பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கருவறையைச் சுற்றி சோழர் கால ஓவியங்களுக்கு மேல் தஞ்சை நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. இவ்வோவியங்களுக்குக் கீழ் தெலுங்கு எழுத்துக்களில் ‘அப்பல பெத்தரால ராமய்யா வரைந்தது’ என்றும் ‘செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், ராமபத்ர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் காலத்தில் வரையப்பட்டது’ என்று எழுதப்பட்டுள்ளதைக் கொண்டு இவ்வோவியம் கி.பி.1632 க்கும் கி.பி.1674க்கும் இடைப்பகுதியில் வரைப்பட்டவையாகக் கருதலாம் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் கருதுகின்றார்.

குறிச்சி கோதண்டராமர் கோயில் இராமாயண ஓவியத்தைத் தீட்டிய ஓவியனின் உருவம், ஊர் பெரியோர்களின் உருவங்களும் அவர்களின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. நாராயண செட்டி, சபாபதி செட்டி, ரெங்கசெட்டியார், பாலு ரெங்கராஜா, கர்ணம் சீனிவாசஅய்யர், நாட்டாமணியம் ராமுபிள்ளை, திருச்சி காட்டா கந்தசாமிபிள்ளை, வள்ளிஅம்மை ஆச்சி, பஞ்சாய்த்து ராமபிள்ளை, அபிராமி சடைய பிள்ளை, பரவதகன் ரெங்கராஜா சேவை ஆகியன வரிசையாக எழுதப்பட்டுள்ளன.

தமிழகத் திருக்கோயில்களில் பல இடங்களில் ஓவியங்கள் இருப்பினும் இவ்வோவியங்களை உருவாக்கிய ஓவியர்களின் பெயர்கள் ஒருசில மட்டுமே காணப்பெறுகின்றன. இத்தகைய ஆவணங்கள் இயற்கையாக நிகழும் மழைநீர் கசிவு, கவனமின்மை, கிறுக்குதல் போன்ற செயல்களால் அழிந்த ஓவியங்கள் சில. திருப்பணியின்போது ஓவியங்கள்மீது வண்ணங் களைப் பூசி மறைக்கப்பட்டவை பல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x