Published : 19 Mar 2015 10:48 AM
Last Updated : 19 Mar 2015 10:48 AM

வீடில்லா புத்தகங்கள் 26: நோய் அறிதல்!

நம் காலத்தின் முக்கிய வணிகப் பொருள் உடல்நலம் சார்ந்த பயம்தான். இதைப் பயன்படுத்திப் பெரும்வணிகச் சந்தை உருவாகி வளர்ந்துள்ளது. முந்தைய காலங்களில் மானுடச் சேவையாகவும் அறமாகவும் கருதப்பட்ட மருத்துவம், இன்று முழுமையானதொரு வணிகம். அதி லும் போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், மோசடியான சோதனைகள் என சாமானிய மனிதன் நோயை விடவும் மருத்துவமனைக்குப் போவதற்கே அதிகம் அஞ்சுகிறான்.

மருத்துவம் ஏன் இத்தனை மலின மாகிவிட்டிருக்கிறது? ஐந்து முக்கிய காரணங்களைக் கூறுகிறார்கள். முத லாவது, ஆரோக்கியம் மற்றும் மருத் துவம் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் இல்லாமல் போனது. இரண்டாவது, வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அதிரடியான மாற்றங்கள்.

மூன்றாவது, முறையான பொதுமருத் துவமனைகள், அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் போனது. நான் காவது, விலை கொடுத்து படிக்கும் மருத்துவப் படிப்பும் தனியார் மருத் துவமனைகளின் பெருக்கமும். ஐந் தாவது, புதிது புதிதாக பெருகிவரும் நோய்களும் அதற்குப் பெரிதும் காரணமாக உள்ள உணவுச் சீர்கேடு களும்.

ஒருமுறை பழைய புத்தகக் கடைக் காரரிடம், ‘எது போன்ற புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன’ எனக் கேட்டேன்.

‘அதிகம் மருத்துவம் சார்ந்த புத்த கங்களைத்தான் வாங்குகிறார்கள். குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் நாட்டுவைத்தியம் தொடர்பான புத்த கங்களை விரும்பி வாங்கிப் போகி றார்கள். அரிய மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் கொண்ட பழைய தமிழ் புத்தகங்கள் என்றால் மருத்துவர்களே தேடி வந்து வாங்கிப் போவதும் உண்டு’ என்றார்.

மருத்துவ நூல்களை வாசிப்பதற்கு என தனியே ஒரு வாசக வட்டம் இருக்கிறது. வயது வேறுபாடு இன்றி இந்தப் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறார்கள். ஹோமியோபதி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர், மலர் மருத்துவம், அலோபதி எனப் பல்வேறு மருத்துவமுறைகள் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நூல்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன. இத்துடன் மாற்று மருத்துவம், உணவுப் பழக்கம், இயற்கை உணவு வகைகளைப் பற்றிய நூல்களும் அதிகம் வாசிக்கப்படுகின்றன.

ஜெரோம் கே ஜேரோம் என்ற ஆங்கில எழுத்தாளர் தனது ’த்ரி மென் இன் போட்’ புத்தகத்தில் ஒரு நிகழ்வினை குறிப்பிடுகிறார். ஒருமுறை பிரிட்டிஷ் மியூசியத்துக்குச் சென்று மருத்துவம் தொடர்பான ஒரு புத்தகத்தைத் தற்செயலாக கையில் எடுத்துப் படித்தபோது அதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நோய்களும் தனக்கு இருப்பதைப் போல தான் உணர்ந்ததாகவும், இத்தனை நோய் களை வைத்துக்கொண்டு தான் எப்படி உயிரோடு இருக்கிறோம் என உடனே இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்ட தாகவும் வேடிக்கையாகக் கூறுகிறார்.

இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்ட ஒன்றே. குறிப்பாக, மருத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கும்போது அந்த நோய்கள் தனக்கும் இருப்பதாக பெரும்பான்மையினர் பயங்கொள்ளவே செய்கிறார்கள். உடனே அவசர அவசரமாக தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள். உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி வைத்து நாலைந்து நாட்கள் பயிற்சி செய்கிறார்கள். எங்கே நோய் வந்துவிடுமோ என மனக் கவலை கொள்கிறார்கள்.

சரிவிகித உணவும், முறையான உடற்பயிற்சியும், போதுமான உறக்க மும், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் படிப்பும், பேச்சும், இசை யும், கலைகளும் கொண்ட வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே இதற்கான ஒரே தீர்வு!

இந்திய மருத்துவ முறைகளும், ஆங்கில மருத்துவ முறையும் ஒன்றை ஒன்று எப்போதுமே எதிராகவே கருதுகின்றன. இந்த மருத்துவமுறை களுக்குள் ஏற்பட்ட மோதலையும் இரண்டு மருத்துவர்களின் அணுகுமுறை யினையும் விவரிக்கிறது ’ஆரோக்கிய நிகேதனம்’ என்ற வங்காள நாவல்.

மிகச் சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று ‘ஆரோக்கிய நிகேதனம்'. இதை எழுதியவர் தாராசங்கர் பந்யோ பாத்யாய‌. இந்த நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் த. நா. குமாரசாமி.

தலைமுறை தலைமுறையாக மருத் துவம் செய்துவரும் ஜீவன் மஷாயின் மருத்துவ நிலையமே ‘ஆரோக்கிய நிகேதனம்’. ஜீவன் மஷாய் ஓர் ஆயுர்வேத வைத்தியர். இவரது தனிச் சிறப்பு. நோயாளியின் நாடி பிடித்தவுடன் ஆயுளை சொல்லிவிடுவார். இதனால், நோயாளிகள் பலரும் அவரிடம் மருத்துவம் பார்க்க வருவதற்கே பயப் பட்டார்கள். ‘மருத்துவத்தால் மரணத் தைத் தடுத்து நிறுத்த முடியும், வெல்ல முடியாது’ என்பதே ஜீவன் மஷாயின் எண்ணம்.

நோயாளிகளிடம் அவர்கள் ஆயுளைச் சொல்லி பயமுறுத்தக் கூடாது. அது தவறான அணுகுமுறை என்கிறார் ஆங்கில மருத்துவரான டாக்டர் பிரத்யோத். புதிய மருத்துவமுறையாக ஆங்கில மருத்துவம் வங்கத்தில் அறிமுகமான நிலையில் அது குறித்து எழுந்த சந்தேகங்கள், பயம், அறியாமையைப் பற்றி இந்த நாவல் தெளிவாக விவரிக்கிறது.

ஒரு பக்கம் டாக்டர் பிரத்யோத். மறுபக்கம் ஜீவன் மஷாய். இந்த இரண்டு மருத்துவர்களுக்கு இடையில் உருவாகும் மோதல்களைப் போல தோன்றினாலும், கதை இரண்டு மருத்துவ முறைகளின் செயல்பாடுகளையும் அதனால் உருவாகும் விளைவுகளை யுமே விவரித்துக் கூறுகிறது. மர ணத்தை முன்வைத்து வாழ்க்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற் சிப்பதே இந்த நாவலின் தனித்துவம்!

டாக்டர் பிரத்யோத் ஆயுர்வேத வைத்தியத்தை ஏளனமாக நினைக்கிறார். காட்டுமிராண்டித்தனமான சிகிச்சை முறை என இதனைக் கடுமையாக விமர்சிக்கிறார். இது போலவே ஆங்கில மருத்துவம், ’நோயாளிகளிடம் பணம் வாங்குவதையே குறிக்கோளாக கொண் டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு அது உதவி செய்வது இல்லை’ எனக் குற்றம் சாட்டுகிறார் ஜீவன் மஷாய்.

இருவேறு மருத்துவ நோக்குகளுக்கு இடையேயான போராட்டத்தையும், அதன் வழியே ஊடாடும் வாழ்க்கை சம்பவங்களையும் ’ஆரோக்கிய நிகேதனம்’ முழுமையாக விவரிக்கிறது.

உண்மையில் ஜீவன் மஷாய் ஆங்கில மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, காதலில் விழுந்து தோல்வியடைந்து, படிப்பைத் தொடர முடியாமல் தந்தையைப் போலவே ஆயுர்வேத மருத்துவத்தைத் தொடர்ந்தவர். கடந்த காலம் தீர்க்கமுடியாத நோயைப் போல அவரைப் பற்றியிருக்கிறது.

ஒருமுறை தாந்து கோஷால் என்ற நோயாளி வயிற்றுப் புண் காரணமாக சிகிச்சை பெற ஜீவன் மஷாயிடம் வருகிறான். அவனது உணவுப் பழக்கம் மாறாத வரை நோய் தீரவே தீராது எனச் சொல்லி அவனுடைய சாவுக்குக் கெடு வைக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த தாந்து ஆங்கில மருத்துவரான பிரத்யோத்திடம் சென்று சிகிச்சைப் பெறுகிறான்.

தனது மருத்துவமனையிலேயே பிரத்யோத் அவனை தங்க வைத்து வைத்தியம் பார்க்கிறார். ஆனால், நாக்குக்கு அடிமையான தாந்து மருத்துவமனையில் தனக்குப் பிடித்த உணவைத் திருடி சாப்பிட்டு இறந்து போகிறான். இப்போது ஜீவன் மஷாய் சொல்லிய வார்த்தைகளின் உண்மை பிரத்யோத்துக்குப் புரிகிறது.

இது போலவே பிரத்யோத்தின் மனைவி நோயுற்றபோது, அவர் ஜீவன் மஷாயிடம் உதவி கேட்டுப் போகிறார். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக அவரால் நாடிபிடித்து நோய்குறிகளைத் துல்லியமாக சொல்லமுடிவதைக் கண்ட பிரத்யோத், ஆச்சரியப்பட்டுப்போகிறார். இப்படிப் பழமையும், புதுமையும் ஒன்றையொன்று அறிந்து கொள்ளும் அரிய வாசிப்பு அனுபவத்தைத் தருவதே இந்த நாவலின் சிறப்பு.

மருத்துவமுறைகள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் மருத்து வர்களின் அக்கறையும், அன்பும், பொறுப்புணர்வும், சமூக கடமையும் முக்கியமானது. அந்த வகையில் ஐம்பதுகளில் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றும் முக்கியமானதாக உள்ளது.

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x