Last Updated : 08 Mar, 2015 02:37 PM

 

Published : 08 Mar 2015 02:37 PM
Last Updated : 08 Mar 2015 02:37 PM

நாம் சுவைக்க மறந்த நெல்லிக்கனி

இந்தியாவையும் இந்தியர்களையும் பற்றி ‘குன்றாத தங்கச் சுரங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தரித்திரர்கள்’ என்று சொல்வதுண்டு. எத்தனையெத்தனை இனங்கள், மொழி கள், பண்பாடுகள், எவ்வளவு நீண்ட வரலாறு, ஈடிணையற்ற கலை இலக்கியங் கள்.

மேற்கத்திய நாடுகளின் தொலைக்காட்சிகளுக்கு இந்த அளவில் பொக்கிஷங்களும் இவ்வளவு சாத்தியங்களும் கிடைத்தால் கொண்டாடியிருப்பார்கள். இன்னமும் இந்தியப் பண்பாடு, வரலாறு போன்றவற்றைப் பிரமாதமாக ஆவணமாக்கியிருப்பவர்கள் மேற்கத்தியர்களும் மேற்கத்திய ஊடகங்களும் தான்.

இந்திய ரயில்வே குறித்து நேஷனல் ஜியாகிரஃபிக் அலைவரிசை எடுத்த அற்புதமான ஆவணப்படத்துக்கு இணையாக இந்தியர்கள் இன்னும் ஏதும் செய்யவில்லை என்பதை வெட்கத்துடன் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

இந்நிலையில் நமது தொலைக்காட்சி அலைவரிசைகள் செய்துகொண்டிருப்பது என்ன? திரும்பத் திரும்ப சினிமா, மெகா தொடர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மையான மனித உணர்ச்சிகளை வைத்து வியாபாரம் செய்யும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ற பெருங்கொடுமை!

இந்தச் சூழலில் சமீபத்தில் தமிழில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. விஜய் டி.வியின் ‘நீயா நானா?’ நிகழ்ச்சியில் திருக்குறளைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை உப்புச்சப்பில்லாமல் பிரச்சாரப் படங்களின் தொனியில் முன்பு பார்த்திருப்போம். அல்லது மேடைப் பேச்சு, பட்டிமன்ற தொனியில் வார்த்தை விளையாட்டுகளின் ஊர்வலங்களைப் பார்த்திருப்போம். அப்படியெல்லாம் இல்லாமல் ஒரே நேரத்தில் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சி.

திருக்குறளைப் பண்டமாக்கியவர்கள் நாம்!

காலம்காலமாகத் திருக்குறள் நம்மோடு பயணிக்கிறது. பேருந்துகளில் பயணிக்கிறது. பட்டிமன்றம், மேடைப் பேச்சுகளில் ஏதாவதொரு குறளைச் சொல்லிவிட்டுப் பேச்சை ஆரம்பிப்பதே வழக்கமாகிவிட்டது. அதேபோல், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்திருந்தால் திருவள்ளுவரைத் துணைக்கழைத்திருப்பார். இப்போது அவர் அமைச்சராக இல்லை; திருவள்ளுவர் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும்!

எதைச் சொல்ல வந்தாலும் அதை நேரடியாகச் சொல்லாமல் இதைத்தான் திருவள்ளுவர் அன்றே சொன்னார் என்று சொல்வது கிட்டத்தட்ட ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. தங்கள் புலமையைப் பறைசாற்றிக்கொள்ளப் பலரும் துணைக்கழைப்பதும் திருக்குறளைத்தான். பெரும்பாலான தமிழர்களைப் புதிதாகச் சிந்திக்க விடாமல் எல்லோருக்கும் சேர்த்துத் திருவள்ளுவரே சிந்தித்து வைத்துவிட்டுப் போய்விட்டாரோ என்றே தோன்றுகிறது. ஒட்டுமொத்தத் தமிழர்களாகிய நாம் திருக்குறளை வெற்றுப் பெருமைக்கும், அரசியல் நோக்கங்களுக்குமான ஒரு பண்டத்தைப் போல ஆக்கிவிட்டோம்.

தினசரி திருக்குறளுடன் பயணித்தாலும் அதனுடன் உண்மையாக உறவாட மறந்துவிட்டோம். அப்படி உறவாடி யிருந்தால் இப்போது தமிழகம் அடைந்திருக்கும் அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சி நமக்கு ஏற்பட்டிருக்காது. சாகாவரத்தை அளிக்கும் நெல்லிக்கனியொன்றை நம் கைக்குள் பொத்திப்பொத்தி வைத்து, ‘நான் வைத்திருக்கிறேன் பார்’ என்று பெருமை பேசி உண்மையில் அந்த நெல்லிக்கனியைச் சுவைக்காமலே விட்டுவிட்டோம். இந்த நிலையிலிருந்து திருக்குறளை நம் காலத்தில் மீட்டெடுப்பது அவசியம்.

கல்லூரி நண்பர் திருவள்ளுவர்

பண்டிதர்களை மட்டும் அழைத்து திருக்குறளின் பெருமையை அளக்கச் சொல்லியிருந்தால் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நாம் எழுத அவசியமில்லாமல் போயிருக்கும். திருக்குறளோடு தங்கள் வாழ்க்கை முழுவதும் பயணித்து, அதை வாழ்க்கையோடு அடையாளம் கண்ட தலைமுறை ஒரு பக்கம், திருவள்ளுவரைத் தங்கள் கல்லூரியில் கிடைத்த, ஆத்மார்த்தமான புதிய நண்பராகக் கருதி, அந்த உறவைக் கொண்டாட ஆரம்பித்திருக்கும் இளம் தலைமுறை இன்னொரு பக்கம். இதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

திருக்குறளை மதநூலைப் போல் ஆக்கிவைத்திருந்த காலகட்டத்துக்கு இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட மூத்த, இளம் தலைமுறையினர் விடைகொடுத் தனர். வள்ளுவர் எழுதியிருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறளையும் தங்களுக்கான குறளாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு வாசகர்களுக்கான சுதந்திரத்தை அளிக்கும் ஜனநாயக நூலாக இருப்பதுதான் திருக்குறளின் பெருஞ்சிறப்பு.

திருக்குறளையும் விமர்சிக்கலாம்

பங்கேற்பாளர்கள் திருக்குறளைப் புகழ்கிறார்கள், அதைப் பற்றி உணர்ச்சி மேலிடக் குறிப்பிடுகிறார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளை சற்றே விமர்சிக்கவும் செய்கிறார்கள். திருக்குறளை விமர்சிக்கவே கூடாது என்ற உள்ளறிவோடு வளர்ந்திருக்கும் நமக்கு இது புதிதுதான்.

இந்தப் பக்கம் கவிஞர் மகுடேஸ்வரன், ஆறுமுகத்தமிழன், ஆழி செந்தில்நாதன், அ.வெண்ணிலா என்றால், அந்தப் பக்கம் பூ.கொ.சரவணன், கயல் முதலான இளம் தலைமுறையினர்.

‘கரப்பவர்க்கு யாங்கொளிக்கும்
கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்’

என்ற குறளுக்கு ஒரு பொருளைத் தான் கண்டறிந்த தருணத்தை மகுடேசுவரன் சொன்ன விதம் நெகிழ வைத்தது. ‘ஈ என்று இரப்பவனின் உயிர் அந்தச் சொல்லைச் சொல்லத் தொடங்கியவுடனே எங்கோ போய் ஒளிந்துகொள்ளும். ஈயேன் என்று மறைத்துப் பதுக்கி வாழ்பவனின் உயிர் அதைச் சொல்லும்போது எங்கே போய் ஒளிந்துகொள்ளும்?’ என்று அவர் சொன்ன பொருள் மிகவும் ஆழமானது.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

என்ற குறளை நிகழ்ச்சியில் ஒருவர் மேற்கோள் காட்டினார். அறம் என்பது எல்லோருக்கும் ஒன்றல்ல; அறத்தைப் பற்றிப் பேச வேண்டாத சில தருணங்களும் இருக்கின்றன. ‘பல்லக்கில் உட்கார்ந் திருப்பவனிடம் அறத்தைப் பற்றிப் பேச லாம்; ஆனால், பல்லக்கைச் சுமப்பவனி டம் போய் அறத்தைப் பற்றிப் பேசலாமா?’ என்று வள்ளுவர் கேட்டிருப்பதுதான் உச்சபட்ச அறம். இந்தக் குறளுக்கு வேறு சிலர் வேறு பொருளையும் வழங்கலாம். ஆனால், இந்தப் பொருளே மிகவும் உக்கிரமாகத் தோன்றுகிறது.

மதநூல்களுக்கெல்லாம் இப்படியிப் படித்தான் அர்த்தம்கொள்ள வேண்டும் என்று தீர்மானமாக வரையறை செய்து வைத்திருக்கிறார்கள். திருக்குறளுக்கு அந்த விபத்து கொஞ்சம் நேர்ந்திருக்கிறது. எனினும், காலம்காலமாக நாம் அறிந்துவந்திருக்கும் பொருளிலிருந்து சற்றே விலகிய பொருளைச் சில குறள்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கேட்க முடிந்தது ஆறுதல். பொருள்ரீதியில் ஒரு நூல் இப்படிப் பல்கிப் பெருகுகிறது என்பதே அது எவ்வளவு உயிர்ப்பான நூல் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x