

புத்தக வாசிப்பு தந்த கற்பனைச் செறிவுடன் வளர்ந்தவன் நான். வாசிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்சியாகத்தான் நான் கற்பனை செய்துகொள்வேன். அப்படித்தான் ஒவ்வொரு புத்தகமும் என்னைச் செதுக்கியது.
சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. ஜெயமோகனுடைய எழுத்தின் ருசியைச் சுவைத்த பூனையாக, அவரது புத்தகங்களைத் தேடித் தேடி வாங்குகிறேன். என் அலமாரியை அடர்த்தியாக்கிக்கொண்டிருப்பவை அவரது புத்தகங்கள்தான்.
ஜெயமோகன் எழுதிய ‘இரவு’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். சிறிய புத்தகம்தான். இரவை ரசித்து அனுபவிக்கும் நால்வர் பற்றிய வித்தியாசமான கதை அது. இரவின் நுணுக்கங்களைச் சொல்லும் அந்தக் கதை, ஒளிப்பதிவாளரான என்னை லாவகமாக உள்ளிழுத்துக்கொண்டது. அந்த வாசிப்பனுபவத்தை வார்த்தைகளால் எனக்கு கோத்துச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அந்தப் படைப்பு தரும் உணர்வுதான் சமீபமாக என்னை ஆட்கொண்டிருக்கிறது!