Published : 21 Dec 2014 11:25 AM
Last Updated : 21 Dec 2014 11:25 AM

சின்னஞ்சிறு தீபங்கள்

ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவது அந்தப் புத்தகத்துடனான தொப்புள்கொடி உறவைத் துண்டித்துக்கொள்கிற ஒரு சடங்கு. நான் எப்போதும் அந்தச் சடங்கைக் கடைசி நிமிடம்வரை ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்பேன்.

ஒரு பருவத்தில் ஒரு தொகுப்பை எழுதி முடித்து பிறகு அந்தப் பருவத்துக்கு விடைகொடுப்பற்காகச் செய்யும் சம்பிரதாயம் இது. யாருக்கோ விடைகொடுக்க முடியாமல் நிலைப்படிகளில் மருகி மருகி நிற்கும் பெண்களின் தத்தளிப்பைப் போன்றதுதான் இது. இந்த முன்னுரை எழுதி முடித்த பிறகு இந்தக் கவிதைகள் என்னிடமிருந்து காணாமல் போய்விடும். நான் அவற்றை ஒரு கலாச்சாரத் தனிமையின் ஆழத்தில் ஒரு ரகசியப் பெட்டகமாகப் புதைத்து வைத்துவிடுவேன். பிறகு யாரோ ஒருவர் அந்தப் பெட்டகத்தை தற்செயலாகத் திறந்து ஏதேனும் ஒரு கவிதையைப் படித்துவிட்டுப் பிறகு தன் வழியில் நடந்து செல்வார்.

சில தினங்களுக்கு முன்பு இந்த ஆண்டின் கார்த்திகை நாளின் தீபங்கள் எரியும் வீடுகள் வழியே மனம் கிளர்ந்து கடந்து சென்றேன். அகல் விளக்குகள் திண்ணைகளில், வாசற்படிகளில், காம்பவுண்ட் சுவர்களில், பால்கனி கைப்பிடிச் சுவர்களில்... ஒருபோதும் விளக்குகள் ஏற்றப்படாத இடங்களில் எல்லாம் எரிந்துகொண்டிருந்தன. இவ்வளவு பிரகாசமான மின் விளக்குகளுக்கு நடுவே இந்த எளிய அகல் விளக்குகள் ஒருபோதும் தன் வெளிச்சத்தை இழப்பதே இல்லை. மனிதன் நெருப்பை உண்டாக்குவதன் ஆதி ஞாபகங்களை இழக்க முடியாதவரை இந்த விளக்குகள் நின்று எரிந்துகொண்டிருக்கும். ஒரு சிறிய சுடர் நின்று எரிவதைக் காணும்போது நான் சட்டென என் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறேன். நான் சுமந்து நடக்கும் என் காலத்தின் எல்லாச் சிறுமைகளையும் சஞ்சலங்களையும் ஒரு கணம் இழந்துவிடுகிறேன். இந்தக் கவிதைகளை எழுதிய கணங்கள் சிறிய வெளிச்சங்கள் முன் திகைத்து நின்ற கணங்களே.

நான் இந்தத் தொகுப்புக்கான கவிதைகளை மொத்தமாகத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு வீடு முழுக்க ஏற்றப்பட்ட சின்னஞ்சிறு கார்த்திகை தீபங்கள் போலத்தான் உணர்கிறேன். எங்கெல்லாம் விளக்கேற்ற இடம் இருந்ததோ அங்கெல்லாம் என் சொற்களின் சுடர்களை எரியவிடுகிறேன். அகல் விளக்குகளின் வெளிச்சத்தை முழுமையாகப் பார்க்கக் குழந்தைகள் மின் விளக்கைச் சற்று நேரம் அணைத்துவிடுவதுபோல இதை வாசிக்க நேர்கிற ஒருவர் கொஞ்ச நேரம் தங்கள் மனங்களின் எல்லாப் பிரகாசமான விளக்குகளையும் அணைத்துவிட்டால் இந்த வெளிச்சம் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுவிடலாம். எப்போதும் இருண்ட மனங்களில் கவிஞனாகத்தானே இருந்துவந்திருக்கிறேன்.

இந்தத் தொகுப்பின் கவிதைகள் பலவற்றில் இச்சையின் அபூர்வ வேளைகளை, உடலின் மகத்துவ வேளைகளை நெருங்கிச் செல்ல முயன்றிருக்கிறேன். இச்சையையும் உடலையும் எழுதுவதுதான் எப்போதும் மிகப் பெரிய சவால். அதற்குத் தன்னையே கொஞ்சம் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. தன்னையே முற்றாக அவிழ்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இது மனதளவில் ஒரு பெரிய விடுதலையைக் கொடுக்கிறது. நான் இந்த நகரத்தின் மத்தியில் நிர்வாணமாக நடந்து செல்ல முடியாது. ஆனால் என்னால் கவிதைகள் எழுத முடியும். அந்தக் கவிதைகளை இப்போது திரும்பப் படிக்கும்போது கொஞ்சம் நாணமாகவே இருக்கின்றன. என்ன இருந்தாலும் நான் கொஞ்சம் பழைய தலைமுறையின் கவிஞன்தானே. என் குழந்தைகள் சீக்கிரமே என் கவிதைகளைப் படிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவார்கள் இல்லையா?

இந்தக் கவிதைகள் கதைகளால் நிரம்பியிருக்கின்றன. கதாபாத்திரங்களால் நிரம்பியிருக்கின்றன. ஒரு சிறுகதையையோ ஒரு நாவலையோ ஒரு கவிதைக்குள் சுலபமாக ஒளித்து வைத்துவிடலாம். மேலும் தமிழ்க் கவிதை என்பது அதன் மரபில் கதைகளால் ஆனதுதானே. நமது மகத்தான காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கம்பராமாயணமும் கதைகளால் ஆனவைதானே. அகநானூறும் புறநானூறும் கதாபாத்திரங்களின் குரல்கள்தானே. கவிதைக்குள் கதைகளைச் சொல்லும் இந்த மரபில் வந்த ஒருவன் என் காலத்தின் கதைகளையும் கதாபாத்திரங்களையும் எழுதிப் பார்க்கிறேன்.

நமது மறதிகளின் வழுவழுப்பான சாலைகளில் எளிதாகக் கடந்து வந்துவிட்ட சில செய்திகளை நான் கவிதையாக்கியிருக்கிறேன். நமது காலத்தின் குரூரமான அரசியல் நாடகங்களைக் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறேன். கவிதைக்கென விசேஷமான பாடுபொருள்கள் இருக்கின்றன என்ற மூடநம்பிக்கையைத் தகர்ப்பதுதான் நமது காலத்தின் கவிகளது தலையாய பணி. அதைத்தான் இந்தக் கவிதைகளில் செய்ய முயல்கிறேன். எனக்குக் கவிதைகள் எழுத மகத்தான தரிசனங்கள் தேவை இல்லை. சுவரில் ஒட்டப்பட்ட பாதி கிழிந்த போஸ்டர்கள் போதும், என் மகத்தான கவிதையை எழுத.

(டிசம்பர் 25 அன்று உயிர்மை பதிப்பக வெளியீடாக வர இருக்கும் மனுஷ்ய புத்திரனின் ‘அந்நிய நிலத்தின் பெண்’ கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையின் ஒரு பகுதி இங்கே பிரசுரிக்கப்படுகிறது.)

அந்நிய நிலத்தின் பெண் | மனுஷ்ய புத்திரன் | வெளியீடு: உயிர்மை | விலை: 480 ரூபாய் | தொடர்புக்கு: 044-24993448

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x