Last Updated : 03 Aug, 2017 10:25 AM

 

Published : 03 Aug 2017 10:25 AM
Last Updated : 03 Aug 2017 10:25 AM

பெண் கதை எனும் பெரும் கதை- 5

நூ

று பவுன்கள் கொண்ட காசு மாலையோடு பெயர் சொல்லத் தெரியாத எத்தனையோ நகைகள் சுமக்க முடியாமல் போட்டுக் கொண்டு வந்தவள் இந்தக் கூனிப் பாட்டி.

இந்த ஊரிலேயே உயரமான பெண் இவள்தான். அந்த நீளமான கைகளைப் பார்க்கும்போதே ஆண்களுக்குப் பயம் வந்துவிடும். அதுக்குக் காரணம் உண்டு.

அப்போது நிலத் தீர்வைக் கெடுபிடியாக வசூல் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தலையாரி இவளுடைய வீட்டுத் தலைவாசலில் வந்து நின்றான். அவனுக்குக் காது கொஞ்சம் ‘தோட்டந்தூரம்’(மந்தம்).

இவள் சொன்னது அவனுக்கு எப்படிக் கேட்டதோ!

அவன் சொன்ன முகாந்திர வார்த்தை சரியில்லை. வந்ததே கோவம் இவளுக்கு. ‘என்னடா சொன்னே?’ என்று சொல்தான் பலமாகக் கேட்டது. கேட்டு முடிப்பதற்கும் ஓங்கிய இவளுடைய கையின் அறை பேயறையாக, அவன் செவியில் இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

சுழலும் பம்பரம் கீழே விழுவதற்குத் தலையை ஆட்டுமே, அப்படித் தரையில் விழுந்து தடுமாறி எழுந்து ஓட ஆரம்பித்தபோதும் கீழே விழுந்து எழுந்து ஓட்டம்பிடித்தான்.

“பொம்பளைகளுக்கு முன்னால் சொல்ற வார்த்தையா அது?” என்று அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் கேட்டாள். இந்த வார்த்தை போதாதா உலகத்துக்கு. அது என்ன வார்த்தை என்று நாளது தேதி வரைக்கும் யாருக்கும் தெரியாது!

இந்த அடி காணாது அவனுக்கு என்றுதான் எல்லாருமே சொன்னார்கள்!

‘போயும் போயும் ஒரு பொம்பளைகிட்டயா அடி வாங்கினை’ என்றுதான் எல்லோரும் தலையாரியிடம் கேட்க, “அய்யோ… நா எங்கே அடி வாங்கினேம்? திரும்புறப்ப கால் தடுக்கி விழுந்தேம்… அவ்வளவுதாம்!”

“சத்தம் கேட்டுதெ!”

“விழுறப்ப தலைவாசக் கதவு கம்பந்துண்டுல என் தலெ பட்டு அந்தச் சத்தம்” என்றே சொன்னான்; மணியக்காரரிடமும் கூட!

எது என்ன கோளாறோ, வீட்டுக்குப் போய் படுத்த மூணாம் நாள் ஆள் தீர்ந்து போனான்.

“ஒற்றே அடியில் ஆளைத் தீர்த்துக் கட்டீட்டாளே” என்ற பேராகிவிட்டது. ஊரே கதி கலங்கிப் போனது. நாளாக ஆக, ‘ரெண்டு கொலை பண்ணியவளாக்கும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!

கூனம்மா தெரு வழியாக வந்தால் மரியாதையாக விலகிப் போனார்கள்.

அவளுக்குக் கூன் விழுந்ததுக்கும் ஒரு கதை உண்டு. கழுத்து தாங்காமல் எடை கூடிய தங்க நகைகள் போட்டுக் கொண்டிருந்ததினால், முன் பக்கம் அந்தக் கூடிய எடைதான் வளைத்து விட்டது என்று.

கூனம்மா கூனிப் பாட்டி ஆன பிறகு, அவள் இப்போது வசிக்கும் ‘ஓட்டை வீட்டு’க்கு அங்கே விளையாட வந்த ஒரு செல்லப் பெண் குழந்தை கொஞ்ச நேரம் இந்தக் கூனிப் பாட்டியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னெ கண்ணூ அப்படிப் பாக்கெ” என்றவள் ‘‘வா… வாம்மா!’’ என்று பிரியமாகக் கூப்பிட்டாள், அந்த ஓட்டை வீட்டில் இருந்துகொண்டு.

குழந்தை, அவளையும் அந்த வீட்டையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“பாட்டீ, நீ போட்டிருந்த நகைகளோட பாரம் தாங்காமத்தான் உன் முதுகு வளைஞ்சிட்டதாமே நெசமா?” என்று கேட்டதும் கூனிப் பாட்டிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியலை.

நினைச்சு நினைச்சு பீறிட்டு வந்தது சிரிப்பு. அந்தச் சிரிப்பையும் பாட்டியையும் உடனே பிடித்துவிட்டது குழந்தைக்கு.

நினைத்தால் துக்கப்பட வேண்டியது என்றாலும் தூக்கம் வரவில்லை அந்த வித்தியாசமான பாட்டிக்கு. பாரமான அந்த நகைகள் போய்விட்டன. சும்மா போகவில்லைதான், குடிபுக வந்த வீட்டில் தேங்கிக் கிடந்த பத்துக் குமருகளைக் கரையேற்றிவிட்டுத்தான் போனது.

எந்தப் பெண்ணும் தன் பிறந்த வீட்டில் போட்ட நகைகளை இப்படியாக இழப்பார்களா? அதான் கூனிப் பாட்டி.

குழந்தையைக் கொஞ்சும்போது ‘ஏங் கப்பலூ’என்று கொஞ்சுவார்கள் பிரியம் மிகுதியால். பத்துக் குமருகளைக் கரை சேர்த்தது இந்தக் கப்பல்.

தன் வீடு தேடி வந்த அந்தச் செல்லக் குழந்தையை இழுத்து அணைத்து உட்கார வைத்தாள். அதற்கு முன்பு அது அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை சரிசெய்து திருத்தினாள். முதுகைப் பிரியத்தோடு தடவிக் கொடுத்தாள்.

ஏனோ, இன்று பாட்டியின் கண்கள் பனித்தன.

‘‘சாப்பிட்டாச்சா… கண்ணூ?’’

தலை இசைத்தது.

‘‘என்னெ சாப்பிட்டெ..?’’

‘‘நெய்ச் சோறு‘‘

இப்பவெல்லாம், சாப்டாச்சா என்றுதான் கேட்க முடிகிறது.

முன்பென்றால், ‘வா… வந்து சாப்பிடு’ என்று சொல்லும் அந்த வாய்.

பாப்பாவின் வாயிலேருந்து ஒரு பிடித்தமான மணம் வந்தது. வறுத்த புளியங்கொட்டையின் வாசம் அது.

பாட்டியின் உள் மனம் ஒரு அய்யோசொல்லிக் கொண்டது.

“புளியங்கொட்டை தின்னியாடா… கண்ணூ?”

‘ஆமா’என்பது போல் பார்த்தது; பார்த்துவிட்டு, ஒரு புளியங்கொட்டையை எடுத்துக் கொடுத்தது.

வாங்கி வாயில் ஒதுக்கிக் கொண்டாள் பாட்டி.

கொஞ்சம் கழித்து ‘கடக்’என்ற சத்தம் கேட்டுது!

“பாட்டீ ஒனக்கு பல் இருக்கா?”

“அட, சும்மா ஒரு கடவாப் பல்லு”.

குஷி ஆகிவிட்டது. அந்தப் பிஞ்சுக் கை நிறைய வறுத்து, உரலில் குத்தி வெள்ளையாக்கப்பட்ட புளிய முத்துகள். வாயினுள்ளேயே போட்டு ஊற வைத்து ஊறும் எச்சிலை சுவைத்து உண்ணுவது.

அடேயப்பா எத்தனை நாளாகிவிட்டது. இவளுடைய ஊரில் இவர்களுக்கு ஒரு பெரிய்ய புளியந்தோப்பே உண்டு.

அந்த பிஞ்சு வாய் சொன்னது “வறுத்த புளியங்கொட்டைன்னா உனக்கு அம்புட்டு இஷ்டமா? எங்க வீட்டுல நெறைய இருக்கு கொண்டாரேன்!”

குழந்தையின் பட்டு நாடியைத் தொட்டுத் தடவிய கைவிரல்கள் நுனியை உம்மா கொடுத்துக் கொண்டாள்.

- கதை வரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x