Published : 05 Aug 2017 10:32 AM
Last Updated : 05 Aug 2017 10:32 AM

தேக்கநிலை அடைகின்றனவா மொழிபெயர்ப்புகள்?

டந்த 15 ஆண்டுகளாகத் தமிழ் அறிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும் மாற்றங்களுள் வெள்ளம்போல் மொழிபெயர்ப்புகள் வந்து குவிவதை நிச்சயம் குறிப்பிடலாம். ஆயினும், இந்த மொழிபெயர்ப்புகளுக்கு எந்த அளவில் வரவேற்பு கிடைக்கிறது என்று பார்த்தால் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளர், அவருக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச மொழிபெயர்ப்பு ஊதியத்துக்காக மொழிபெயர்ப்பதில்லை. ஒரு நூலின் மேல் கொண்ட காதல்தான் அவரை அந்த நூலை மொழிபெயர்க்க வைக்கிறது. எனினும், எவ்வளவு குறைவான ஊதியமாக இருந்தாலும் வாழ்க்கைப்பாட்டுக்கு அந்தத் தொகைகூட மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் சூழல்தான் இங்கு நிலவுகிறது.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையோடும் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கையோடும் ஒப்பிடும்போது, பெரும் இடைவெளி தென்படுகிறது. ஏழு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேசும் மொழியில் ஒரு புத்தகத்தை 1,000 பிரதிகள் வெளியிட்டால், அது விற்றுத் தீர்வதற்கு 10 ஆண்டுகள் வரைகூட ஆகின்றன. சமயத்தில் விற்காமலேயே அப்படியே தேங்கியும் விடுகிறது. இந்தச் சூழலில்தான் தமிழில் மொழிபெயர்ப்பாளர்கள் இயங்க வேண்டியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆண்டுதோறும் வந்து குவியும் மொழிபெயர்ப்பு நூல்களின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவில் இருப்பதில்லை. எனினும், தமிழ் வாசிப்புச் சூழலைக் கணக்கிலெடுத்துக்கொள்ளும்போது, அவற்றை விமர்சிப்பதற்கும் தயங்கவே வேண்டியிருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் உச்சபட்சமாக ஒரு தேக்கநிலை ஏற்பட்டுவிடக்கூடும். அதிலும், ஆங்கில அறிவு அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு கட்டத்தில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளைப் படிப்பதற்குப் பதிலாக ஆங்கில மூலத்திலேயே படிப்போரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துவிடும்.

பெரும்பாலான பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியத்தையே தருகின்றன. சமயத்தில் அதுவும் கொடுப்பதில்லை. மொழிபெயர்ப்பாளர்கள் என்ன தருகிறார்களோ அதை அப்படியே பதிப்பித்து வெளியிட்டுவிடுகின்றன பதிப்பகங்கள். எவ்வளவுதான் நூல்களின் மேல் காதல் இருந்தாலும், சொற்ப ஊதியத்துக்காக மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வோர் குறைவே. உழைப்பு மதிக்கப்பட்டால்தான் அதில் தரமும் காப்பாற்றப் படும்.

தமிழில் நல்ல மொழிபெயர்ப்புகள் வெளியாகி, ஒரு நல்ல அறிவுச் சூழல் உருவாக வேண்டுமானால், அதற்கான பொறுப்பென்பது மொழிபெயர்ப்பாளரை மட்டும் சார்ந்தது அல்ல; அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து, அவர்களின் மொழிபெயர்ப்பை அக்கறையுடன் சரிபார்த்து வெளியிடும் பதிப்பாளர்கள்; அந்த மொழிபெயர்ப்பு நூல்களை ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் வாசகர்கள்; நல்ல மொழிபெயர்ப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் கல்வித் துறை, ஆசிரியர்கள்; மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் விருதுகளும் கொடுத்துக் கவுரவிக்கும் மத்திய, மாநில அரசுகள் என்று எல்லோருடைய பங்கும் இதில் அடங்கியிருக்கிறது. நல்ல நூல்களை நோக்கி நாம் நகர்ந்தால்தான் நல்ல நூல்களும் நம்மை நோக்கி நகரும் என்பதை ஒட்டுமொத்த சமூகமும் நினைவில் கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x