Last Updated : 25 Aug, 2017 12:41 PM

 

Published : 25 Aug 2017 12:41 PM
Last Updated : 25 Aug 2017 12:41 PM

பார்த்திபன் கனவு 18: விக்கிரமன் சபதம்!

“இ

வை, கேவலம் சித்திரத் திறமையைக் காட்டுவதற்காக மட்டும் எழுதிய சித்திரங்கள் அல்லவே, குழந்தாய்! என்னுடைய மனோரதங்களை என் இருதய அந்தரங்கத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் ஆசைகளையல்லவா இப்படிச் சித்திரித்திருக்கிறேன்? இந்தச் சித்திரங்களை இப்போது பார்க்கிறவர்கள் சிரிக்க மாட்டார்களா? ‘வீணாசை கொண்டவன்' ‘எட்டாத பழத்துக்குக் கொட்டாவிவிடுகிறவன்' என்றெல்லாம் பரிகசிக்க மாட்டார்களா? ஆகையினாலேயே, இந்த மண்டபத்தை இப்படி இருள் சூழ்ந்ததாய் இப்போது வைத்திருக்கிறேன்.

இந்தச் சித்திரக் காட்சிகள் எப்போது உண்மைச் சம்பவங்களாகத் தொடங்குமோ, அப்போதுதான் மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்ய வேண்டும். அப்போதுதான் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி மண்டபத்தைத் திறந்துவிடவேண்டும். விக்கிரமா… அந்தப் பாக்கியம் என் காலத்தில் எனக்குக் கிடைக்கப் போவது இல்லை. உன்னுடைய காலத்திலாவது நிறைவேற வேண்டுமென்பது என் ஆசை. என்னுடன் நீயும் போர்க்களத்துக்கு வருவதாகச் சொல்வதை நான் ஏன் மறுக்கிறேன் என்று இப்போது தெரிகிறதல்லவா?”

“தெரிகிறது அப்பா!”

“என் கனவை நிறைவேற்றுவதற்காக நீ உயிர்வாழ வேண்டும். சோழ நாட்டின் உன்னதமே உன் வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். சோழர் குலம் பெருமையடைவதே அல்லும் பகலும் உன்னுடைய நினைவாயிருக்க வேண்டும். சோழரின் புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கொடிக்கும் தாழாமல் வானளாவிப் பறக்கவேண்டும் என்று சதா காலமும் நீ சிந்திக்க வேண்டும். நாளை மறுதினம் நான் போருக்குக் கிளம்புகிறேன். யுத்த களத்திலிருந்து திரும்பி வருவேனென்பது நிச்சயமில்லை. விக்கிரமா! போர்க்களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம் அடைகிறார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம் போக மாட்டேன். திரும்பி இந்தச் சோழ நாட்டுக்குத்தான் வருவேன். காவேரி நதி பாயும் இந்தச் சோழ வளநாடுதான் எனக்குச் சொர்க்கம். நான் இறந்த பிற்பாடு என்னுடைய ஆன்மா இந்தச் சோழ நாட்டு வயல் வெளிகளிலும், கோயில் குளங்களிலும், நதிக் கரைகளிலும், தென்னந்தோப்புகளிலும்தான் உலாவிக் கொண்டிருக்கும்.

அப்போது ‘பார்த்திபன் மகனால் சோழர் குலம் பெருமையடைந்தது' என்று ஜனங்கள் பேசும் வார்த்தை என் காதில் விழுமானால், அதைவிட எனக்கு ஆனந்தமளிப்பது வேறொன்றுமிராது. எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா, விக்கிரமா?”

“செய்வேன், அப்பா! சத்தியமாய்ச் செய்வேன்!” என்று தழுதழுத்த குரலில் சொன்னான் இளவரசன் விக்கிரமன்.

அவன் கண்களில் நீர் துளிர்த்து முத்து முத்தாகக் கீழே சிந்திற்று. இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பொன்னனுடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. மகாராஜா அவனைப் பார்த்து, “பொன்னா! எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? இளவரசரிடம் உண்மையான அன்புள்ள சிலராவது அவருக்குத் துணையாக இருக்க வேண்டாமா? அதற்காகத்தான் உன்னை இருக்கச் சொல்லுகிறேன். என்னுடன் நீ யுத்தத்துக்கு வருவதைக் காட்டிலும் இளவரசருக்குத் துணையாக இருந்தாயானால், அதுதான் எனக்குத் திருப்தியளிக்கும். இருக்கிறாயல்லவா?” என்று கேட்டார்.

பொன்னன் விம்மலுடன் “இருக்கிறேன், மகாராஜா!” என்றான்.

- கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x