Last Updated : 20 Jul, 2017 10:05 AM

 

Published : 20 Jul 2017 10:05 AM
Last Updated : 20 Jul 2017 10:05 AM

பெண்கதை எனும் பெருங்கதை - 3

பிள்ளைக் கட்டில்களில் உட்கார்ந்து கொண்டிருந்த பாட்டியம்மாக்கமார் எல்லாம் வீட்டுக்குள் வந்து அவரவர் கட்டில்களில் சாய்ந்தார்கள்.

வெளிக் காற்றைக் குடித்துவிட்டு வீட்டுக்குள் வந்து கட்டிலில் சாய்ந்தாலே ஒரு சுகம்தான். வாழ்நாள் எல்லாம் கடுமையாக காட்டு வேலைகள் செய்து அலுத்த உடம்புகள் அப்போதெல் லாம் தலை சாய்த்தவுடன் ‘மூத்தவள்’ஓடிவந்து அப்பிக் கொண்டுவிடுவாள்.

‘நாலு கால்களில் தவழ்ந்து

இரண்டு கால்களால் ஓடி

மூன்று கால்களால் நடந்து

எட்டுக் கால்களால் போய்ச் சேர்’

- என்றுதான் சொல்லியிருக்கிறது.

ஒரு குடும்பத்தில் ஆண்களுக்கு வேலைச் சுமை அதிகமா? பெண்களுக்கு வேலைச் சுமை அதிகமா என்று கேட்டால்,‘ஒரு பிள்ளைப் பேறுக்குக் காணுமா இவனுகளோட நொண்டி வேலை’என்பார்கள்.

வெறும் துதிப் பாடல்களாலும் கோயில் சிலைகளாலும் கும்பிட்டுவிட்டால் தீர்ந்ததா இவன்களோட ‘கடன்’சுமை?

பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து போகும் ஒரு வரம் தந்திருக்கிறது இயற்கை. அதனால் தப்பிப் பிழைக்கிறான் பெண் பெற்ற ஆண்.

“அம்மா உனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது” பிள்ளையைப் பெற்ற பெண்ணின் காதில் மருத்துவச்சி சொன்னதும் பெற்றவள் மகிழ்ந்தாள்.

‘அடுத்துப் பிறக்கப் போகும் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள எனக்கு இன்னொரு கை கிடைத்து விட்டது’ என்றே பொருள் அந்த மகிழ்ச்சிக்கு. பிறக்கப் போவது ரெட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் கவலை இல்லை.

இந்தப் பாட்டிமார்கள் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த ஓய்வு இப்போது எடுத்துக் கொள்ளும் நிம்மதிதான்.

ஒரு குட்டித் தூக்கம் போட்டு முழிக்கவும் வெந்த கோழிக் கறியின் மணம் மூக்கைத் தொடவும் சரியாக இருந்தது.

சிறிய்ய வெங்கலக் கொட்டுக் கூடைகளில் இந்தப் பெரியவர்களுக்கே என்று கறியைத் தாளிதம் பண்ணுவதற்கு முன்பே ஒவ்வொரு அகப்பை என்று போட்டுக் கொண்டுவந்து தருவது வழக்கம். அதுபடியே வந்தது.

வயது ஆக, ஆக புலவுகள் உண்டவர்களுக்கு அதன்பேரில் ஆசையும் அதிகம் ஆகுமாம்!

புலவுகளில் எது எது ருசி அதிகம்? எது எது உடம்புக்கு நல்லது? எது எது உடம்பில் அதிகம் ஒட்டும் என்றெல்லாம் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள் என்பதைப் பேசிப் பேசி, அது ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போலவே ஆகிவிட்டது.

‘முக்கால் காடை

முழு உடும்பு

அரை ஆடு

கால் கோழி’ - என்பார்கள்.

ருசியில் மிஞ்சியது காட்டுப் பூனைக் கறிதான் என்பார் ஒருவர். இல்லை இல்லை மான் கறிதான் என்பார் மற்றொருவர். மிளாவின் கறிதான் உப்புக் கண்டத்துலேயே ஒசத்தி என்பார் இன்னோர் ஆள்.

பேச்சு, வைத்தியத்துக்குத் தாவும். ‘‘இருமல் நோய்க்கு கருமந்தியின் கறிதான் சொன்னாங்கமான மருந்து’’ என்பார் ஒருவர். இங்கே யாரும் அதை ருசி பார்த்ததில்லை; எல்லாமே கேள்வி ஞானம்தான்.

‘‘குன்னிருமலுக்கு முள்ளெலிதான்…’’ இது இன்னொருவர்.

எல்லாம் சரிதான்; பல் இல்லாப் பாட்டிகள் எப்படி கறி தின்னப் போகிறார்கள்?

எல்லாத்துக்குமே ஒரு வழி வைத்திருக்கிறார்கள். ‘ராணம்’ என்று ஒரு கருவி இருக்கிறது; மாவு திரிக்க ‘திருகை’ இருக்கிறதுபோல.

அந்த ராணத்தில் பருத்தியை நீட்டி திருகினால் கொட்டையை நீக்கி, பஞ்சு கிடைக்கும். அதேபோல் உள்ள அடுப்பங்கரை ராணத்தில், அவித்த கோழிக் கறியை நீட்டி கைப்பிடியைத் திருகினால், கறியைப் பஞ்சு போல் மெல்லிசாக்கித் தந்துவிடும்.

பிறகென்ன; யோகம்தானே!

பல்லுக்குப் பதிலாக ‘பொம்மைப் பல்’ கண்டுபிடித்தவன் அல்லவா மனிதன்!

கோழிக் கறியின் பகுதிகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். ஒரு பாட்டி தொலிக்கறிதான் வேண்டும் என்பாள். சிலருக்கு ஈரல், ஒரு சிலருக்குத் தலை. தொடைக் கறி என்பது ராஜபாகம்; அனைவருக்குமே இதில் விருப்பம்.

கோழிக் கறி சமைப்பதில் ‘மன்னி’களும் உண்டு. (மன்னர்கள் போல மன்னிகள்) வந்த விருந்தினர்களில் அப்படி ஒரு அம்மையார் வந்து வாய்த்துவிடுவார். முந்தானையை இறுக்கிச் சொருகிக் கொண்டு களத்தில் இறங்கினால், முட்டைக் கறி, தாளித முட்டைகள், ஈரல் கறி, கறிப் பொரியல், தேங்காய்ப் பாலில் அவித்த கோழிக் கறி என்று வித விதமாக நொறுக்கித் தள்ளிவிடுவார்.

பெரிய்ய பானைகளில் குதிரைவாலி அரிசிச் சோறும் கம்மஞ்சோறும் வீட்டு வேலை யாட்களுக்கு. நெல்லுச் சோறு விருந்தாட்களுக்கும் வீட்டுப் பெரியாட்களுக்கும் செல்வங் களுக்கும்.

நெல்லுச் சோறில் பச்சை நெல்லுச் சோறு என்றும் உண்டு. அதை களி பக்குவத்தில் வார்ப்பார்கள். அதுக்கென்று ஒரு ருசியும், மதிப்பும் உண்டு. இவை அனைத்தும் ‘ருசி கண்ட பூனை’களுக்கு மட்டும்.

வீட்டின் மூலைகளில் கிடக்கும் வங்கிழடுகளுக்கு என்றே மாவுப் பலகாரங்கள் உண்டு. ஒவ்வொரு தலையணைகளை ஒட்டி அகலமான சிரட்டைகள் (கொட்டாங்கச்சி) வைத்திருப்பார்கள் அவர்கள்.

கரிசல் காட்டில் ஒரு காலத்தில் தென்னை மரங்களே கிடையாது. இந்த மண்ணின் அடையாளமே பனை மரங்கள்தான். அப்போது தெரு வியாபாரிகள் பக்கரைப் பையைத் தோளில் சுமந்துகொண்டு “பெருங்காயம், ஈராங்காயம் (வெங்காயம்) தேங்காயீ...” என்று கூவி விற்றுக் கொண்டு வருவார்கள். அவர்களிடம் சொல்லி வைத்தால், அகலமான அடிப்பாகம் கொண்ட தேங்காய் கிடைக்கும். அதில் இருந்துதான் கிடைத்தவை இந்த சிரட்டைப் பாத்திரம்.

சுரக்காய் தரும் பாத்திரம் போல தேங்காய் தந்த பாத்திரம் இது.

இந்த அகலச் சிரட்டையை மாட்டுக்காரப் பையன்களிடம் தந்தால், நுண்ணமான கல்லில் தேய்த்துத் தேய்த்து திருவோடு போல நுண்ணமாக்கித் தந்துவிடுவார்கள். அந்தப் பையன்களுக்கு இவர்களிடமிருந்து மாவும் மாவு உருண்டைகளும் கிடைக்கும்.

இந்தச் சிரட்டையைக் கவனக் குறைவாக வைத்திருந்தால் வீட்டுப் பிள்ளைகள் விளையாட எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

இந்தச் சிரட்டைகளில் இன்னொரு சவுகரியம், தேய்த்துக் கழுவ வேண்டாம்; துடைத்து வைத்துக் கொள்ளலாம்.

அரிசி குத்தும்போது கிடைக்கிற தவிடுதான் மனுஷர்களுக்கு முதல்முதலில் கிடைத்த மாவுப் பலகாரம்!

- கதை வரும்…

ஓவியம்: மனோகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x