Last Updated : 06 Jul, 2017 11:17 AM

 

Published : 06 Jul 2017 11:17 AM
Last Updated : 06 Jul 2017 11:17 AM

பெண் கதை எனும் பெருங்கதை

அந்தக் காட்சியை ஒரு கோணத் தில் பார்க்கக் கிடைத்தது.

அந்தப் பெண்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மெல்லப் பேசினாலும் கண்டுபிடிக்கிற தூரம்தான் அது.

கவனித்துக் கொண்டே இருந்த பிறகு தான் தெரிந்தது அது வாய் பேசவிய லாதவர்கள் பேசுகிற மொழி என்று.

இதுக்கும் அவர்கள் இருவரும் பேசவியலாதவர்கள் இல்லை!

இதுபோல் இன்னொரு நாள். அவர்கள் பேசுவதைக் காதாரக் கேட்க முடிந்தது. பேச்சொலி காதில் விழுந்ததுதான் மிச்சம். என்ன பேசுகிறார்கள் என்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை.

என்ன கருமாந்திரம்னு தெரியலையே, இந்த அம்மையின் வீட்டுமொழி வேறே; அந்தப் பெண்ணின் வீட்டுமொழி வேறே.

மற்ற சமயங்களில் அவர்கள் இரண்டு பேரும் சரளமாக அவர்களின் வீட்டு மொழிகளில் பேசிக்கொள்வதை யாரும் கேட்கலாமே.

இங்கே, இடை இடையில் யாரும் வருகிறார்களா என்று கவனித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது.

பல நாட்கள் நின்று கவனித்தபோது தான் தெரிந்தது, அது பொம்பளைகள் தங்களுக்குள் பேசுகிற அவர்களுடைய பொதுமொழி என்று!

கவனிக்கிறார்கள் என்று தெரிந்து விட்டாலும் நஷ்டமில்லை; அதில் இன்னொரு வேறு எழுத்தைச் சேர்த்துப் பேசி அசத்தவும் முடியும் அவர்களால்!

சில விசயங்களை மறைக்கத்தான் வேணும்; மாராப்பைப் போல.

குழந்தைகளிடம் பொய் சொல்லி மறைப்பதில்லையா பெரியவர்கள்?

இவர்கள் கொண்டாடும் ‘செவ்வாக் கிழமை’ விரதமே இதுபோல ஒன்று தான். இப்படிஒன்று இருக்கிறது என்று ஆண்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அங்கே என்னவெல்லாம் எப்படி எல்லாம் நடக்கிறது என்று எதிர் பாலருக்குத் தெரியாது. அவைகளைக் கண்டுபிடிக்க முனைந்தால் ‘கண்ண விஞ்சி’போய்விடும் என்ற பயம் நேற்று வரை இருந்தது; அந்தச் சொல் இன்றும் நாளையும் இருக்கும்!

ஒடுக்கப்பட்ட சீவன்கள் தங்களுக் குள் ஏற்படுத்திக் கொண்ட கமுக்கங்கள், இப்படி இன்னும் எத்தனை இருக்குமோ தெரியலை!

பெண்ணானவள் ஆணை எப்படியெல் லாம் ‘வெற்றி’கொள்கிறாள் என்பதை நாட்டார் சொல் கதைகளில் அறிந்து கொள்ளலாம்.

‘கதவடைப்புக் கூட்டம்’ என்று அந்தக் காலத்துப் புரட்சியாளர்கள் நடத்துவார்கள், எதிரிகளுக்குத் தெரி யக்கூடாது என்று.

புரட்சியாளர்கள் செய்வது எதிரியைத் தாக்க; இவர்கள் செய்வது தங்களைத் தற்காத்துக் கொள்ள.

சீவராசிகளின் பிறவி இயல்பு இவை.

அந்த இரண்டு பெண்களில் பெரிய பெண்ணுக்கு நடு வயசைத் தாண்டும் பருவம். மற்றவளுக்கு பருவத்தினுள் நுழையும் வயசு.

பெரியவளுக்கு மிகச் சின்ன வய சிலேயே, பேருக்குக் கல்யாணம் என்று செய்துவைத்து, அந்த மாப் பிள்ளைக் கிழவன் காலாவதியாகி விட்டார்.

சின்னப் பெண்ணுக்கும் அப்படியே தான் நடந்தது.

பெரிய பெண்ணினுடையது, வசதி யான பெரும் கூட்டுக் குடும்பம்.

சின்னவளுடையது ஏழ்மை நிறைந்த கூலிக் குடும்பம்.

இருவருக்குமே பிள்ளைகள் கிடை யாது.

கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்கவும் ஒரு பேச்சுத் துணைக்கும் கடைகண்ணிக்குப் போகவும் பல்லாங் குழி ஆடவும் இப்படியான ஒரு ஆள் பெரிய குடும்பத்துப் பெண்களுக்குத் தேவைப்படும். இதையெல்லாத்தையும் விட, ஊருக்குள் நடக்கும் சங்கதிகளை உடனுக்குடன் சூடு ஆறிவிடும் முன், போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்லு வதுதான் ரொம்ப முக்கியம்.

கொஞ்ச நேரம் கூட இவர்கள் பக்கத் தில் இல்லை என்றால் ‘கையொடிந்தது’ போல இருக்கும்.

பாழுங்கிணத்தில் இன்று யாரோ விழுந்து செத்துப்போய் விட்டார்கள் என்று காற்றுவாக்கில் ஒரு செய்தி காதில் விழுந்தால், ‘ஓடு, ஓடு யாரு என்ன ஏது என்று தெரிஞ்சிக்கிட்டுவா’ என்று விரட்டுவார்கள்.

தகவல் விவரம் தெரிந்ததும் இவர்களே போய்ப் பார்த்தது போல் சொல்லி மகிழ்வார்கள்.

வீட்டில் வேலை எல்லாம் இங்கே முடிந்ததும், “யக்கா, நாம் போயி சாப்பிட்டு வந்திருதேம் ஒரு நொடியிலே” என்று புறப்பட்டாள்.

“ஓந் துருத்திக்கு இந்த வீட்டுச் சாப்பாடு ஒத்துக்கிடாதோ?” என்று கேட்டு, கும்பா நிறைய்ய சாப்பாடும் போட்டுக்கொண்டு வைத்து விடு வார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும், யக்கா, வீட்டுக்குப் போயி, எட்டிப் பார்த்து விட்டு வந்துருதேம் என்று புறப்பட்டால், “அங்கெ யென்னெ பிள்ளை குட்டிக அழுதாக்கும்; பேசாம இங்கெ கிட” என்று முடக்கி வைத்து விடுவார்கள்.

பகல் பொழுதுகளில் சாப்பிட்டுவிட்டு ‘ஸ்... அப்பாடா’ என்று கொஞ்சம் தலை சாய்க்க முடியாது. வெங்காயம் உரித்துத் தர, காய்கறிகள் நறுக்கித் தர என்று ‘ஆயிரம்’ வேலைகள் இருக்கும்.

பெரிய சமுசாரிகளின் வீடுகளில் வேலைக்காரர்களின் சாப்பாட்டுக்கு என்று தனியாக சமையல் இருக்கும். இதற்குப் ‘பெரிய பானைச் சமையல்’ என்றே பெயர். அந்தப் பெயருக்குத் தக்கன பானைகளும் சட்டிகளும் பெரிசு பெரிசாகவே இருக் கும்.

அதிகாலை நேரத்தில் வீட்டின் மெத்தை (மாடி)யில் ஏறி, நின்று கொண்டும் நடந்து கொண்டும் சுற்றிப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம். நாளெல்லாம் வீட்டினுள்ளேயே கிடந்து புழுங்கிக் கொண்டிருந்துவிட்டு அந்தக் காலை நேரம் தரும் குளிர்ச்சியின் இனிமை தரும் சுகம் சொல்லி முடியாது.

அந்த உயரத்திலிருந்து பார்த்தால் ஒரு குக்கிராமம் முழுவதிலும், என்ன வெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லி விடலாம். ஊரைச் சுற்றிலும் உள்ள ஒத்தையடிப் பாதை களில் வண்டிப் பாதைகளில் யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று கண்டுவந்து சொன்னால் அக்காமார் களுக்குப் பிடிக்கும்!

இந்த ‘உலகத்தில்’ என்னவெல்லாம் தங்களுக்குத் தெரியாமல் நடந்து விடுமோ எனும் ஒரு உள் பதைப்பு இருந்து கொண்டே இருக்கும் அவர் களுக்கு! அவர்களுடைய வீட்டின் சுவர் களுக்கு அந்தப் பக்கம் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிய வேண்டும்.

இவர்களுடைய வீட்டின் ஆட் களுடைய எண்ணிக்கையும் அதிகம். கோழியடிக்கும்போது ஒரு தடவைக்கு நாலு அய்ந்து கோழிகள் அடிக்க வேண்டியிருக்கும். வாரம் தப்பாமல் இது நடக்கும்.

அந்த வீட்டிற்குள் நுழையும்போதே கோழி எச்ச வாடைதான் வீசும்.

கோழி எச்சம் காலில் ஒட்டாமல் வீட்டுக்குள் போக முடியாது. மிதித்த கோழி எச்சத்தைக் கண்ட இடத்தில் இழுகி வைத்ததினால் வரும் வீச்சம், என்னதான் சாணிப்பால் கரைத்துத் தெளித்தாலும் மதியம் வரைதான் தாங்கும்.

- கதை வரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x