Last Updated : 10 Jun, 2016 11:13 AM

 

Published : 10 Jun 2016 11:13 AM
Last Updated : 10 Jun 2016 11:13 AM

மவுனத்தின் புன்னகை 22: லோக குரு ஜே.கிருஷ்ணமூர்த்தி!

எனக்குத் தெரிந்து ஜே.கிருஷ்ண மூர்த்தி 1956-ல் இருந்து அவர் மறைவதற்கு முந்தின ஆண்டு வரை, டிசம்பர் மாதங்களில் சென்னை யில் வாரம் இருமுறை என சுமார் 10 முறை உரை நிகழ்த்துவார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசந்த விஹார் என்ற மாளிகையின் முன்புறத்தில் ஒரு மரத்தடியில் சரியாக மாலை 5.30-க்குத் தொடங்கி 6.30-க்கு முடித்துவிடுவார். அவருடைய உரையின் கடைசி நிமிடங்களில் காற்றுகூட அசைய முடியாமல் மூச்சை அடக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கும். இன்னும் பேசுவார் என்று நினைத்திருக் கும்போது கைக் கூப்பிவிட்டு எழுந்து போய்விடுவார். வரும்போது கலகல வென்று பேசிக்கொண்டு வந்த கூட்டத் தினர், கலையும்போது ஏதோ திகில் படத் தைப் பார்த்துவிட்டு வெளியேறுவது போல இருக்கும்.

ஜே.கே-யின் வாழ்க்கை வரலாறு விசித்திரமானது. தியாஸாபிக்கல் சபையில் ஜே.கே-யின் தந்தை குடும்பத்தோடு அங்கத்தினராக இருந் தார். ஆரம்ப கால அங்கத்தினர்களுக்கு அடையாறு சபையிலேயே வீடு. ஒரு காலத்தில் அடையாறு பேய் உலாவும் இடமாக இருக்கலாம். நான் 1940 அளவில் போயிருக்கிறேன். ஒரு சில பாதைகளின் அமைதியே அச்சுறுத்துவதாக இருக் கும். அச்சபையின் நிறுவனர்கள் சாதா ரணக் கண்களுக்குத் தெரியாத ஆன்மிக வழிகாட்டிகள் உண்டு என்று உறுதியாகச் சொன்னார்கள். நிறுவனர்களில் ஒருவ ரான ஆல்காட் துரைக்கு, அவர் ஆசான் கூடமுனி ஒரு தலைப்பாகை கொடுத் தார் என்று ஆல்காட் துரை அவருடைய சுயசரிதத்தில் எழுதியிருக்கிறார். ‘இவர் கள் ஆவிகள், இமாலயக் குருமார்கள் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய்’ என்று இன்னொரு நிறுவனரான பிளா வாட்ஸ்கி அம்மையாரின் அந்தரங்கக் காரியதரிசி ஒருமுறை பகிரங்கமாக அறி வித்தார். அந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற பிளாவாட்ஸ்கி அம்மையார் அங்கேயே காலமானார். அவர் இரு தடிமனான நூல்களை அவர் உணர்ந்த ஆவியுலகம் பற்றி எழுதியிருக்கிறார். ஆல்காட் துரை சுயசரிதை மட்டும் எழுதினார். அதில் ஒரு தகவல், இரு ஆவி யுலகத் தலைவர்களும் பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் ஆந்திரா சென்றிருக் கிறார்கள் என்று.

இதெல்லாம் ஜே.கே பிறப்பதற்கு முன்பு. இன்னும் சில வதந்திகள் இருந்தாலும் சபை மேன்மேலும் வளர்ந்தது. அன்னிபெசண்ட் அம்மையார் காலத் தில் உச்சநிலை அடைந்தது. என்னு டைய நெருங்கிய நண்பர் ஒருவர் அங்கத்தினராகி 35 ஆண்டுகளில் உப தலைவர் பதவி வரை முன்னேறிவிட்டார். சபைக்கு வாரணாசியில் ஒரு பெரிய அலுவலகம் இருக்கிறது. சிறந்த பள்ளி ஒன்றும் இருக்கிறது. என் நண் பருடன் நான் ஒருமுறை காசி சென்று, ஒரு வாரம் அந்த ஊர் சபையில் தங்கியிருந்தேன். அவர்கள் பள்ளி யில் ஜே.கே-யின் பெரிய புகைப் படம் மாட்டியிருக்கிறது.

அன்னிபெசண்ட் அம்மையார் ஜே.கே-யை ஓர் ஆன்மிக உலகத் தலைவராக உருவாக்க 25 ஆண்டுகள் பாடுபட்டார். இதற்கு ஆவியுலக சக்தி களைப் பயன்படுத்தினார் என்று சொல் வார்கள். தியாஸாபிக்கல் சொஸைட்டி அரவணைப்பில் . ஜே.கே. இருந்தபோது ‘எஜமானனின் காலடியில்’ என்றொரு சிறுநூல் எழுதினார். அதை யாரும் எக்காலத்திலும் படிக்கலாம். மலையத் தனை நூல்கள் எழுதிய  அரவிந் தரும் ‘இன்டெக்ரல் யோகா’ என்று ஒரு சிறு நூல் எழுதியிருகிறார். அதையும் யாரும் எக்காலத்திலும் படிக்கலாம். உண்மையில் அவை தரும் தெளிவு தடி தடி புத்தகங்கள் தராது.

திடீரென்று ஒருநாள் ‘நீங்களும் உங்கள் ஆவிகளும்’ என்ற அர்த்தம் தொனிக்க தியாஸாபிக்கல் சபையில் இருந்து ஜே.கே. விலகிவிட்டார். அதற்குள் அவருக்கு அமெரிக்காவில் ஓஜாய் என்னுமிடத்தில் ஒரு மாளிகை யிலும் யாரோ எழுதிக் கொடுத்துவிட்டார் கள். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘வசந்த விஹார்’ மாளிகையிலும் அவருக்கு உரிமை உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

ஜே.கே-யும் ஒரு காலத்தில் மணந்து, குடும்ப வாழ்க்கை நடத்த விரும்பினார். அவர் வளர்க்கப்பட்ட அசாதாரணச் சூழ்நிலை இயல்பாக எதையும் நிகழ விடவில்லை. தமிழர்கள் மணம் முடித்த பிறகுதான் வேட்டியைப் பஞ்ச கச்சம் கட்டிக்கொள்வார்கள். ஜே.கே. பஞ்சகச்சமும் வெள்ளை ஜிப்பாவும் அணிவார்.

ஜே.கே. உலக ஆசானாக இருக்க முடியாது என்று அன்னிபெசண்ட் அறி வித்த பின், அவரே மனித மீட்சிக் கான உரைகள் நிகழ்த்தத் தொடங்கி னார். இதன் பின்னணி தெரிய வில்லை. அவர் உரைகளில் திரும்பத் திரும்ப குருமார்களையும், சாஸ்திரங் களையும் தாக்குவார். சில மதங்களை விட்டுவிடுவார். அவர் மீட்சி அடைந்த நிலை என்பது அனைத்து யோக சாஸ்திரங்களிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அவர் திரும்பத் திரும்பச் சொன்ன ‘கண்டிஷனிங்’ (conditioning) அஞ்ஞானம் என்று கூறலாம். அலுவல கம் செல்லக் கிளம்பியவர் ஸ்கூட்டர் கிளம்ப மறுத்தால் அவர் மனம் என்ன நிலையில் இருக்கும்? அது அஞ்ஞானத் தின் ஒரு கூறு. நம் மனதில் கோடிக்கணக் கில் இப்படி கூறுகள் உள்ளன.

ஜே.கே. தனது பணியாளர்களிடமும் நண்பர்களிடமும் என்ன மொழியில் பேசியிருப்பார்? தெலுங்காக இருக்க லாம். (அவர் தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர்.) அவருக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பெசண்ட் அம்மையாரும் லெட்பீட்டர் பாதிரியாரும் ஜே.கே-யின் இளைய சகோதரர் நித்தியாவையும் சேர்த்துத் தான் பராமரித்தார்கள். ஆனால் நித்தியா அற்பாயுளில் காலமானார். இது ஜே.கே-யை மிகவும் பாதித்தது என்கிறார்கள்.

வருடா வருடம் டிசம்பரில் வசந்த விஹார் மரத்தடியில் நடத்தும் உரை களுக்கும் தடை ஏற்பட்டது. எல்லாம் லௌகீகக் காரணங்கள்தான். ஓராண்டு ஒரு ஜெர்மானியர் வீட்டில் உரை நிகழ்ந்தது. அப்போது ஜே.கே-யின் வழக்கமான நேரம் தவறாமை, சரியாக ஒரு மணி நேர உரை எல்லாம் தளர்ந்திருந்தது. பேசும்போது சிறிது தயக்கத்துடன் பேசியதாகக் கூடத் தோன்றிற்று. அதன் பிறகு அவர் வெகு நாட்கள் இல்லை.

‘நர்மதா’ ராமலிங்கம் ஜே.கிருஷ்ண மூர்த்தி உரைகள், நூல்கள் அனைத் தையும் தமிழில் கொண்டுவர விரும்பி னார். நான் இரு மாதங்கள் ஜே.கிருஷ்ண மூர்த்தி நூல்களாகப் படித்து வந்தேன். ஏதோ புலனாகாதது என்னைத் தடுத்தது. அவரை நேரில் பார்க்க கிருஷ்ணமூர்த்தி அலுவலகத்தில் இருந்தே அழைப்பு வந்தது. நான் போகவில்லை. யாரோ என்னைக் கவனித்திருக்கிறார்கள். தியாஸாபிக்கல் சபை உப தலைவரான என் நண்பர் சிபாரிசு செய்திருக்கலாம். நான் வசந்த விஹார் மாளிகையில் பல மணி நேரம் உட்கார்ந்தேன். ஓர் உண்மையை உணர்ந்தேன்.

ஜே.கே. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதினார். உரையாற்றினார். ஆதலால் அவருடைய செய்திகளை இந்திய மொழிகளில் வெளிப்படுத்த இயலாது. ஏதோ மொழிபெயர்ப்பு என்று செய்து விடலாம். ஆனால், அது என் வரை நாணயமான செயலாக இருக்க முடி யாது. 500 ஆண்டுகளுக்கு முன்பு விவிலியத்தை ஆங்கிலப்படுத்திவிட் டார்கள். ஏசு சிலுவையில் தொங்கும் போது சொன்ன ‘எலி எலி லாமா சபக்தனி’ என்பதை ஏன் யாரும் ஆங்கிலப்படுத்தவில்லை?

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x