Last Updated : 12 Feb, 2017 11:27 AM

 

Published : 12 Feb 2017 11:27 AM
Last Updated : 12 Feb 2017 11:27 AM

உள்ளுணர்வின் குரலே படைப்பின் ஆன்மா

எழுத்து ஆன்மாவின் நுண்மொழி. அது எப்போதும் கிளம்பிவரும் கடலலை அன்று, எப்போதோ வெளிக் கிளம்பும் புதுப்புனல். உயர்ந்த எழுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு உள்ளார்ந்த பொருளை மவுனமாகத் தரும். அதே படைப்பு அதே வாசகருக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பொருளைத் தந்துகொண்டேயிருக்கும்.

ஊடக கவனம் இல்லா நாட்களில் மௌனி எழுதியது 24 கதைகள்தான். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் எழுதியது நூற்றுக்கும் குறைவான கதைகளைத்தான். ந. பிச்சமூர்த்தி எழுதாமலேயே பல ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

அச்சு இயந்திரத்தின் விரைவோடு போட்டிபோட்டு எழுத வேண்டிய சூழல், பதிப்பகங்களின் விருப்பத்துக்கும், இதழ்களின் தொடர்களுக்கும் எழுத வேண்டிய நிர்பந்தம் இவற்றால் காலம் கடந்து நிற்கும் தரத்தை இழக்கும் நிலைக்குப் படைப்பு உட்படுகிறது.

சந்தர்ப்பத்தினாலோ நிர்ப்பந்தத்தினாலோ எழுதிக் குவிக்கப்படும் எழுத்துகள் எப்படித் தரமுடையதாய் அமையும்? கால ஓட்டத்தில் எஞ்சி நிற்கப்போவது தரமான சில நூறு பக்கங்கள்தான். எவ்வளவு எழுதினார்கள் என்பதைவிட எழுதியதில் எழுத்தாக மிஞ்சியது எது என்பதைக் காலமும் காலம் கடந்து நிற்கும் எழுத்தும் காட்டிவிடுகின்றன.

எழுத்து சுய அனுபவத்தின் திரட்சி. மொழியின் சுருக்கெழுத்து. மிதமிஞ்சி எழுதப்படும் படைப்பு ஏற்கனவே அதே படைப்பாளியால் எழுதப்பட்ட இன்னொரு படைப்பின் வேறு விதமான நகல் என்பதை வாசகன் உணரும் நேரத்தில் அப்படைப்பாளியின் படைப்புகளை விட்டு வாசகர் அப்பால் நகர்கிறார்.

எது இலக்கியம்?

மௌனியோடு கி. அ.சச்சிதானந்தம் நடத்திய நேர்காணலில் இலக்கியத்துக்கான வரையறையை மௌனி, “எதைச் சொல்லுகிறோம் என்பது, எப்படிச் சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றை விட்டால் இரண்டும் கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது” என்கிறார்.

சுபமங்களா நேர்காணலில் வண்ணநிலவன், “இலக்கியம் என்பது சங்கீதம், ஓவியம் மாதிரி கலை சம்பந்தப்பட்டதுதான். இது வாழ்வு சம்பந்தப்பட்டது என்கிறோம். இதில் நாட்டுப் பிரச்சினையோ வீட்டுப் பிரச்சினையோ இருக்கலாம். சமூகப் பிரச்சினையைச் சொல்வதுதான் அதற்கு அளவு என்று சொல்ல முடியாது. இலக்கியத்தில் முதலும் முடிவுமானது ரசனைதான்” என்று சொன்னார். ரசனை இல்லாமல் இலக்கியம் படைக்கவோ படிக்கவோ முடியாது.

யாராலும் நகல் எடுக்க முடியாத படைப்பைத் தர எழுத்தாளன் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விருதுகளாலும் ஊடக ஊக்குவிப்புகளாலும் ஒரு படைப்பு கவனம் பெறுமே தவிர அதன் தரமும் உண்மைத்தன்மையும் அதைக் காலம் கடந்து நிலைக்க வைக்கும்.

ஒரு படைப்பை இன்னொரு படைப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இன்று சிரமப்படத் தேவையில்லை, கணினியின் சுட்டியாலும் தேடுபொறிகளின் உதவியாலும் ஒரு வினாடிக்குள் எந்தப் படைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்துவிட முடியும். இன்று படைப்பாளி எழுதிய பின் தானே மீண்டும் வாசித்து, தொகுத்து, வகுத்து, வெட்டி, சரியான, முழுமையான பிரதியாக அச்சுக்குத் தருவதே முறையானதாய் அமையும்.

எழுதிக் குவிக்கலாமா?

தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய பிம்பம் தன் படைப்பு குறித்த போலி பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். முழுமையை நோக்கிய கவனமான நகர்த்துதலை மேற்கொள்ளாத எந்தப் படைப்பையும் தரமான வாசகன் புறந்தள்ளி விடுவான். எனவே படைப்பு நேர்த்தியோடு இயைந்த நுண்கவனத்தோடு மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் சிறுதொடுகையால் உட்சுற்றிக்கொள்கிற ரயில் பூச்சியைப் போல் சுருங்கிப்போக நேரலாம். பல படைப்பாளிகளின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கும் திறமான வாசகர் எழுத்தின் உண்மைத்தன்மையை உய்த்துணர்ந்துவிடுவார். எழுத வேண்டும் என்று உள்ளுணர்வு கிளர்ந்தெழுந்தால் மட்டுமே எழுத வேண்டுமே தவிர எப்போதும் எழுதிக் குவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

க.நா.சு.வோ, சி.சு.செல்லப்பாவோ, பி.எஸ்.ராமையாவோ, புதுமைப்பித்தனோ படைப்பாளியாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எது நிராகரிக்க வேண்டிய படைப்பு என்பதை வெகு துணிச்சலாக தயவுதாட்சண்யமின்றிக் காரணங்களோடு எழுதிய திறனாய்வாளர்களாக இருந்தார்கள். அதனால் ஒரு படைப்பின் விமர்சனம் அடுத்த படைப்பைக் கவனமாகப் படைப்பதற்கான ஓர்மையைப் படைப்பாளிகளுக்குத் தந்தது. அதனால் தன்னை மங்கலாக்கித் தான் சொல்ல வந்த கருவை அவர்களால் அழுத்தமாகத் தர முடிந்தது. இன்று பலரிடத்தில், படைப்பை விடத் “தான்” துருத்தி நிற்பதால் படைப்பு படைப்பாளியின் கண்முன்னேயே நீர்த்துப்போகிறது. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ மொழிநடையாலும் கருவாலும் எடுத்துரைக்கும் நேர்த்தியாலும் இன்றுள்ள தலை முறைக்கும் வெகு நெருக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட படைப்புகள் இன்று எத்தனை தேறும்?

- சௌந்தர மகாதேவன், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், வண்ணதாசன் நூலாசிரியர். தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x