Published : 07 Jun 2017 10:32 AM
Last Updated : 07 Jun 2017 10:32 AM

திசையில்லாப் பயணம் 9: நாளென ஒன்றுபோல் காட்டி!

டெல்லியில் நான் இருந்தபோது, மூத்த பத்திரிகை நிருபர் ஒருவரை என் நண்பர் அறிமுகம் செய்துவைத்தார். நிருபர் பெயர் கிஷன் சபர்வால். எல்லைப் புற மாநிலத்தைச் சேர்ந்தவர். நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர். ஜப்பானிய செய்தி நிறுவனத்துக்கு நிருபராக இருந்தார். நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்று நண்பர் சொன்னார்.

அவர் வயதை ஊகிக்க முடியவில்லை. அறுபதும் இருக்கலாம், எண்பதும் இருக்கலாம்.

‘‘எனக்கு என்ன வயது இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?’’ என்று கேட்டார் சபர்வால் சிரித்துக்கொண்டே.

‘‘உங்களுக்கு ‘டெலிபதி’ தெரியுமா?’’ என்றேன் நான்.

‘‘என்னை முதலில் பார்க்கும் எல்லோருடைய மனத்தில் எழும் முதல் கேள்வியே இதுதான். என் வயது ஐந்து’’என்றார் புன்னகையுடன்.

நான் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன்.

‘‘ருடால்ஃப் எஹ்ரன்பர்க் படித்திருக்கிறீர் களா?’’

‘‘இல்லை…’’

சபர்வால் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.

‘‘அவர் ஓர் விஞ்ஞானி. அவர் கருத்தின்படி, ஒருவன் இன்னும் எத்தனை ஆண்டுகள் மற்றவர் களுக்குத் தொந்தரவு கொடுக்காமல், பணியாற்ற முடியும் என்பதை வைத்துதான் அவன் வயதைக் கணக்கிட வேண்டும். இன்னும் ஐந்தாண்டுகள் என்னையே நம்பிப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால்தான், ஐந்து வயது என்றேன். அந்த அளவுக்கு என்னிடம் இன்னும் ஐந்தாண்டு ஆற்றல் எஞ்சியிருக்கிறது!” என்றார் சபர்வால்.

அப்போது எனக்கு அமெரிக்க உளவியல் அறிஞர் கார்ல் யூங் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் எந்த அளவுக்கு அவரால் சாதிக்க இயலும் என்ற துலாக்கோல் இருக்கிறது. அது தன் எல்லையை அடைந்த நிலையில், பிறகு இயக்கமே இருக்காது. அவர் தம் ஆற்றல்கள் முழுவதையும் பயன்படுத்திவிட்டார் என்று அர்த்தம். அப்போதுதான் ஆற்றலின் அல்லது அவர் உடலின் மரணம் சம்பவிக்கிறது.

ஜோசப் தியோடர் கான்ராட் கொர்ஸெனி யோஸ்கி என்ற எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஜோசப் கான்ராட் என்கிற பெயரில் புகழ்பெற்ற இந்த ஆங்கில எழுத்தாளர், போலந்தைச் சேர்ந்தவர். 21 வயது வரை அவருக்கு ஆங்கிலம் சுத்தமாகவே தெரியாது. பிரிட்டிஷ் கப்பல் துறையில் சேர்ந்து உலகம் சுற்றியவர். 35 வயதில் தம் முதல் நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர். பிறகு ‘ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்’, ‘லார்ட் ஜிம்’ போன்ற அற்புதமான நவீனங்களை எழுதினார். ‘நவீனத்துவத்தின் பிதா மகர்’ என்று அவரை அழைப்பது உண்டு. அவர் இறந்துபோவதற்கு முன் 13 ஆண்டுகள் அவர் எழுதவே இல்லை. 67 வயதில் அவர் இறந்தார்.

அவர் இறந்து போவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென்று சுத்தமாக ஆங்கில மொழியை மறந்து, போலிஷ் மொழியில் பேசத் தொடங்கிவிட்டாராம். அவருக்கே, தாம் தம் தாய்மொழியில் பேசுகிறோம் என்கிற நினைவே இல்லையாம். அதாவது, அவர் சிருஷ்டி ஆற்றலின் முழு எல்லையும் சாத்தியமான பிறகு, அவருக்குள் இருந்த படைப்பாளியின் மரணம் சம்பவித்திருக்கின்றது. ஆங்கிலமும் மறந்துவிட்டது. இறுதிக் காலங்களில் எழுதவும் முடியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் சில மேதைகள் இளமையிலேயே இறந்துபோவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதிசங்கரர், விவேகானந்தர், பாரதி, கணித மேதை ராமா னுஜன், ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் சாதனையின் எல்லையை அடைந்த நிலையில்தான் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

சபர்வால், அவர் சொன்னபடி ஐந்தாண்டுகளும் சில மாதங்கள் கழித்து இறந்தபோதுதான், அவர் குறிப்பிட்ட ருடால்ஃப் எஹ்ரன்பர்க் என் நினைவுக்கு வந்தார். சபர்வால் இறந்தபோது, அவர் காலண்டர் வயது தொண்ணூறு.

மரணத்தைக் கண்டு அஞ்சக் கூடாது என்பதற்காகத்தான் ருடால்ஃப் அப்படிச் சொல்லி யிருப்பாரோ என்று தோன்றுகிறது. ‘காலா என் காலருகே வாடா’என்று சொன்ன பாரதி, 39-வது வயதில் இறந்தார். நம் நாட்டைக் காட்டிலும், மேல் நாடுகளில் மரணத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். காரணம், நம் நாட்டைக் காட்டிலும் அங்கு மனித உயிரின் விலை அதிகம். இந்தியாவில் இப்போது பசுவின் உயிர் விலை, மனித உயிரின் விலையைவிட அதிகம்!

கனடா மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில், ‘மரணமும் இறந்துகொண்டிருத்தலும்’(Death and dying) என்ற ஒரு துறை இருந்தது. அந்தத் துறை மாணவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். நான் அங்கு போயிருந்தபோது, வயதான பெண்மணி ஒருவர் என்னைக் கேட்டார்: ‘‘இந்தியாவில் நீங்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’’

நான் சொன்னேன்: ‘ ‘இந்தியாவில் நாங்கள் மரணத்தை முற்றுப்புள்ளியாகக் கருதுவதில்லை. எங்களுக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால், இறந்துபோன தாத்தாவோ, பாட்டியோ மீண்டும் பிறந்திருக்கிறார் என்று சொல்வது வழக்கம். அதனால்தான் சாவு அச்சுறுத்தும் செய்தியாக எங்களுக்கு இருப்பதில்லை’’ என்றேன்.

அப்போது ஒரு கிழவர் கேட்டார்: ‘‘நான் வாரணாசியைப் பற்றி ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அதில் கங்கை ஆற்றில் பாதி எரிந்தும், பாதி எரியாததுமான உடல்களைக் கங்கை ஆற்றில் தூக்கி எறிகிறார்கள். இதனால், சாவைக் கண்டு நீங்கள் அஞ்சவில்லை என்பது புரிகிறது. ஆனால், ஆற்றை அசுத்தப்படுத்த வேண்டுமென்பது அவசியம்தானா?’’

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது தயங்கினேன்.

என் சங்கடத்தைப் புரிந்துகொண்டவர்போல், இன்னொருவர் கேட்டார்: ‘‘பிறப்பதும் அபத்தம், இறப்பதும் அபத்தம் என்கிறாரே சார்த்ரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’’

‘‘2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கவிஞர் ஒருவர் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்’’ என்றேன் நான்.

‘‘என்ன பேசியிருக்கிறார்?’’

‘‘காலம் என்பது ஒரு கற்பனை. அதை ஒரு மாபெரும் வாளாக நினைத்துப் பாருங்கள். அந்த வாளில், மனித உயிர் ஒவ்வொன்றும், ஒரு நாள் கழிந்தது என்ற பாவனையில் தொடர்ந்து அறுபட்டுக்கொண்டே போகின்றது. பாவனையாக இருந்தாலும், இந்த வாழ்நாள் எல்லைக்குள் தம் ஆற்றலைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று, எல்லாவற்றையும் உணர்கின்றவர்கள் முயற்சிக்கிறார்கள் என்கிறார் கவிஞர். அபத்தத்தை முறியடிக்கும் வழியும் இதுதான்’’ என்று விளக்கமாகச் சொன்னேன்.

‘‘அந்தக் கவிதையை உங்கள் மொழியில் சொல்லுங்கள்’’ என்று கேட்டார் ஒரு பெண்மணி.

‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்’

- என்று குறளைச் சொன்னேன்.

அவர்கள் குறளை ரசித்திருக்கக்கூடுமென்று எனக்குத் தோன்றியது.

- பயணம் தொடரும்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x