Published : 21 Jan 2017 10:48 AM
Last Updated : 21 Jan 2017 10:48 AM

புத்தகக் காட்சியின் புத்தகம்: பெரியார் அன்றும் இன்றும்

புத்தகக் காட்சியின் புத்தகம்

சந்தேகமில்லாமல் இந்தப் புத்தகக் காட்சியின் நாயகர் ‘பெரியார்’தான். பெரியாருடைய எழுத்துக்களிலிருந்து பொருள்வாரியாகப் பிரித்து விடியல் பதிப்பகம் வெளியிட்ட‘பெரியார் இன்றும் அன்றும்’ என்ற பென்னம்பெரிய புத்தகத்துக்குதான் விற்பனையில் முதலிடம். கெட்டிஅட்டை, பெரிய வடிவம் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் என்றாலும் விலை ரூ. 300 என்பதால் வாசகர்கள்அள்ளிச் சென்றார்கள். புத்தகக் காட்சியிலேயே இரண்டு பதிப்புகளும் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. பெரியார் இன்றும் என்றும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம்தான் இது.

இப்படி ஏமாற்றலாமா?!

புத்தகக் காட்சிகளில் இலக்கியக் குடுமிபிடிச் சண்டைகளை எதிர்பார்ப்பவர்களை ஒரேயடியாக இந்த ஆண்டு ஏமாற்றியவர்கள் சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும்தான். அராத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் அவர்களிடம் கேட்கப்பட்ட கலாட்டாவான கேள்விகளுக்குக் கலாட்டாவாகப் பதிலும் அளித்தார்கள். ‘நீங்களும் கமலும் இரண்டு பேருமே நிறைய நேரம் விடாமல் பேசக்கூடியவர்கள். நீங்கள் சந்தித்துக்கொண்டால் உங்களில் யார் அதிகம் பேசுவீர்கள்’ என்று சாரு கேட்டதற்கு, ‘ஒருவர்தான் பேசுவார், அவர் பேசியதைக் கேட்டு நாம் இன்னொருவரிடம் அதைப் பேசிக்கொள்ள வேண்டியதுதான்’ என்று பதிலளித்து அசத்திவிட்டார் ஜெயமோகன்.

தமிழிலும் ‘புக் மார்க்’

தமிழ் எழுத்தாளர்களுக்கான ‘புக் மார்க்’குகளை உருவாக்கியிருக்கிறார் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன். முதலாவதாக, எஸ். ராமகிருஷ்ணனின் வாசகங்களை வைத்து இந்தப் பக்க அடையாளங்களை உருவாக்கியிருக்கிறார். மற்ற பதிப்பகங்களும் இதைப் பின்பற்றலாமே!

விரல்களின் நாள்காட்டி!

எழுத்தாளர்கள் நாள்காட்டி, சமையல் நாள்காட்டிக்கு நடுவில் புத்தகக் காட்சியில் அட்டகாசமான மற்றுமொரு நாள்காட்டி ‘க்ரியா’ அரங்கில் காணக் கிடைத்தது. அது மதுரையின் ‘இந்திய பார்வையற்றோர் சங்கம்’ வெளியிட்ட பார்வையற்றோருக்கான நாள்காட்டி. விரல்களுக்குத் தேதி சொல்லும் அற்புதமான நாள்காட்டி!

புத்தகக் காட்சியில் தமிழ்ச் சிறுகதைக்கு மரியாதை!

தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டை முன்னிட்டுப் பொங்கல் தினத்தன்று புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் கையெழுத்திடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை பிரபஞ்சன் தொடங்கிவைத்தார். எஸ். ராமகிருஷ்ணன் முதல் கையெழுத்தை இட, தொடர்ந்து சா. கந்தசாமி, சாரு நிவேதிதா, வேல. ராமமூர்த்தி, மாலன், பாஸ்கர் சக்தி, கௌதம சித்தார்த்தன், சந்திரா, ஜே.பி. சாணக்யா உள்ளிட்ட எழுத்தாளர்களும் கையெழுத்திட்டனர். புத்தகக் காட்சியின் மறக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்றாக இது ஆனது.

கவ்வாலியுடன் ரூமி!

இப்போதெல்லாம் புத்தகங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் இசை, பாடல்கள் முக்கிய இடம்பெறுகின்றன. சமீபத்தில் எஸ். சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற ரூமி கவிதைகள் நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. கே.எம். சூஃபி கவ்வாலி இசைக்குழுவின் கவ்வாலி இசையுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழா பலருக்கும் இனிய, புதிய அனுபவம்.

பளிச் புத்தகம்!

புதிய வரவுகளில் பளிச்சென்று கண்ணைப் பறித்தது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும், சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலின் 50-ம் ஆண்டு சிறப்புப் பதிப்பு. கண்ணை மட்டுமல்ல கையையும் கவரும் கெட்டி அட்டைப் பதிப்பு இது. வருடிப் பார்க்கத் தூண்டும் அட்டை! உள்ளே அந்த நாவலின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் கோட்டோவி யங்களும் இடம்பெற்றிருக் கின்றன.

முக‘மூடி’ புகைப்படம்

யுவகிருஷ்ணாவின் ‘அழிக்கப் பிறந்தவன்’ புத்தகத்தைக் கொண்டு முகத்தை மறைத்தபடி புகைப்படம் எடுத்திருப்பவர்கள் யார்யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? முயன்று பாருங்களேன்!

பணமதிப்பு நீக்கம் ஆள்கிறது!

பணமதிப்பு நீக்கத்தைப் பற்றி மொத்தம் நான்கு கட்டுரை நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பொருளாதார நிபுணர் ஜெ. ஜெயரஞ்சனின் ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’, ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’, நரேன் ராஜகோபாலனின் ‘கறுப்புக் குதிரை’, ஷ்யாம் சேகரும் தேவராஜ் பெரியதம்பியும் எழுதிய ‘பணமதிப்பு நீக்கம்’ ஆகிய நூல்கள்தான் அவை. இந்த வரிசையில் கூடுதலாகஒரு நாவலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எஸ். அர்ஷியாவின் ‘நவம்பர் 8 2016’தான் அந்த நாவல். உடனடி எதிர்வினையில் மலைக்க வைத்திருக்கிறார்கள் நம் எழுத்தாளர்கள்!

ஒரு தலைப்பு!

விதவிதமான புத்தகங்கள், விதவிதமான வடிவமைப்புகள் போல் விதவிதமான தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியாகின்றன. ‘பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியாகி யிருக்கிறது. இரா. கௌதமன் எழுதிய புத்தகம் இது. சிரிக்க வைக்கும் தலைப் பென்றாலும் புத்தகம் கொஞ்சம் சீரியஸானதுதான்!

சைக்கிள் வாசிப்பு!

புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கோவையி லிருந்து 40-வது சென்னை புத்தகக் காட்சிக்கு சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் என். நிஜின்.

ஒரு குபீர் பதிவு!

புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பு அதிஷாவின் பேஸ்புக் பதிவு!

பெரிய செல்ஃபி

புத்தகக் காட்சியின் அரங்கு வாயிலுக்குள்ளே நுழைந்தவுடன் பளிச்சென்று நம்மை வரவேற்றது ‘பிக் செல்ஃபி பூத்’. ‘சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம்’ போன்று நம் முன்னே ஒரு கணினித் திரை! அதன் முன்னால் நின்றால் நம் உருவம் அந்தத் திரையில். செல்ஃபி இலவசம்தான். ‘புக்கு வாங்கப் போனேன், செல்ஃபி வாங்கி வந்தேன்’ என்று மனதுக்குள் பாடிக்கொண்டே பலரும் வீடு திரும்பினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x