Last Updated : 05 Oct, 2013 04:10 PM

Published : 05 Oct 2013 04:10 PM
Last Updated : 05 Oct 2013 04:10 PM

நல்லாறுகளும் தடுப்பரண்களும்

'ஆசாரக்கோவை' என்பதற்கு நன்னடத்தைகளின் தொகுப்பு எனப்பொருள் கூறலாம். ஸ்மிருதிகளுடன் ஒப்பவைத்துக் கருதத்தக்கதாக 'ஆசாரக்கோவை' திகழ்கிறது. இந்நூலின் ஆசிரியர் , 'கயத்தூர் பெருவாயின் முள்ளியார்' ஆவார். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாயின் என்பது இவரது தந்தையின் பெயராகவோ,கயத்தூர் என்ற ஊரின் பகுதியாகவோ இருக்கலாம்.

பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் போன்ற நூல்களின் உரைகளில் இந்நூற் செய்யுள்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

சுக்கிர ஸ்மிருதி எனப்படும் உஸனஸ் ஸம்ஹிதை, ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், மனு தர்ம சாஸ்திரம், ஸங்க ஸ்மிருதி, லகுஹாரித ஸ்மிருதி, லகுசாதாதபம், லகு அத்திரி ஸ்மிருதி ஆகியவை எல்லாம் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன என்கிறார் வையாபுரிப்பிள்ளை.

மேல்கீழ் பேதங்களை இந்நூல் கண்டிக்கவில்லை என்று் இந்நூல் குறித்து விமர்சனம் உள்ளது. “எனினும், இந்த ஆசாரக்கோவையிலே சாதிக்கொரு நீதியென்று பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு. எனவே, ஆசாரக்கோவையை ஒரு 'பொதுச்சுகாதார நூல்' என்றே சொல்லிவிடலாம்” என்பார் சாமி. சிதம்பரனார்.

ஆசாரக்கோவை சொல்வது போல், சுத்தமாக இருப்பது என்பது அனைவருக்கும் நன்மை தருவதுதான். ஆனால், சுத்தத்தின் பெயரைச் சொல்லி, இன்னொருவரை 'நீ அசுத்தம்' என ஒருவர் தாழ்மைப்படுத்தும்போது, அங்கு அதிகாரம் 'பிறர் வாழ்வுரிமையில்' குறுக்கிடும் 'அத்துமீறல்' நிகழ்கிறது. இதை மனிதநேயம் கொண்டோர் ஏற்பதற்கில்லை.

ஆனால் எறும்பின் சுறுசுறுப்புடனும், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனுடனும், கூடிவாழும் காக்கையின் பெருங்குணத்துடனும் மானுடர் வாழப் பழகவேண்டும் என ஆசாரக்கோவை கூறுவதை ஏற்பதில் தடையில்லை. (பா.96) பல்லுயிர் பேணும் பண்பாடாகவும், இதனைக் காணலாம்.

அறியாத தேசத்தான், வறியோன், மூத்தோன்,சிறுவன் தொடங்கி ஒன்பதுபேருக்கு் ஆசாரக்கட்டுப்பாடு இல்லை என்கிறார் முள்ளியார். எனவே, நெகிழ்வான மற்றும் நீக்குப்போக்கான பொதுச் சுகாதார நூலாக இது அமைகிறதெனலாம்.

இரண்டாம் பாலினமாகப் பெண்களைக் கருதுதல், அரசர்- அந்தணர் முதலிய அதிகார வர்க்கத்தாரைப் போற்றுதல், சாதி அமைப்பைப் பாதுகாத்தல், நிலவுடைமைச் சமூகப் பழக்க வழக்கங்களை ஆதரித்தல், பிறப்பு முதல் இறப்பு வரையிலான மானுட வாழ்வை இனி எப்போதும் மாற்ற முடியாத வகையில் ஒழுங்குபடுத்தத் திட்டமிடல், உலக வாழ்வைப் பெரிய சிக்கல்கள் இல்லாமல் மன இசைவுடன் கடப்பதற்குரிய நடைமுறை ஒழுகலாறுகளை வலியுறுத்தல் என 'உலகியல்' நீதிநூலாக ஆசாரக்கோவையைத் துணியலாம். வாழ்க்கை வெறுப்பை விடவும் வாழ்க்கை விருப்பே ஆசாரக்கோவையில் மிகுந்துள்ளது.

நடைமுறை மனித வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்பாடுகளையும் கணக்கிலெடுக்கும் பொதுவான வாழ்முறை ஒன்றை, வைதீக மேலாண்மைச் சாய்வுடன் நிலைநிறுத்தும் முயற்சியே ஆசாரக்கோவையில் செய்யப்பட்டுள்ளது. சமண, பௌத்தத்தின் சிறப்பான கொள்கைகள் பலவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு, அதேநேரத்தில் சாதியமைப்பையும் வைதீகம் தக்கவைத்துக்கொண்ட வரலாறே ஆசாரக்கோவையின் சாரமாகும்.

மனிதன் மகத்தானவன், தவறுகள் செய்ய அவன் தயங்குவதில்லை, தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறிச் செல்லவும் அவன் அறிவான். சுதந்திர வெளியில் செயல்படும் அவனது நடமாட்டம், அப்படியே விடப்பட்டால், அது அவனுக்கே ஆபத்தாகிவிடலாம் என்ற அக்கறையால்தான் அறநூல்கள் தோன்றுகின்றன. விதிகள் தோன்றும்போதே, விதிவிலக்குகளையும் மனிதன் தோற்றுவித்துவிடுகிறான். தம் விதிகளுக்குள் மனிதன் முழுமையாகக் கட்டுப்பட்டுவிட மாட்டான் என்பதைப் பிறரைவிடவும் அறநூல் ஆசிரியர்கள் நன்கறிவர். எனினும், வேகத்தடைகளை, தடுப்பரண்களை எழுப்பும் முயற்சிகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இப்படித்தான் ஆசாரக்கோவை ஆசிரியரும், பலவகை ஒழுக்கவிதிகளை மனிதனுக்கு வகுத்துத்தர முனைந்துள்ளார். இவற்றுள் பல ஆளுவோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்டவைதாம். ஆனால், அனைவருக்கும் பயன்படும்வகையிலான சில நல்லாறுகளையும் அவர் உருவாக்கித் தந்துள்ளமையை மறுத்துவிடுவதற்கில்லை.

சனநாயக காலத்துக்கு ஒவ்வாத ஒழுக்க நியதிகளை இந்நூல் தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், நம் புறவாழ்வின் பொதுநியதிகளையும்- அகவாழ்வின் அடிப்படை ஒழுங்குகளையும் கட்டமைப்பது பற்றிய ஓர் இன்றியமையாத சமூகத்தேவையை இந்நூல் அதற்குரிய 'வைதீக' நோக்குடன் முன்னெடுத்துள்ளதையும் காணத்தான் வேண்டும்.

காக்கை வெண்ணிறமுடையது என்று மன்னன் கூறினால் மறுக்காமல் அதையும் ஏற்றுககொள் என்கிறார்; பெருவாயின் முள்ளியார்; இதுதான் ஆசாரக்கோவையின் கருத்துக்களம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x