Published : 02 Jan 2017 10:50 AM
Last Updated : 02 Jan 2017 10:50 AM

எனது வாசிப்பு - தோப்பில் முஹம்மது மீரான்

நான் படித்தது மலையாள வழியில். கல்லூரியிலும் மொழிப் பாடம் மலையாளம்தான். எங்களது பாடத் திட்டத்தில், குமாரன் ஆசான், வள்ளத்தோள் நாராயண மேனன் ஆகியோரின் படைப்புகள் இருந்தன. சி.வி. ராமன் பிள்ளையின் 'மார்த்தாண்ட வர்மா' நாவல், என்.வி. கிருஷ்ணவாரியரின் 'உணருன்ன உத்தர இந்தியா' அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.

பாடத்திட்டத்தில் படித்தது அல்லாமல் வெளியேயும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முதலில் எளிமையான எழுத்துகளைப் படித்தேன். முட்டத்து வர்கி, வல்லச்சிரா மாதவன், மொய்து படியத்து ஆகியோரின் எழுத்துகள் தொடக்கத்தில் என் விருப்பமாக இருந்தன. ஆனால், இந்த எளிய வாசிப்பு எனக்குப் போதுமானது அல்ல என்பதை அடுத்த கட்ட வாசிப்புக்கு நகர்ந்தபோது தெரிந்துகொண்டேன். அடுத்த கட்ட தீவிர வாசிப்பில் முதலில் நான் கண்டுபிடித்த எழுத்தாளர் பஷீர். அவரது 'பால்யகால சகி'தான் நான் முதலில் வாசித்த அவருடைய நாவல். ஒரு வகையில் நானும் கதை எழுதலாம் என்ற நம்பிக்கையை அளித்ததும் இந்த நாவல்தான். பஷீரின் எழுத்து எனக்கும் என் உலகத்துக்கும் அருகில் இருந்தது. உதாரணமாக 'பால்யகால சகி' நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் போன்றவர்கள் எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள். அவர் கதையில் வரும் பெயர்களும்கூட எனக்கு மிக நெருக்கமானவை. அவரது மொழியும், அவரது கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையும்கூட எனக்கு மிக நெருக்கமானவையாக இருந்தன. அதனால் நானும்கூட எழுதலாம் என நினைத்தேன். எழுதினேன்.

பஷீருக்கு அடுத்து தகழியின் செம்மீன் படித்தேன். பிறகு உருப் என்னும் புனைபெயரில் எழுதிய பி.சி. குட்டிகிருஷ்ணன் மேனனின் புத்தகங்களும் வாசித்தேன். எம்.டி. வாசுதேவநாயரின் 'நாலுகெட்டு' எனக்குப் பிடித்த நாவல்.

'கோபல்ல கிராமம்' 'ஒரு புளிய மரத்தின் கதை' இந்த இரு நாவல்கள் தமிழில் நான் முதன்முதலில் வாசித்தவை. கி. ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' நாட்டுப்புறக் கதை வடிவிலான ஒரு நாவல். வரலாற்றுப் பின்னணியுடன் சொல்லியிருப்பார். சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யை ஒரு தொன்மக் கதை மாதிரி சொல்லியிருப்பார். இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன. தமிழில் மலையாளத்தைப் போல் நவீன இலக்கியம் உருவாகவில்லை எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், தொடர்ந்த என் வாசிப்பின் மூலம் இது மாறியது. மலையாளத்துடன் ஒப்பிட முடியாத தனித்துவம் கொண்டது தமிழ் நவீன இலக்கியம். புதுமைப்பித்தனுடன் ஒப்பிடத் தகுந்த கதைகள் மலையாளத்தில் இல்லை. அதேபோல தி. பத்மநாபனின் கதைகள் போல் தமிழிலும் எழுதப்படவில்லை.

மலையாளத்தில் 'பிரவேசி இலக்கியம்' என்ற புது வகை ஒன்று உருவாகியுள்ளது. இந்த வகையில் குறிப்பிடத் தகுந்த நாவல் பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்'. அரபு நாடு ஒன்றுக்கு வேலை தேடிப்போகும் ஒருவன், ஏமாற்றப்பட்டு அவனது வாழ்க்கை ஆடுகளுடன் கழிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதை இந்த நாவலில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் ஒன்று உருவாகியுள்ளது. மலையாளத்தில் இதுபோன்று ஒன்று உருவாகவில்லை. இந்த வகையில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தத்ரூபமாகச் சொல்லப்படுகிறது. பூமணியின் 'பிறகு', சோ. தர்மனின் 'கூகை'போன்ற நாவல்களை இந்த வகைக்கான உதாரணங்களாகச் சொல்லலாம். விளிம்புநிலை வாழ்க்கையை எழுதும் மலர்வதியின் 'காட்டுக்குட்டி'யும் சிறந்த வரவு என்பேன்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் தொடர்ந்து வாசிப்பேன். ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவாபட்டாவின் 'உறங்கும் அழகிகளின் விடுதி' என்ற நாவலின் மொழியாக்கத்தை சமீபத்தில் படித்தேன். மலையாள எழுத்தாளர் விலாசினி அதை ஜப்பானிய மொழியிலிருந்து 'சகசயனம்'என்னும் பெயரில் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். குட்டி நாவல் இது. ஆனால், உலக அளவில் பெயர்பெற்ற நாவல். ஒரு சிறந்த நாவலுக்கு பக்கங்கள் அல்ல அளவுகோல் என்பதற்கு இந்த நாவல் ஒரு எடுத்துக்காட்டு. ஜப்பானில் வயதானவர்களுக்காகத் தனியாக விடுதிகள் உண்டு. அந்த விடுதிகளில் அவர்களின் இச்சையைத் தணிக்கும் விதத்தில் இளம் பெண்கள் அவர்களுடன் படுத்துறங்கு வார்கள். உறங்குவதற்கு மட்டும்தான் அனுமதி. உடன் உறங்கும் பெண்களைத் தொடக்கூட அனுமதி கிடையாது. அப்படி ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் உறங்குவதை ஒரு வயோதிகப் பெண் கவனித்துக் கொண்டிருப்பார். விசித்திரமான ஒரு உலகை இந்த நாவலுக்குள் சொல்லியிருப்பார் யசுனாரி கவாபட்டா.

பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தாலும் இன்றும் எனக்கு பிரமிப்பாக இருக்கும் நாவல் கேசவ ரெட்டி எழுதிய 'அவன் காட்டை வென்றான்'. தெலுங்கிலிருந்து ஏ.ஜி. எத்திராஜூலு தமிழில் மொழிபெயர்த்திருந்தார். ஒரு கிழவன் இரண்டு பெண் பன்றிகளை வளர்த்துவருவான். அவை இரண்டும் சினைப் பன்றிகள். அவற்றில் ஒன்று குட்டிகளை ஈன்றுவிடும். மற்றொன்று இன்றோ நாளையோ ஈன்றுவிடும் என நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் காணாமல் போய்விடும். அதைத் தேடி கிழவன் அருகில் இருக்கும் காட்டுக்குள் செல்வான். அந்தக் கிழவன் வழியே காட்டைப் பற்றியும் அதிலுள்ள தாவரங்களைப் பற்றியும் விலங்குகள் பற்றியும் சொல்லியிருப்பார். நாம் அறியாத உலகத்தை பிரமாதமாகத் தந்த நாவல் இது.

- தோப்பில் முஹம்மது மீரான், மூத்த தமிழ் எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x