Last Updated : 04 Sep, 2016 12:13 PM

 

Published : 04 Sep 2016 12:13 PM
Last Updated : 04 Sep 2016 12:13 PM

தி இந்து நாடக விழா: மாறும் தமிழ் அரங்கம்

தி இந்து நாடக விழாவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று தமிழ் நாடகங்கள் சென்னை எழும்பூரில் இருக்கும் அருங் காட்சியக அரங்கத்தில் ஆகஸ்ட் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. ‘ஆயிரத்தியொரு இரவுகள், ‘முந்திரிக்கொட்ட’, ‘வண்டிச்சோடை’ என்ற இந்த மூன்று நாடகங்களுமே பார்வையாளர்களுக்கு மூன்றுவிதமான அனுபவங்களை வழங்கின...

நகைச்சுவையால் திணறடித்த பாக்தாத்!

எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையில் சமகால மசாலா அம்சங்களை இணைத்து ஒரு புதுமையான நகைச்சுவை விருந்தைப் படைத்திருந்தது ‘ஆயிரத்தியொரு இரவுகள்’. தொண்ணூறு நிமிடங்கள் நடந்த இந்த நாடகம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளர்களை முழுமையாக நகைச் சுவையால் கட்டிப்போட்டிருந்தது. இந்நாட கத்தை எழுதி, இயக்கியிருக்கும் வினோதினி வைத்தியநாதன் தன்னுடைய இந்தப் பரிசோதனை முயற்சியில் முழு வெற்றி பெற்றி ருக்கிறார். பாக்தாத் அரசர் ஷாரியார் மனைவி யால் ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் அந்நாட்டுப் பெண்களையெல்லாம் மணமுடித்து அடுத்த நாள் கொலை செய்துவிடுகிறார். கடைசியாக உயிருடன் எஞ்சியிருக்கும் அமைச்சர் ஜாஃபரின் மகள் ஷெஹரஷாத் முதலிரவு தொடங்கி ஒவ்வொரு இரவும் கதைகள் சொல்வதன் வழியாகவே ஆயிரத்தியொரு இரவுகளுக்கு தன் மரணத்தைத் தள்ளிப்போடுகிறாள். இது எல்லோருக்கும் தெரிந்த ‘அரபிய இரவுகள்’ கதைதான் . ஆனால், இதில் அரசர் கிருஷ்ண தேவராயரும், தெனாலிராமனும், மன்னர் கலிஃபாவும், நீயா நானா கோபிநாத்தும் வரு வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார் கள். நாடகத்தின் முடிவும் வித்தியாசமாகப் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அமைந்திருந்தது.

‘தியேட்டர் ஜீரோ’ நாடகக் குழுவின் நடிகர்கள் அனைவருமே பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ராணி ஷெஹரஷாத் கதாபாத்திரமாக நடித்திருந்த லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி நளினமான நடனம், அட்டகாசமான நடிப்பு என அசத்தியிருந்தார். அதேமாதிரி, ஷாரியரின் அமைச்சராக நடித் திருந்த அலெக்ஸாண்டர் பாபு நடிப்பு, பாடல், நகைச்சுவை, மிமிக்ரி என எல்லா அம்சங்களிலும் கலக்கியிருந்தார். தெனாலிராமனாக நடித்தவரும், இந்நாடகத்தின் துணை இயக்குநருமான பார்கவ் ராமகிருஷ்ணன் லட்டு சாப்பிட்டபடியே நடிப்பில் பின்னியெடுத்திருந்தார். மன்னர் கலிஃபாவாக வரும் ஷ்ரவண் ராமகிருஷ்ணன் மேடையில் ‘மைக்’ திடீரென்று வேலை செய்யாமல் போக, அதை நன்றாகச் சமாளித்திருந்தார். இவர்களுடன் ஷாரியராக நடித்த அமித் ஷா, மன்னரின் பரிவாரங்களாக நடித்த விகாஸ், நரேஷ் ராஜ், பாகீரதி, ஜெயந்த் குமார் என அனைவருமே தங்களுடைய நடிப்பால் மேடை முழுவதையும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

நாடகத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ‘பாரு பாரு பாக்தாத்’, ‘ஆயிரத்தியோரு கதை யாம்’, ‘வா அருகில் வா’ போன்றவற்றின் ‘லைவ்’ பின்னணி இசை திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை அளித்தன. நிஷாந்த், ராம் என்ற இருவரின் பின்னணி இசை இதைச் சாத்தியப்படுத்தியிருந்தன. அத்துடன், இன்னொரு முக்கியமான விஷயம் மேடையில் பயன்படுத்தப்பட்டிருந்த ‘பிளாஸ்டிக்’ பொருட்கள். துடைப்பான் குச்சிகள் குதிரைகளாகவும், அழுக் குத்துணிக் கூடை கிணறாகவும், எண்ணெய் கேன்கள் விளக்காகவும் மாறியிருந்தன. இந்தப் புதுமையான முயற்சிகள் எல்லாவற்றையும் ‘ஆயிரத்தியொரு இரவுகள்’ நாடகத்தின் பெரிய வெற்றியாகச் சொல்லலாம். ஏற்கனவே நமக்குப் பழக்கமான கிரேசி மோகன் பாணி நகைச் சுவையும் உடல் மொழி, சொற்கள் வழி அவ்வப் போது வெளிப்பட்ட ஆபாசத் தெறிப்புகளும் நாடகத்தின் பலமா பலவீனமா என்பது பார்வை யாளர்களின் தனிப்பட்ட முடிவுகளுக்குரியவை.

சமூகத்தின் மற்றுமொரு முகம்!

நாடக ஆசிரியர் சுனந்தா ரகுநாதன், இயக்குநர் அனிதா சந்தானம் இருவரின் நேரடியான கள ஆய்வில் இருந்து உருவாகியிருக்கிறது ‘முந்திரிக்கொட்ட’. பரங்கிப்பேட்டை என்னும் கடலோரக் கிராமத்தில் உப்பளத் தொழி லாளியாகப் பணியாற்ற வரும் பவுனுக்குப் பன்னிரண்டு வயதில் கருப்பண்ணசாமி என்ற மகன் இருக்கிறான். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், அந்த ஊரில் அதிகமாக வசிக்கும் மறைக்காயர் சமூகத்தாலும், கிறித்துவ மதமாற்றத்தை வலியுறுத்தும் ஓர் கிருத்துவ ஆசிரியராலும் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் ‘முந்திரிக்கொட்ட’ நாடகம். பவுனு கதாபாத்திரத்தில் நடித்த காளீஸ்வரி சீனிவாசன், கருப்பண்ணசாமியாக நடித்தி ருந்த முகமது உமரும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஆசிரியர் செல்வராஜாக நடித்த வசந்த் செல்வன் தன்னுடைய உடல்மொழியால் நாடகத்தில் தனித்தன்மையுடன் தெரிந்தார். ஆனால், அப்படியொரு உடல்மொழி ஓர் ஆசிரியருக்குத் தேவைதானா என்பது கேள்விக்குறிதான். அஹமது கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரசன்னா ராம்குமாரும், அப்துலாக நடித்த சார்லஸ் வினோத், பஷீராக நடித்த நிரன் விக்டர் போன்றோரும் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. நாடகத்தின் பின்னணி இசையைப் பெரும்பாலும் நடிகர்களின் அசைவுகளை வைத்தே உருவாக்கியிருந்தது சிறப்பு. ஆனால், ‘முந்திரிக்கொட்ட’ நாடகத்தின் கதைக்களத்தை பொதுத்தன்மையுடன் அணுகமுடியாது.

ஏனென்றால், இந்த நாடகம் மதமாற்றம், சாதிய பாகுபாடுகளைக் கையாண்டிருக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சமூக முரண்பாடுகளைக் களமாக கொண்டது. ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் பெரும்பான்மை சிறுபான்மை பிரச்சனையின் யதார்த்தம் வேறானது என்பதை மனதில் கொண்டே இந்த நாடகத்தைப் பார்க்கவேண்டும்.

சீரஞ்சிவிகளின் வலி மிகுந்த கதை!

தமிழ் நவீன நாடக உலகின் முன்னோடி ஆளுமையான ந. முத்துசாமி, 1968-ம் ஆண்டு எழுதிய ‘வண்டிச்சோடை’ முதன்முறையாக இந்த நாடக விழாவில் மேடையேறியிருக்கிறது. கூத்துப்பட்டறை குழுவினரின் தயாரிப்பில் ஆர்.பி. ராஜநாயஹம் இயக்கியிருந்தார்.

யதார்த்த வாழ்வைப் பின்னிப் பிணைந் துள்ள தத்துவங்களுக்கு இடையே நடக்கும் போராட்டமாக இந்நாடகம் மேடையில் விரி கிறது. காலங்காலமாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல விஷயங்களைக் கேள்வி கேட்கிறது.

பாரம்பரியமான இந்திய வைத்தியத் துறையை குரு - சிஷ்ய முறை எப்படிச் சீரழித்தது என்பதையும், தொழிலாளர் வர்க்கத்தின் துன்பங்களையும் இந்நாடகம் தர்க்கரீதியில் அணுகுகிறது. கசாப்புக்குத் தப்பிய ஆடு ஒன்று இந்நாடகத்தில் ஆட்டுக்காரனாக மாறுகிறது. அதுவே, பிறகு பண்டிதனாகவும் மாறுகிறது. இந்த உருமாற்ற உத்தி நாடகத்தின் முக்கியமான மறைபொருளாக அமைந்திருக்கிறது. இது நேரடியான நாடகமாக இல்லாமல் ‘திரிபான தர்க்க’ங்களைப் பேசும் நாடகம் என்பதால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

வைத்தியர்களாக ரமேஷ் பாரதி, முகமது உமர், சந்தோஷ் செல்லம் நடித்திருக்கிறார்கள். இவர்களைக் கேள்விகேட்பவர்களாக பிரசன்ன ராம்குமார், ஹரிஷ் ஓரி, ரவி வர்மா நடித்தி ருக்கிறார்கள். பாஸ்கர் ஆட்டுக்காரனாக நடித்திருக்கிறார். நடிகர்கள் அனைவருமே செறிவான பங்களிப்பை அளித்திருந்தனர். மு.நடேஷின் ஒளியமைப்பு நாடகத்தின் பரிமாணத்தைக் கூட்டுவதாக அமைந்திருந்தது.

சமூகத்தில் சீரஞ்சிவியாக நிலைத்திருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் வலிமிகுந்த குரலாக ‘வண்டிச்சோடை’ ஒலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x