Published : 16 Nov 2014 10:25 AM
Last Updated : 16 Nov 2014 10:25 AM

எம்.எஸ்.எஸ். பாண்டியன்: தனித்துவமான சிந்தனையாளர்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன், தனித்துவமான பார்வை கொண்ட சிந்தனையாளர். மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸில் பணியாற்றியபோதும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்தபோதும், அவர் மாணவர் களுக்குப் பெரும் உந்துதலாக இருந்தார். அவர் தன் மாணவர்களை நண்பர்களாகவே நடத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

கல்வியாளர்களிடையே சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனையாளராக பாண்டியன் திகழ்ந்தபோதும், தற்பெருமை கொண்டது இல்லை. நடிகர் களோடு போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை உருவாக்கிவருபவர்களே எழுத்தாளர்கள் என ஊடகங்களால் அங்கீகரிக்கப்படும் இன்றைய தமிழ்ச் சூழலில், அதுவொரு அபூர்வமான பண்பு.

எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் முரண்பாடுகள் தோன்றியதுண்டு. குறிப்பாக நான் பெரியார் மீது வைத்த விமர்சனங்களை, அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு என்னோடு பல மாதங்கள் பேசாமல் இருந்தார்.

ஆழி பதிப்பகம் வெளியிட்ட ஈழப் பிரச்சினை தொடர்பான ‘தமிழராய் உணரும் தருணம்’ என்ற எனது நூலுக்கு அவரிடம் முன்னுரை கேட்டேன். தமிழிலேயே முன்னுரை எழுதி அனுப்பினார். தமிழில் எழுதிப் பழக்கமில்லை, ஏதேனும் எழுத்துப் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள் என்றார். எனது நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளில் சிறப்பான ஒன்றாக அது அமைந்தது.

அறிவைப் பரவலாக்குவதில், பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர் பாண்டியன். நல்ல கட்டுரைகளைப் படித்தால், அவற்றை உடனே நண்பர் களுக்குச் சொல்லிப் படிக்கச் செய்வார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில் இரவு இரண்டு மணி, மூன்று மணி என நாங்கள் விழித்துக்கொண்டிருந்தோம். எங்கள் கவலைகளை மின்னஞ்சலில் பல நாட்கள் ‘சாட்’ செய்து பகிர்ந்துகொள்வோம். தி.மு.க. எடுத்த நிலைப்பாடு அவருக்கு மிகுந்த மன வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகளிலும் அந்தக் கோபம் வெளிப்பட்டது.

திராவிட அரசியலுக்கும் அப்பால்

பாண்டியனைத் திராவிடக் கருத்தியலின் அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர் எனச் சொல்வார்கள். ஆனால் கறாரான பொருளில் அப்படிச் சொல்ல முடியாது என்பது என் கருத்து. சினிமா என்ற சாதனம் தமிழில் அறிமுகமானபோது, அதை மேட்டுக்குடியினர் எப்படி இழிவாகப் பார்த்தார்கள் என்பதையும் பின்னர் அதை எப்படி அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முற்பட்டார்கள் என்பதையும் ஒரு கட்டுரையில் அவர் ஆராய்ந்திருக்கிறார். ராஜாஜி சினிமாவைக் கேவலமாகப் பார்த்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். சினிமா இசையை சங்கீதமாகவே அவர்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் சினிமாவின் பார்வையாளர்கள் அடித்தள மக்களாகவே இருந்ததால், அதை மேட்டிமை வர்க்கத்தால் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. சினிமா என்பது தொழிலாகவும் வர்த்தகமாகவும் விரிவடைந்தபோது அது அடித்தள மக்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. அதனால் சினிமாவை அவர்கள் தன்வயப்படுத்த முயன்றார்கள். இளையராஜாவை செம்மங்குடி புகழ்ந்து பேசியதை, அதற்கு உதாரணமாக பாண்டியன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ராஜாஜி மட்டுமல்ல பெரியாரும்கூட சினிமாவை இழிவாகப் பார்த்தவர்தான். சினிமா என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகத்தான் அவர் பேசியிருக்கிறார். சினிமா என்ற வெகுசனக் கலை வடிவத்தை நிராகரிக்காமல், ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்ட பாண்டியனின் பார்வை பெரியாரிடமிருந்து வேறுபட்டது என்பதில் ஐயமில்லை.

மதச்சார்பின்மை மற்றும் சாதி அரசியல்

கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சியில் இருந்த நேரத்தில் தமிழ்நாட்டிலும் அது கால் பதிக்கும் என்று பேசப்பட்டது. அதை மறுத்து விரிவான கட்டுரை ஒன்றை பாண்டியன் எழுதினார். Being ‘Hindu’ and Being ‘Secular’: Tamil ‘Secularism’ and caste politics என்ற அந்தக் கட்டுரை மிகவும் வேறுபட்ட தனித்துவமான முறையில் அந்தப் பிரச்சினையை அணுகியிருந்தது. தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள் காலூன்ற முடியாமல் இருப்பதற்குத் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளின் பகுத்தறிவுப் பிரச்சாரம் மட்டும் காரணம் அல்ல, இந்து மதத்தை ஏற்றுக்கொண்டாலும் அதற்குள் செயல்பட்ட சாதி மறுப்புச் சீர்திருத்தவாதிகளின் பிரச்சாரமும் செயல்பாடுகளும்தான் அதற்கு முதன்மையான காரணம் என அவர் அந்தக் கட்டுரையில் வாதிட்டிருந்தார்.

கடவுள் மறுப்பு விஷயத்தில் தி.மு.க. மேற்கொண்ட நிலைபாட்டைச் சமரசவாத நிலைபாடாகப் பார்க்காமல், சாதகமான ஒன்றாக அவர் மதிப்பிட்டிருந்தார். தவத்திரு தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் என்னும் குன்றக்குடி அடிகளாரின் பணிகளை மிகவும் சாதகமான முறையில் விரிவாக அவர் அந்தக் கட்டுரையில் முன்வைத்திருந்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று திமுக அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு அடிகளார் ஆதரவாக இருந்ததையும், தான் நடத்திவந்த தெய்வீகப் பேரவை மூலம் அதை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டதையும், திராவிடர் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேச சக்திகள், வைதீகத்தை உயர்த்திப் பிடிக்கும் பிராமணர்கள் நமக்கு எதிரிகள்’ என்று அந்த அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் போட்டதையும் பாண்டியன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையில் வெளிப்பட்டிருப்பதும்கூட வழக்கமான திராவிடக் கருத்தியல் சார்ந்த பார்வை அல்ல என்பது என் கருத்து. பிராமணர் அல்லாதாரின் நலனை முன்வைத்து அவர் எழுதிவந்தாலும், அவரது விரிவான வாசிப்பு ஐரோப்பியச் சிந்தனைகளோடு அவருக்கு இருந்த நெருக்கம் ஆகியவைதான் அவரது கருத்தியலை வடிவமைத்தன. அதைத் திராவிடக் கருத்தியல் என்று சுருக்கிவிட முடியாது.

தனித்த பார்வை கொண்டவர்

பாண்டியனின் ஆய்வுகளில் வெளிப்பட்ட நுண்ணறிவு (Insight) அவர் வெறும் தரவுகளைத் தொகுத்துத் தரும் வரலாற்றாளர் அல்ல என்பதற்குச் சான்றாக இருக்கிறது. கொடியங்குளம் தாக்குதலின்போதும் தர்மபுரி தாக்குலுக்குப் பிறகும் அவர் எழுதிய கட்டுரைகள் தலித் மக்களின் நியாயங்களைப் பேசுபவையாக இருந்தன. தமிழ்நாட்டிலிருந்து எஸ்.வி.ஆர்., மைதிலி சிவராமன், வ.கீதா எனப் பலர் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் மிக அதிகமாக அதில் கட்டுரைகள் எழுதியவர் பாண்டியன்தான். தமிழ்நாட்டின் சமூக, பண்பாட்டு அரசியல் பிரச்சினைகளை அகில இந்திய அரங்குக்கும் சர்வதேச அரங்குக்கும் தனது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் கொண்டுசென்றவர் அவர். ஆய்வு இதழ்களில் மட்டுமல்லாமல்

தி இந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெலிகிராப் உள்ளிட்ட பல ஆங்கில நாளேடுகளிலும் அவர் கட்டுரைகளை எழுதிவந்தார்.

தமிழ்ச் சமூகத்தைப் பீடித்திருப்பதில் மோசமானது பொருளாதார வறுமை அல்ல, தத்துவ வறுமைதான். பொருளாதார வறுமையை எளிதில் தீர்த்துவிடலாம். ஆனால் தத்துவ வறுமை அப்படியானதல்ல. தமிழ் மரபில் தத்துவ அறிஞர் என எவரையாவது சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.தமிழ் மரபு என்பது பெரும்பாலும் உரையாசிரியர் மரபாகவே இருக்கிறது. விளக்கவுரைகள் எழுதும் பழக்கத்திலிருந்து நமது அறிவுஜீவிகளும் விடுபடவில்லை. தமிழ்நாட்டின் மார்க்சியர்களும்கூட கார்ல் மார்க்ஸ் என்ன சொன்னார், எங்கெல்ஸ் என்ன சொன்னார் என்று வியாக்கியானம் செய்வதிலேயே பெரும்பாலான காலத்தைக் கழித்துவிட்டார்கள். இதனால் இங்கே ‘பப்ளிக் இண்டெலக்சுவல்’ என்று சொல்வதற்குக்கூட எவரும் இல்லாமல் போய்விட்டார்கள். பப்ளிக் இண்டெலக்சுவல்கள் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்துவதுதான் நம்மைப் போன்றவர்களின் கடமை.

தனித்துவமான சிந்தனையாளருக்கான கூறுகள் பாண்டியனிடம் இருந்தன. ஆனால், தன் சிந்தனைகளை ஒருங்கு திரட்டிப் புத்தகங்களாக முன்வைப்பதில் அவர் முனைப்புக் காட்டவில்லை. அவர் எழுதத் திட்டமிட்டிருந்த நூல்களை எழுதி வெளியிட்டிருந்தால், இன்னும் சிறப்பாக அவர் கொண்டாடப்பட்டிருப்பார். தன்னை நல்லதொரு ஆசிரியராக வெளிப்படுத்திக்கொள்வதில் காட்டிய ஆர்வத்தைத் தனது நூல்களை வெளியிடுவதில், அவர் காட்டவில்லை. அவரது ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட நண்பர்கள் உதவ வேண்டும்.

பாண்டியனின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று நாம் சொன்னால் அது சம்பிரதாயமானதாகத்தான் இருக்கும். காலம் எந்தவொரு வெற்றிடத்தையும் விட்டுவைப்பதில்லை. எல்லாமே பதிலீடு செய்யப்படக்கூடியவைதான் என்றாலும், சிலரால் ஏற்படும் வெற்றிடம் நிரம்ப அதிக காலம் பிடிக்கும். பாண்டியன் தனது மறைவால் ஏற்படுத்திச் சென்றிருக்கும் வெற்றிடம் அத்தகையது. நினைத்துப் பார்த்தால் அவரது இடத்தை ஈடுசெய்யக்கூடியவர்கள் அருகில் எங்கும் தென்படவில்லை.

- ரவிக்குமார், விமர்சகர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தொடர்புக்கு: adheedhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x