Published : 30 Apr 2017 03:31 PM
Last Updated : 30 Apr 2017 03:31 PM

தேவதச்சன் கவிதைகள்: தமிழ் மொழியின் அழகிய பறவைகள்

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் புத்தூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் நவீன கவிதை என்னும் ஊடகத்தில் செலவழித்த தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது அதன் வெவ்வேறு பருவங்கள், மாறும் அழகுகள், தரையிறங்கிக் கனியும் கோலங்களைப் படிப்பது, தண்ணீரில் அழுத்தும்போது ஏற்படும் மூச்சுமுட்டலையும் துக்கத்தையும் இறந்து பிறந்து இறந்து இறந்து எழும் துய்ப்பையும் தருவதாக இருந்தன. தேவதச்சனின் ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து சமீபத்தில் எழுதிய இருபது முப்பது கவிதைகள்வரை வாசிக்க நேர்ந்தபோதுதான், புதுக்கவிதையிலும் புதுமைப்பித்தனின் மரபு தொடர்வதன் தடயங்கள் கிடைத்தன. அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் இயல்பாய்ச் சேரும் பாதை என்று அந்தத் தடத்தைத் தற்போது குறித்துக்கொள்ளலாமா? பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆத்மாநாம் என அந்தப் பாதையிலிருக்கும் மரங்களை எண்ணிப் பார்க்கிறேன். அங்கேதான் தேவதச்சனின் தொடக்கமும் உள்ளது.

வாழ்வு

சாவெனத் தன்

வேசம் மாற்றிக் கொள்ளுமுன் உன்

சீட்டைக் காலி பண்ணு

நீ பாத்திரம் அது

பார்வையாளனெனத் தலைகீழாய்

நாடகம் மாறப்போகிறது

என்றும்

சோற்றால் பசியை

ஜெயிக்கணும் என்றால்

பசியால் சோற்றை

ஜெயிக்கணும்தான்.

தேவதச்சனின் புகழ்பெற்ற தொடக்க காலக் கவிதைகளுள் ஒன்றான இந்தக் கவிதைக்குள் புதுமைப்பித்தனின் எதிரொலி இருக்கிறது.

கணிதம் போன்றும் தத்துவம் போன்றும் தோற்றம் கொடுக்கும் ‘அவரவர் கைமணல்’ கவிதைகளை முதலில் படித்திருந்தேன். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு அவர், ‘தீராமலர்’ என்ற பெயரில் எழுதி வெளியான கவிதைகள், புதிய தலைமுறைக்கு ஒரு புதிய முதிர்ந்த கவிஞனையும் கவிதைகளையும் அறிமுகப்படுத்தின என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து தேவதச்சன் தனது கவிதைகளில் வரும் எல்லாப் பொருட்களையும் போல நகர்ந்துகொண்டிருக்கிறார்.

ஒரு இடையன்

ஒரு இடையன்

பத்துப் பனிரெண்டு ஆடுகள்

ஒரு இடையன்

பத்துப் பனிரெண்டு ஆடுகள்

ஆனால்

எண்ணிறந்த தூக்குவாளிகள்

எண்ணிலிறந்த மழைகள்

எண்ணிலிறந்த தலைப்பாகைகள்

எண்ணிலிறந்த தலைப்பாகைகள்

எண்ணிலிறந்த காற்றுகள்

எண்ணிலிறந்த தொரட்டிகள்

எண்ணிலறந்த பகல்கள்

ஒரு இடையன்

பத்துப் பனிரெண்டு ஆடுகள்

ரயில்வே கேட் அருகில்

எப்படா திறக்குமென்று

இந்தக் கவிதை எனக்கு இன்றைக்கும் கொடுக்கும் காண் அனுபவம் பெரியது. உண்மையில் அது என் போன்றவர்களிடம் செய்தது புரட்சி. எல்லாமே தெரிந்தவை. பழசும் புதுசுமாய்க் கலந்தவை. ஆனால், முற்றுப்புள்ளி இல்லாத இந்தக் கவிதை போலவே நமது அனுபவத்தை அந்தரத்தில் வைத்துவிடும் மாயத்தைச் செய்துவிடுகிறார் தேவதச்சன்.

புலன்களைத் தொடும் கவிதைகள்

கண், செவி, மூக்கு, விரல்கள், நாக்கு என ஐந்து புலன்களையும் தொடும், மகிழ்விக்கும் கவிதைகள் தேவதச்சனின் கவிதைகள் என்று சொல்லலாம். அறிவை ஒரு முகமறைப்பைப் போல, திரைச்சீலை போல, மெல்லிய ஆபரணத்தைப் போல, இல்லாதது போலத் தோன்றும் இருப்பாய் தன் கவிதைகளில் வைத்துள்ளார். தமிழ்க் கவிதையில் அதுவரை கவிதை சொல்லியாக இருந்த சமூகவயமான நானின் இடத்தைப் பறவை உட்காரும் கிளைகளில் தண்ணீரில் துள்ளும் தவளைக்கல்லின் இடத்தில் வைத்துவிடுகிறார். அறம், பாவம் என்னும் அருங்கயிற்றுக் கட்டிலிருந்து தமிழ்க் கவிதையை முற்றிலுமாக விடுவித்தவர் தேவதச்சன். தேவதச்சனின் கண்கள் துண்டிக்கப்பட்ட காண்நிலைகளை, உணர்நிலைகளை அதன் வேதிவினை தொடங்கும்போதே பார்க்கிறது. மிகச் சிறிய யானைக்குட்டி, வேப்பங்கன்றின் மேல் அந்தக் கண்களால்தான் கவனம் குவிக்க முடிகிறது. தேவதச்சனின் கவிதைகளைப் பெருஞ்சமூகம் படிக்காத வேறொரு மஞ்சள் புத்தகமாகவும் படிக்க முடியும்.

இடம் மணமாக, உணர்ச்சி பேரோலியாக மாறும் ரகசியப் புத்தகம் அது. அதனால்தான், பல்வேறு கதவுகள் திறந்து ரகசிய அறையில் கபாடபுரத்தில் இருக்கும் கருநாவல் பழத்தை அவர் தொடும்போது அந்தப் பிசுபிசுப்பு நம்மையும் தழுவிக்கொள்கிறது.

நள்ளிரவில்

நள்ளிரவில்-

மங்கிய மஞ்சள் ஒளி

ரயிலில்,

திடீரென்று கொட்டிப்

பரவுகிறது

நறுமணத் திரவம்

எல்லோரும் இறங்கி

எல்லோரும் ஏற

கிளம்பியது ரயில்

வாசனையூரிலிருந்து, என்றும்

தண்டவாளத்தில்

இல்லாத

வாசனை ஊர்களிலிருந்து...

இலக்கியப்பூர்வமான உரைநடையோடு பேச்சுமொழியைச் சரியாக வைப்பதும் தேவதச்சன் தரும் அபூர்வ புலன் அனுபவங்களில் ஒன்றே. அத்துவான வேளை என்று தென் தமிழகத்தில் சொல்லப்படுவதை அவர் அத்துவான வேளையாகத் தன் உலகுக்குள் செரித்து வெளிப்படுத்துகிறார். எப்படா திறக்குமென்று, எப்பவாவது, என்னவோ என எத்தனையோ நிறங்களும் உணர்வுகளும் நினைவுகளும் கொண்ட பேச்சுமொழியை இவர் ஒரு சிட்டிகை இடும்போது கரிசல் கதை சொல்லிகளில் ஒருவராக ஆகிவிடுகிறார்.

அவர் துண்டிக்கும் காட்சிகளில் உரையாடல் களுக்குள் யாருக்கும் அடைபடாமல் மனிதனை அலையவைக்கும் அலைக்கழிப்பும் இரண்டு கிளாஸ்களில் இருக்கும் பழச்சாறுகளைப் போன்ற தனிமை உணர்வும் கிடைக்கின்றன. நினைவுத் தொடர்ச்சிக்கும் கதைக்கும் காரண காரியத் தொடர்புகளுக்கும் எதிரான நிலையில்தான் கவிதைகள் இயங்குகின்றன என்ற பிரக்ஞையை, நம்பிக்கையை இன்னும் தீவிரமாக வலுப்படுத்துபவை தேவதச்சனின் கவிதைகள். துண்டித்தல், பறத்தல், காலியாதல், நிரம்புதல், மீண்டும் காலியாகுதல் என மனதைக் கீழே விட்டு விட்டுப் பறப்பவை என்று தேவதச்சனின் கவிதைகளைச் சொல்லலாம்.

வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கும் கவிதைகள்

புறா படபடத்துப் பறக்கும்போது மனம் விடுத்துப் பறக்கிறோம் நாம். தானியங்களின் மீது ஒவ்வொரு கொத்து கொத்தும்போதும் மனம் புறாவோடு சிதறுகிறது. மனம் விடுத்துத் தற்கணத்தைக் கொத்த அழைக்கும் தமிழ் மொழியின் அழகிய பறவைகள் என்றும் தரைக்கு மேல் சற்றுப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் என்றும் தேவதச்சனின் கவிதைகளைச் சொல்வேன். தேவதச்சனின் கவிதைகள், தொடக்க அனுபவமாக வசீகர ஒழுங்கையும் மகிழ்ச்சியையும் ருசியையும் மென்மையையும் தருவதாகவும், ஆழத்தில் பிரபஞ்சத்தில் தொடர்ந்து நிகழும் பெரும் குழப்படி, துயரம், காம மூர்க்கத்தைக் கொண்டதாகவும் உள்ளன. தேவதச்சனின் சமீபத்திய கவிதைகள் தரையிறங்கி, பூமியின் அழுக்கையும் மனிதர்களின் கண்ணீரையும் ஏற்றவையாக இருக்கின்றன. நவீன மனிதன் ஒரு அடையாள அட்டையாக, ஒரு எண்ணாக, மர்ம நபராகச் சுருக்கப்படும் நிலையை, அதன் துயரத்தை அவர் தீராமல் எழுதத் தொடங்கியிருக்கிறார். அவர் முன்பு வறல் ஆறு பற்றிய கவிதையில் உள்ள நம்பிக்கை இப்போதைய கவிதைகளில் இல்லை. உலகத்தின் கடைசி வரிகளை அவரும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக தேவதச்சனின் கவிதைகளைப் படிக்கும் வேளையில், தற்செயலாக ரெட்டியப்பட்டி சுவாமிகள் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் வாசிக்கக் கிடைத்தது. தேவதச்சன் வசிக்கும் கோவில்பட்டிக்கும் ரெட்டியப்பட்டிக்கும் கொஞ்சம் தூரம்தான். அவர் நிஷ்டை அடைந்த இடம் குற்றாலம் செண்பகா தேவி அருவி பக்கத்தில் உள்ள குகை. ஒரு வருடத்துக்கும் மேல் அவர் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கோடையில் அருவியின் தேசலான கோவண வழிசல், மழைக்காலங்களில் பிரளயம் போல் மூர்க்கமாக அலறும் வேகம் எனப் பகலிரவாக அருவியைப் பார்த்திருப்பார். ஞானம் அடைவதற்கு முன்னர் ‘இந்தக் கட்டை கொஞ்சமா அழுதது உடையவனிடத்தில்’ என்று சொல்கிறார் ரெட்டியப்பட்டி சுவாமிகள். தேவதச்சனின் கவிதைகள் அடைந்திருக்கும் அமைதி, கனிவுக்கு முன்னர் தான், அவர் எவ்வளவு உரக்கச் சிரித்திருக்கிறார்; இந்த உலகத்தைப் பார்த்து; கருத்துகளைப் பார்த்து; கோஷங்களைப் பார்த்து; எவ்வளவு உயரப் பறந்திருக்கிறார்; லௌகீகத்துக்கு மேலே.

தேவதச்சனால் தாக்கமுறாத இத்தலை முறைக் கவிஞர்கள் அரிதாகவே இருக்கக் கூடும். தேவதச்சனின் நகல்கள்கூட இங்கே உருவாகி விட்டன. தேவதச்சனின் கண்ணாடியை யார் வேண்டுமானாலும் இரவல் வாங்கலாம். ஆனால், யாருக்கும் பொருந்தாது. நிஷ்டை என்னும் கண்களை யாரும் பெற முடியாது.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x