Last Updated : 29 Jan, 2017 12:00 PM

 

Published : 29 Jan 2017 12:00 PM
Last Updated : 29 Jan 2017 12:00 PM

ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா : மங்கள நிகழ்ச்சிகளில் அதிரும் பறை

தீவிரமான கர்னாடக இசைப் பிரியரான என்னுடைய நண்பர் ராம கிருஷ்ணனுடன் கடந்த வார இறுதியில், மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா அருகிலிருந்த ராகசுதா அரங்குக்குச் சென்றிருந்தேன்.

பாடகருக்குப் பின்னால் ஒரு தம்புராவோ முன்பாக ஒரு ஸ்ருதிப் பெட்டியோ ஒலிக்க, வயலின், மிருதங்கம் பக்கவாத்தியத்துடன் ‘வாதாபி கணபதி’யை எதிர்பார்த்து வந்திருந்த நண்பருக்குப் பேரதிர்ச்சி. மேடையில் டேப் அடித்தபடி, டோலக்கின் தாள கதிக்கு ஏற்ப உச்ச ஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார் மரண கானா விஜி.

“என்னடா இழவு இது? கச்சேரின்னு சொன்னே…” என்ற நண்பரின் முகத்தில் மெல்லிய கோபக் களையைப் பார்க்க முடிந்தது.

“அதேதான்… இழவுக்குப் பாடுறவர்தான். பேசாம கச்சேரியைக் கேளுங்க…” என்றேன்.

பாடல்களின் அணிவகுப்பு

காதல், பிரிவு, மரணம் என்று பல உணர்ச்சிகளை அவரின் பாடல்கள் வெளிப்படுத்த, நண்பர் அந்த இசையில் ஒன்றிவிட்டார். மரண கானா விஜியுடன் ரசிகர்களின் சிறு உரையாடலும் நடந்தது.

ஸ்ருதியே இல்லாம எப்படிப் பாடுறீங்கோ?

பாட்டில் இருக்கும் உணர்ச்சிதான் ஸ்ருதி. அந்த உணர்ச்சிக்கேற்ப பாட்டில் ஏற்ற, இறக்கங் கள் இருக்கும். தாளம் அதை வழிநடத்தும்.

எழுதிவைத்துப் பாடுவீர்களா?

எழுதப் படிக்கவே தெரியாது. அனுபவங்கள்தான் என்னுடைய வார்த்தைகள். அனுபவத்திலிருந்து வெளிப்படுவதுதான் கானா.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இது இருக்கிறதா?

பல இடங்களிலும் இறந்தவர்களுக்காகப் பாடும் முறைக்குப் பேர் ஒப்பாரி. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையின் வலியிலிருந்து பிறப்பதுதான் சென்னைக்கே உரித்தான கானா.

- இப்படிப் பலரின் கேள்விகளுக்கும் சளைக்காமல் அதேநேரம் மிகவும் கண்ணி யத்துடன் மரண கானா விஜி பதில்களை வழங்கிய விதம், அரங்கில் அவருக்குப் பெரும் கைதட்டல்களைப் பெற்றுத் தந்தது.

கேள்வி நேரம் முடிந்ததும் அடுத்து ஒலித்தது, அவரை லண்டன்வரை அழைத்துச் சென்ற ‘டங்கா மாரி ஊதாரி’ பாடல். ஏதோ சன்னதம் வந்தாற்போல் தலையாட்டிக் கொண்டிருந்த கூட்டத்தில் நண்பர் ராமகிருஷ்ணனும் இருந்தார்!

ஜகோபா இசை

கர்நாடகத்தின் உள்ளடங்கிய கிராமத்திலிருந்து வந்திருந்து ஜகோபா (எல்லம்மா தேவியை வழிபடும் ஐந்து திருநங்கைகள்) பிரிவினரின் இசை பக்திமயமாக இருந்தது. கையேந்தி யாசகம் கேட்பவர்கள், பாலியல் தொழில் செய்பவர் கள் என்று மட்டுமே பொதுச் சமூகத்தால் பார்க்கப் படுகின்றனர் திருநங்கைகள். இதற்கு மாறாக, எல்லம்மா தேவியை வழிபடுபவர்களாக கர்நாடக மாநிலத்தில் பெரிதும் மதிக்கப்படுபவர்களாக ஜகோபா பிரிவினர் இருக்கின்றனர்.

“ஆண், பெண், அர்த்தநாரி வடிவங்களில் காட்சியளிக்கும் சிவனையும், தேவியையும் போற்றும் பாடல்களை எங்களின் குரு பீமண்ணம்மா பசரகோடு அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டோம்” என்றார் குழுவின் பாடகர்களில் ஒருவரான சீத்தம்மா மணகுலி பசவன ஹிங்லேஸ்வரி.

தட்டிப் பார்த்த குழந்தை

‘நண்பர்கள் கிராமியக் குழு’வினரின் பறை யாட்டம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் ஆடவைத்தது. இந்தக் குழுவில் இருக்கும் பலரும் பட்டதாரிகள். சிலர் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். ‘‘ஆலய வழிபாடு, திரு விழாக்களில் அடிக்கப்பட்டுவந்த பறை வாத்தி யத்தை, சாவுக்கு மட்டுமே வாசிக்கும் வாத்திய மாகப் பொதுமைப்படுத்துவது தவறு. ஒத்தை அடி, தெம்மாங்கு என இதில் பல வகைகள் இருக்கின்றன. மங்கள நிகழ்ச்சிகளிலும் நாங்கள் இதை வாசிக்கிறோம். பறை வாத்தியத்தை வாசிக்கும் முறையையும் பறையாட்டத்துக்கான அடவுகளையும் நாங்கள் பயிற்சியாகவே அளிக்கிறோம்” என்றார் குழுவின் தலைவர்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த கூட்டத்தில், ஒரு சிறுமி, “நான் இந்த இன்ஸ்ட்ருமென்டைத் தட்டிப் பார்க்கட்டா?” என்றாள். அந்தச் சிறுமியைத் தொடர்ந்து, பலரும் பறை வாத்தியத்தைத் தோளில் மாட்டிக்கொண்டு அடித்தபடி ஆட ஆரம்பித்துவிட்டனர்!

மனங்களின் சங்கமம்

கலைகளின் மூலமாக மனித மனங்களைச் சங்கமிக்கச் செய்யும் ஊரூர்-ஆல்காட் குப்பம் விழா மூன்றாவது ஆண்டாக ஜன. 15 அன்று சென்னை பெசன்ட் நகர் ஊரூர்-ஆல்காட் குப்பத்தில் தொடங்கியது.

தப்பாட்டத்தில் தெறிக்கும் செவ்வியல் இசையின் நுட்பங்களை கர்னாடக இசை ஆர்வலர்களும், செவ்வியல் இசையில் வெளிப்படும் வெகுஜன ரசனைகளை பாமரனும் பரஸ்பரம் அடையாளம் கண்டுகொள்வதற்கான வாய்ப்பை மீனவ கிராமமான ஊரூர் ஆல்காட் மக்களுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு வழங்கிவருபவர் பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா. (இவரின் நிகழ்ச்சி இன்று மாலை, பெசன்ட் நகர் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் நடைபெறவிருக்கிறது.)

இசையின் மூலமாக இவர் கட்டமைக்கும் உறவுப் பாலம் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் வலுப்படுவதற்கு நிகழ்ச்சிகள் நடக்கும் நாட்களும் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருப்பதே சான்று.

“மனிதர்களின் மகிழ்ச்சிக்கானவைதான் எல்லாக் கலைகளும். இந்த அடிப்படையில்தான் கலைகளின் வழியாகப் பலதரப்பட்ட மக்களையும் ரசனையின் வழியாக ஒன்றிணைக்க இந்தக் கலை விழாவை மூன்றாவது ஆண்டாக நடத்துகிறோம்” என்கிறார் டி.எம்.கிருஷ்ணா.

ரூட் பாட்டு ரிலே

இளமையும் புதுமையும் கைகோக்கும் பல நிகழ்ச்சிகள் இந்த ஆண்டும் நடைபெற இருக்கின்றன. ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் புதுமையான இன்னொரு முயற்சி பேருந்தில் பாட்டு. பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து பெசன்ட் நகர் பேருந்து நிலையத்துக்குப் பேருந்து செல்லும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு பாடகர் பேருந்தில் ஏறி பாடத் தொடங்குவார். புதுமையான இந்த முயற்சியில் பேருந்தில் பயணிக்கும் பயணிகள்தான் பிரதான ரசிகர்கள்!

ஊரூர் ஆல்காட் குப்பத்தின் குழந்தைகள் எடுத்த ஒளிப்படங்களை பிப்ரவரி 4 அன்று திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிடுகிறார். தொடர்ந்து பெசன்ட் நகர் ஸ்பேசஸில் சென்னை கார்பரேஷன் பேண்டின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

பிப்ரவரி 10, 11 நாட்களில் ஊரூர் ஆல்காட் குப்பம் விழா எல்லையம்மன் கோயில் அருகில் நடைபெறவிருக்கிறது. இதில் பஞ்ச வாத்தியம், கர்னாடக இசை, நாடகம், நாகசுர இசை, குச்சிப்புடி நடனம், குரங்கனின் தமிழ் ராக் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x