Last Updated : 13 Jan, 2017 11:12 AM

 

Published : 13 Jan 2017 11:12 AM
Last Updated : 13 Jan 2017 11:12 AM

உண்மைக்கு மிக அருகில்தான் நகைச்சுவை இருக்கும்!- கு.ஞானசம்பந்தன்

நிலாவைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சோறூட்டு வதுபோல, சிரிக்க வைத்துக்கொண்டே பழந்தமிழ் இலக்கியச் செய்திகளைப் பாமரர்களுக்கும் புகட்டிவருபவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். பணி ஓய்வுக்குப் பிறகும், இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், சினிமா, தமிழிசைப் பணி என்று பரபரப்பாக இயங்கிவரும் அவருடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி.

பிடித்தமான நகைச்சுவை எழுத்தாளர்கள்?

தமிழின் முதல் உரைநடையும், முதல் நாவலுமே மிகச்சிறந்த நகைச்சுவைப் படைப்புகள்தான். வீரமாமுனிவர் எழுதிய, 'அவிவேகி எனும் பரமார்த்த குரு கதை' படித்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய, 'பிரதாப முதலியார் சரித்திர'த்தில் வருகிற நகைச்சுவைக் காட்சிகள் சாகாவரம் பெற்றவை. 'நான் கண்ணை மூடிக்கிட்டு செய்ற வேலைய, உன்னால கண்ணைத் திறந்துக்கிட்டு செய்ய முடியுமா?' என்ற கவுண்டமணி செந்தில் நகைச்சுவைகூட அதில் இருந்து எடுக்கப்பட்டதுதான். பாரதியின் ஆகச்சிறந்த நகைச்சுவைப் படைப்பு சின்ன சங்கரன் கதை. சொல்லியிருப்பார். அடுத்து புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்'. கல்கி, தேவன், பாக்கியம் ராமசாமி, சுஜாதாவுக்கும் இந்தப் பட்டியலில் இடமுண்டு.

நகைச்சுவை எழுத்தாளர்கள் குறைந்துவருகிறார்களா?

அருகிவிட்டார்கள் என்பதைவிட, அனுபவத்தைக் குறைத்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மனித வாழ்வில் விரவிக்கிடக்கிற நகைச்சுவையைச் சேகரிக்க வேண்டும் என்றால், நிறையப் பயணப்பட வேண்டும். படிக்க வேண்டும். நிறைய நண்பர்கள் வேண்டும். பார்த்து எழுதுவது நகைச்சுவைக்குஉதவாது.

நகைச்சுவையாகப் பேசுவது, எழுதுவது எது கடினம்?

இரண்டும் வெவ்வேறு துறைகள். நல்ல நகைச்சுவைப் பேச்சாளரால், நகைச்சுவையாக எழுத முடியாது. நல்ல நகைச்சுவை எழுத்தாளரால், நகைச்சுவையாகப் பேச முடியாது. ஆனாலும், எழுதுவதுதான் கஷ்டம். பேசும்போது முகபாவம், உடலசைவு, ஏற்ற இறக்கம் மூலம் சிரிக்க வைத்துவிட முடியும். எழுத்தில் அப்படியல்ல.

மேடைப் பேச்சின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

மேடையே இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது. ஒரு காலத்தில் மதுரையில் விடிய விடிய பொதுக்கூட்டங்கள் நடக்கும். பிறகு, நள்ளிரவு 12 மணி வரைதான் என்றார்கள். இப்போது இரவு 10 மணிக்கே, போலீஸ்காரர் மேடைக்கு வந்து 'எல்லாத்தையும் நிறுத்துங்க' என்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெளிப்புறக் கூட்டங்களுக்கு அனுமதியே கிடையாது. உள்ளரங்கில் பட்டிமன்றம் பேசப்போனால்கூட, என்ன பேசப்போகிறேன் என்பதை எழுத்துபூர்வமாக அரசுக்குச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். இதேநிலை இங்கேயும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

அடுத்தகட்டத் திட்டம்?

சுஜாதாவுக்கு முதன்முதலில் கணினி வாங்கிக்கொடுத்த வரான வாம்சி பாண்டியனின் தூண்டுதலால், மதுரை தியாக ராசர் கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையத்தை நடத்தி வருகிறோம். அங்கே தமிழில் 2,000 ஆண்டுகள் பழமை யான முல்லைப் பண் எப்படி, இப்போது மோகன ராகமாக மாறியிருக்கிறது என்பதைக் கால வரிசைப்படி வரி வடிவமாகவும், ஒலி வடிவமாகவும் ஆவணப்படுத்தியிருக் கிறோம். அமெரிக்காவில் ஒரு பேராசிரியர் தன்னுடைய வீட்டின் மாடியில் ஒரு ஒலிப்பதிவுக் கூடம் வைத்து, 12 பல்கலைக்கழகங்களுக்கு வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். அதைப்போல எனக்கென ஒரு இணைய தளம் தொடங்கி, தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களுடன் நேரடியாக உரையாடப்போகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x