Last Updated : 09 Jan, 2017 10:06 AM

 

Published : 09 Jan 2017 10:06 AM
Last Updated : 09 Jan 2017 10:06 AM

எங்கேப்பா என்.பி.டி?

புத்தகக் காட்சியில் ‘நேஷனல் புக் டிரஸ்ட்’(என்.பி.டி.) என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்த அரங்கில் புத்தகங்கள் வாங்கச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.

அந்த அரங்கில் என்.பி.டி. பிரசுரம் செய்த புத்தகங்கள் எதுவுமே இல்லை. வேறு பல பதிப்பகங்களின் புத்தகங்கள்தான் கண்ணில் பட்டன. விசாரித்தபோது, கன்னிமரா நூலகத்தின் நிரந்தரப் புத்தகக் காட்சிப் பிரிவிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் அவை என்று தெரியவந்தது. இதுதொடர்பாக, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திடம் கேட்டபோது, “புத்தகக் காட்சியில் என்.பி.டி.க்கு எப்போதும் அரங்கம் ஒதுக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை என்.பி.டி. தரப்பிலிருந்து அரங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. டெல்லியில் தற்போது நடந்துவரும் புத்தகக் காட்சியில் பங்கேற்றிருப்பதால் சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்க இயலவில்லை என்றார்கள். காலியாக இருக்க வேண்டாம் என்பதால், கன்னிமரா நூலகத்தின் நிரந்தரப் புத்தகக் காட்சிக்கு அரங்கை ஒதுக்கிவிட்டோம்” என்றார்கள். மலிவு விலையில் தரமான புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜவாஹர்லால் நேருவால் என்.பி.டி. தொடங்கப்பட்டது. வழக்கமாகப் புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் தேடிச் செல்லும் அரங்குகளில் என்.பி.டி. அரங்கும் ஒன்று. புத்தகக் காட்சியில் பங்கேற்கத் தேவையான ஆள்பலமும் ஆதாரமும் நேரமும் இல்லை என்று ஒரு சிறு பதிப்பாளர் சொல்லலாம்; அரசு அப்படிச் சொல்ல முடியுமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அரசுசார் கலாச்சார மையங்களில் தற்போதைய மத்திய அரசு காட்டும் மெத்தனத்தின் தொடர்ச்சியாகவே இந்த அலட்சியத்தையும் கருத வேண்டும் என்றும் சிலர் காட்டமாகக் கருத்து கூறுகிறார்கள்.

அரசு நினைத் தால் உடனேயே என்.பி.டி. புத்தகங்களை அரங்குக்குக் கொண்டுவர முடியும்; நடக்கும் என்று நம்புவோம்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x