Last Updated : 26 Mar, 2017 11:06 AM

 

Published : 26 Mar 2017 11:06 AM
Last Updated : 26 Mar 2017 11:06 AM

மறந்துவிடாமல் இருக்க...

‘தி இந்து’வுக்காக அசோகமித்திரன் எழுதிய கடைசி கட்டுரை இது

முந்திய தலைமுறைக்கு இது வியப்பாக இருக்காது. என் அப்பாவின் தந்தைக்கு மொத்தம் பதினாறு குழந்தைகள். அவரோ பள்ளிக்கூட வாத்தியார். இருந்த வீடு பிதுரார்ஜிதம். முதல் இரண்டு மகன்களைப் படிக்கவைத்துவிட்டார். இறந்தது போகத் தங்கிய பெண்களில் மூத்த பெண்ணுக்கு ஜாதகப் பொருத்தம், வயதுப் பொருத்தம் பார்த்துக் கல்யாணம் செய்துவிட்டார். அவர் கடமைகள் முடிந்துவிட்டன என்பது போலக் கண்ணை மூடிவிட்டார். விளைவு எஞ்சிய மூன்று மகன்கள் எப்படி எப்படியோ தட்டுதடுமாறிப் பத்தாவது முடித்து வேலை தேடித் தெலுங்கு நாடு போய்ச் சேர்ந்தார்கள். ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருப்பார். ‘என் தந்தையார் பாலையா.’ இந்த நூல் பல விஷயங்களை நேரடியாகவும் நாம் அனுமானித்துக்கொள்வதாகவும் இருக்கும். ஒன்று, அந்த நாளில் ஜாதி வேறுபாடுகளை இரண்டாம் இடத்துக்குத் தள்ளியதில் ரயில் கம்பனிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காங்க்மென், பாயிண்ட்ஸ்மென் ஆகிய பணிகளுக்கு தலித் சமூகத்தினரைச் சேர்த்துக்கொண்டார்கள். இது சமூகரீதியாகவும் பொருளாதார வகையிலும் தலித் சமூகத்தினருக்கு ஓரிடம் அளித்தது. அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற வழி கிடைத்தது. பாலையா என்ற பெயரே அந்த நூலாசிரியரின் தந்தையின் நலம் விரும்பியான ஓர் அதிகாரி சூட்டியது. இயற்பெயராக இருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவர் தலித் என்று தெரிந்துவிடும். அதேபோல நூலாசிரியர் யூ.ஆர்.சத்தியநாராயணாவும் இன்னொரு நலம்விரும்பியால் பெயர் சூட்டப்பட்டவர். இன்று இதெல்லாம் சாத்தியமில்லை. பிறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே பெயர் தர வேண்டும். அதுவே ஆயுட்காலம் வரை நீட்டிக்கும்.

தலித்துகள் போல என் அப்பாவைப் போன்று பத்தாவது படித்துப் பிழைப்புக்குத் தெலுங்கு நாட்டுக்கு வந்தவர்களுக்கும் குமாஸ்தா அளவில் வேலை வாய்ப்புத் தந்தது, இன்று உலகிலேயே மிக அதிக அளவில் பணியாட்கள் கொண்ட நிறுவனமாகிய இந்திய ரயில்வே. என் பாட்டனார் இறந்த பிறகு படித்து வேலைக்குப் போனவர்கள் மூவரும் நிஜாம் ரயில்வேயில் சேர்ந்தார்கள்.

பதினாறில் நான்கு இரட்டைக் குழந்தைகள். என் அப்பாவும் இரட்டையில் ஒன்று. அவருடன் கூடப் பிறந்தவர் இரண்டு வயதில் போய்விட்டார். அவர் இருந்தால் என் அப்பாவின் பெயர் லட்சுமணனாக இருக்க வேண்டும். தேவு தாசு என்று இரட்டையரில் தாசு பதினெட்டு வயதில் போய்விட்டாராம். ஆதலால், தேவு என்பவர் மகாதேவனாகச் சிறிது காலம் இருந்து, திருமணம், குழந்தைகள் என்றான பிறகு அற்பாயுளில் போய்விட்டார். குழந்தையிலேயே போய்விடுவது, அற்பாயுளில் போய் விடுவது-இவைதான் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட குரூப் படங்கள் இருந்ததற்குக் காரணம் என்று நினைக்கிறேன். நாம் உயிருடன் இருக்கும்போதே இறந்துபோனவர்கள் முகம் மறந்துபோய்விடாமல் இருப்ப தற்காக இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

என் நினைவு தெரிந்து என் அப்பா மூன்று வீடுகள் மாறினார். சில்கல்கூடா வீடு மிகவும் சிறியது. எதிரே ரயில்வே டிஸ்பென்சரி. இன்று இப்பெயர் வழக்கொழிந்து ‘கிளினிக்’ என்றாகிவிட்டது. அடுத்த வீடு புது போயிகுடா. அதிகப்படியாக ஓர் அறை. நான் பிறந்தது இரண்டு குழாய் வீடு என்பார்கள். அது ரெஜிமெண்டல் பஜார் சந்துகள் ஒன்றில் இருந்தது. அந்தச் சந்தில் இரு தெருக் குழாய்கள். அதனால்தான் இரண்டு குழாய் வீடு. இவையெல்லாவற்றிலும் மண்ணெண்ணெய் விளக்குதான். தினம் மூன்று ‘ஹரிகேன்’ லாந்தர்களின் கண்ணாடி சிம்னிகளைத் துடைத்து வைக்க வேண்டும். கை நழுவி விழும் பொருள்களுக்கு ஒரு பட்டியல் போட்டால் இந்த லாந்தர் சிம்னி முதலிடம் பிடிக்கும். அந்த விளக்கை ஏற்ற முடியாததோடு சிதறிய கண்ணாடித் துண்டுகளை எடுத்துவிட வேண்டும். பெரிய துண்டுகளை எடுத்த பின் மிகக் கவனமாகச் சிறு துகள்களை எடுக்க வேண்டும். கூறாமல் சன்னியாசம் கொள்வதற்கு ஔவையார் சில காரணங்கள் சொல்லியிருக்கிறார். அதில் கண்ணாடிச் சிம்னி துடைப்பதையும் உடைந்த சிம்னித் துகள்களைப் பொறுக்குவதையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த நாளில் குடும்பத் தலைவர்கள் பலர் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய்க் காஷாயம் தரித்துப் பிச்சை எடுப்பார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சி அந்த நாள் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பல கதைகளில் இடம்பெறும் (முடிந்தால் சரத் சந்திரரின் ‘ஸ்ரீகண்டா’படியுங்கள்).

எங்கள் உறவினர் ஒருவருக்கு அன்று சர்வ சகஜமாக இருந்ததைப் போலப் பெரிய குடும்பம். ஐந்து பெண்களுக்கிடையே ஒரு மகன். அவர் எல்லாரையும் போல அவனையும் வளர்த்தார். ஐந்து பெண்களில் நான்கு பேருக்கு நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தார். மெத்தப் படித்தவரானாலும் ஏனோ அவருக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஒரு வருடம் ஔரங்காபாத்தில் புரொஃபெஸராக இருப்பார். அடுத்த வருடம் விசாகப்பட்டினத்தில் இருப்பார். கடைசியாக அன்று மிகப் பிரபலமாக இயங்கிய மினர்வா டுயூட்டோரியல் கல்லூரியில் துணை நூல்கள் எழுதினார். எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டார். ஒரு மாதத் துக்குப் பிறகு விஷயம் தெரியவந்தது. அவர் ரிஷிகேசம் சென்று சுவாமி சிவானந்தாவிடம் காஷாயம் பெற்றுக்கொண்டிருக்கிறார்! நான்கு பெண்களுக்குத் திருமணம் செய்வித்தவர் கடைசிப் பெண்ணை ஆதரவற்றவளாக்கிவிட்டாரே என்று எல்லாரும் வைதார்கள். அவரிடமும் அவர் குருவிடமும் சண்டை போட்டார்கள். ஆனால், இருவரும் சிரித்த முகமாகவே கேட்டுக்கொண்டார்கள்.

அந்தக் கடைசிப் பெண்ணுக்கும் நல்ல இடத்தில் திருமணம் நடந்தது. இந்த விவரத்தைப் புது சாமியாரிடமும் பழைய சாமியாரிடமும் சொன்னார்கள். அவர்கள் அதையும் எப்போதும் போலச் சிரித்த முகமாகக் கேட்டுக்கொண்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x