Last Updated : 07 May, 2017 10:24 AM

 

Published : 07 May 2017 10:24 AM
Last Updated : 07 May 2017 10:24 AM

மிகச் சில வார்த்தைகளே பெரிய பலம்!

என்னுடைய பணியின் ஓர் அங்கமாக, பதவியிலிருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், ராஜீயத்துறை நிபுணர்கள் எழுதிய சுய சரிதைகளைப் படிப்பது வழக்கம். பெரும்பாலானவர்களின் புத்தகங்கள் விறுவிறுப்பற்ற மொழி நடையில் இருக்கும். சிலவற்றைப் படித்தால் சில நிமிஷங்களுக்கு மட்டுமே நினைவில் இருக்கும், சிலவோ மறக்கவே முடியாது. பல தங்களுடைய தவறுகளையும் குற்றங்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் வகையிலும், தன்னைப் பற்றியே புகழ்ந்துகொள்ளும் தொனியிலும்தான் இருக்கும்.

பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றிய ஒய்.டி. குண்டேவியா எழுதிய ‘அவுட்சைட் தி ஆர்கைவ்ஸ்’ (Outside the Archives) என்ற புத்தகம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் எழுதப்பட்டிருக்கும். தன்னையே மிதமாகக் கேலி செய்துகொள்ளும் நடையும் உண்டு; அரசியலையும் ராஜீயத்துறையையும் நன்கு புரிந்துகொள்ள அந் நூல் உதவும். இன்னொரு வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் எழுதிய ‘சாய்சஸ்’ (Choices) என்ற புத்தகம் இப்போது வெளியாகியிருக்கிறது. இது சுயசரிதையல்ல, ஆனால் கடந்த பத்தாண்டுகளில் வெளியுறவுத்துறைக்கு சமீபகாலங்களில் ஏற்பட்ட 5 ஐயப்பாடுகள் தொடர்பான கருத்துகளைப் பற்றியது. மேனனின் உரைநடை வளமும், ஆய்வியல் கூறுகளும் கொண்டது.

‘அமைச்சர் மட்டும் நான் சொன்னதைக் கேட்டிருந்தால்…’ என்று எழுதுவோரே அதிகம். தன்னுடைய பதவிக் காலத்தில் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் நடந்திருந்தால் அதற்கான புகழையும் தனக்கு உரித்தாக்கிக்கொள்ளும் முயற்சிகளும் சகஜம். மேனனோ சம அந்தஸ்துள்ள அதிகாரிகள், சக பணியாளர்கள் ஆகியோர்களை மனம் திறந்து பாராட்டுகிறார்; ராஜீயத்துறை அதிகாரிகளையும் மற்றவர்களையும் வாயாரப் புகழ்கிறார். மேனனுடைய புத்தகத்திலும் சுய விமர்சனம் உண்டு. அணு உலைகளுக்கான எரிபொருளைத் தடையில்லாமல் பெறுவதற்காக அமெரிக்காவுடன் உடன்பாடு செய்துகொண்டபோது ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவை எப்படித் தாங்கள் கவனிக்காமல் போனோம் என்று வருத்தப்படுகிறார்.

அமெரிக்க இந்திய நெருக்கத்தால் அச்சமடைந்த சீனா, பாகிஸ்தானுடன் மேலும் அதிகமாக இழையத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் பொருளாதார வளம் காரணமாக சீனாவும் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுமோ என்று 2005-ல் அஞ்சிய பாகிஸ்தான், அணுஉலை எரிபொருள் உடன்பாட்டுக்குப் பிறகு சீனத்துடன் மேலும் நெருக்கமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்.

2008 நவம்பரில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகள் மும்பை மாநகரில் நடத்திய பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு தங்களுடைய சிந்தனையும் செயலும் எப்படி இருந்தன என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். பாகிஸ்தான் எல்லை மீறிவிட்டது, இதற்கு வழக்கமான எதிர்வினை மட்டும் போதாது என்று தோன்றியதாகவும், முரிட்கி என்ற இடத்தில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தின் மீது அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரப் பகுதியில் செயல்படும் அவர்களுடைய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும், இந்த அமைப்புக்குப் பின்னால் இருக்கும் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் மீது மறைமுகமாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும் அதே எண்ணம் கொண்டிருந்ததாகவும், “எல்லாவித பதிலடிகளையும் பரிசீலித்து வருகிறோம்” என்று அதனாலேயே அவர் கூறியதாகவும் குறிப்பிடுகிறார் மேனன்.

கடைசியாக, பதிலடி கொடுக்காமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளப்பட்டது. பதிலடி கொடுக்காமல் இருப்பது என்ற முடிவை முதலில் தான் ஏற்கவில்லை என்றாலும் அதுதான் சரி என்று பிறகு நிரூபணம் ஆனதாகக் குறிப்பிடுகிறார். பாகிஸ்தான் மீது அப்போது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தால் முழு பாகிஸ்தானும் அந்நாட்டு ராணுவத்துக்கு ஆதரவாக அணி திரண்டிருக்கும். அப்போது பாகிஸ்தானியரிடையே ராணுவத்தின் மீதான மதிப்பு குறைந்துகொண்டிருந்தது. அப்போதுதான் ஆட்சிக்கு வந்திருந்த சிவிலியன் அரசை அது பலவீனப்படுத்தியிருக்கும்.

இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க புதிய அரசு விரும்பியது, ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதைப் பரிசீலிக்கக்கூடத் தயாராகயில்லை. பதிலடி கொடுக்காததன் மூலம் உலக அரங்கில் பாகிஸ்தானைத் தலைகுனியச் செய்தது இந்தியா. இனி இப்படியொரு தாக்குதல் நடத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று உலக நாடுகள் பாகிஸ்தானிய அரசைக் கடுமையாக எச்சரித்தன.

‘சாய்சஸ்’ புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் வெளியுறவுக் கொள்கையின் நுணுக்கங்கள் சிலவற்றை விளக்கியிருக்கிறார் மேனன். 1. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, எந்தப் பிரச்சினைக்கும் ஒற்றை முடிவோ, சரியான பதிலோ கிடையவே கிடையாது. எந்த ஒரு தீர்வும் எல்லா காலத்துக்கும் பலன் தரும் என்றும் கூறிவிட முடியாது. எந்த நடவடிக்கையெல்லாம் சாத்தியம், வெவ்வேறு நடவடிக்கைகளின் பலன்கள் எப்படி இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும். வியூகம் என்பது நடைமுறைச் சாத்தியமானதைச் செய்வது. கிடைக்கின்ற வாய்ப்புகளை அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி லட்சியத்தை அடைவதுதான் சிறந்த வழி.

2. எல்லா சந்தர்ப்பங்களிலும் பேச்சுவார்த்தை என்ற வழிமுறையைத்தான் கைக்கொள்ள வேண்டும்; சில நேரங்களிலும் சில இடங்களிலும் போருக்கும் இடம் தர வேண்டும். சில வேளைகளில் போர் செய்வதன் மூலம்தான் அதிக உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். அரசு தலையிடாவிட்டால் அதிக அப்பாவிகள் உயிரிழப்பார்கள் என்ற நிலையில் போர்தான் ஒரே வழி. 1970-களில் வங்கதேச விடுதலைக்காக நடந்த போர்; 1990-களில் போஸ்னியாவில் நடந்த போர் இதற்கு உதாரணங்கள்.

3. வெளியுறவுக் கொள்கை வகுப்பில் ஆளுமைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அமெரிக்காவில் கூட ஒருவரிடமே அதிகாரங்கள் குவிந்துவிடக்கூடாது என்பதற்காக நிர்வாகரீதியாக பல கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அதிபரின் ஆளுமையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் நேரு காலத்திலிருந்து வெளியுறவுக் கொள்கையானது பெரும்பாலும் பிரதமர்களால் நேரடியாகக் கையாளப்படுகிறது. பிரணாப் முகர்ஜி போன்றோர் விதி விலக்கு.

ஆளுமைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு - எந்த அளவுக்கு? அதிகாரப் பதவி, ஆணவம் என்ற இரண்டையும் பிரிப்பது மெல்லிய கோடு. கடந்தகால பிரதமர்கள் இதை நன்கு அறிவார்கள். பி.வி. நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்ற மூன்று பிரதமர்களுடன் மேனன் பணியாற்றியிருக்கிறார். மூன்று பேருமே அப் பதவிக்கு வருவதற்கு முன்னால், அப்பதவிக்கு உரிய தயாரிப்புகளுடன் வந்திருந்தனர். மாறிவரும் சூழலுக்கேற்ப வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்ய முன்வந்தனர்.

மூவருடைய காலத்திலும் ஒரு தொடர்ச்சி இருந்தது. மூவருமே தங்களுக்கு முன் பணியாற்றியவர்களின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து அதை அடியொற்றியே மேலும் சிறப்பாகச் செயல்பட்டனர். பிற நாடுகளுடன் முக்கியமான உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கு முன்னால் அது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை கலந்தனர். பத்திரிகை ஆசிரியர்களுக்கும் தகவல்களைத் தெரிவித்தனர்.

இந்த விவரணைகளில் நரேந்திர மோடியின் பெயரை அவர் சேர்க்கவில்லை. முன்பு இருந்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாறுபாடு காணப்படுகிறது. ராவ், வாஜ்பாய், மன்மோகனைப் போல அல்லாமல் வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் நரேந்திர மோடி தன்னுடைய உள்ளுணர்வு சொல்வதன்படிதான் செயல்படுகிறார், அனுபவம் அல்லது சிந்தனை அடிப்படையில் அல்ல. மற்றவர்களைக் கலந்து ஆலோசித்துச் செயல்படாமல், தான் நினைப்பதைச் செயல்படுத்த நினைக்கிறார்.

வெளிநாடுகளில் பேசும்போது காங்கிரஸைக் கடுமையாகச் சாடுகிறார். தனக்கு முன்னால் இருந்த பிரதமர்களை, அதிலும் குறிப்பாக வாஜ்பாயைக் கூட அவர் புகழ்வதில்லை. அரசியல் லாபத்தைவிட நாட்டின் நன்மையையே பெரிதெனக் கருதிச் செயல்பட்டார் வாஜ்பாய். மோடியைப் பற்றி அப்படிக் கூற முடியுமா?

4. வெளியுறவுக் கொள்கையில் வெற்றிக்குக் காரணங்களாக அமைவது அமைதியான பொறுமையான திரைமறைவான ராஜீய நடவடிக்கைகள்தான். அரசியல்வாதிகளின் அர்த்தமில்லாத ஆரவாரப் பேச்சோ, ஊடக நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தேசபக்திக் கூச்சல்களோ பலன் தராது. எல்லை தொடர்பாக சீனாவுடன் இறுதி உடன்பாடு ஏற்படாவிட்டாலும், பிரச்சினைகளுக்கு இடையிலும் நட்புறவைப் பராமரிக்கும் இரு நாடுகளின் அணுகுமுறை இதற்கு நல்ல உதாரணம்.

எல்லையைக் கடந்து செயல்படுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டாலும், பாகிஸ்தானுடனான எல்லையுடன் ஒப்பிடும்போது சீன எல்லைப் பகுதி அமைதியாகவே திகழ்கிறது. எல்லைப் பிரச்சினையைத் தாண்டி இரு நாடுகளுக்கும் முக்கியமான விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. இரு தரப்பு வர்த்தகம் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 70 மடங்கு வளர்ந்திருக்கிறது. அவ்வளவு ஏன், சீனாவுடன் இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சி ஒத்திகையில்கூட ஈடுபட்டிருக்கிறது. சீனப் பல்கலைக்கழகங்களில் 10,000 இந்திய மாணவர்கள் பயில்கின்றனர்.

கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் இணைந்து செயல்படும் வாழ்முறைமை, சீனா விஷயத்தில் சாத்தியமாகியிருக்கிறது. பொது மேடைகளில் காரசாரமாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, நமது வலிமையை வெளிப்படுத்தி, எதிராளி முட்டுக்கட்டை நிலையிலிருந்து வெளியேற வாய்ப்பு தருவதன் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார் மேனன். பகிரங்கமாக ட்விட்டர் மூலம் கருத்து தெரிவிப்பது, பொது மேடைகளில் முழக்கமிடுவது, அணு ஆயுதங்களைப் பொதுப்பார்வைக்கு அணிவகுக்கச் செய்வது, போர் வரும் என்று அச்சுறுத்துவது, 2013 மே மாதம் சில ஊடகங்கள் கூரை மீது ஏறி நின்று போட்டிக்கு சவால் விட்டதுபோல் செயல்பட்டால் வெளியுறவுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்கிறார் மேனன்.

“மிகவும் நிதானத்துடன் பேசுவதும் பேசும்போது கையில் பெரிய பிரம்பை வைத்துக் கொள்வதும்தான்” சீனம் போன்ற நாடுகளுடனான உறவில் நமக்கு நல்ல பலன்களைப் பெற்றுத்தரும் என்கிறார் மேனன். “மவுனமாக இருக்கிறவன் எல்லா உலகங்களையும் வெற்றி கொள்கிறான்” என்று அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர் எல்லா அரசர்களுக்கும் அறிவுரையாகச் சொன்னதை நினைவுகூர்கிறார். இந்த வார்த்தைகள் புது டெல்லியிலும் அதற்கு அப்பாலும் கேட்கப்பட வேண்டும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x