Last Updated : 29 Apr, 2017 09:24 AM

 

Published : 29 Apr 2017 09:24 AM
Last Updated : 29 Apr 2017 09:24 AM

வாசகர்களுடன் உரையாடல்: "மிரட்டல்களுக்கு ‘தி இந்து’ அஞ்சாது!"

தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் 23 ‘உலகப் புத்தக நாள்’ ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் எழுச்சியோடு கொண்டாடப்பட்ட நிலையில் ‘தி இந்து’வும் தன் பங்குக்கு வாசகர்களுடனான கொண்டாட்டமாக அதை மாற்றியிருந்தது. தன்னுடைய வெளியீடுகள் எல்லாவற்றையும் 50% தள்ளுபடி விலையில் அன்றைய தினம் அளித்ததோடு, சென்னையிலுள்ள ‘தி இந்து’ தலைமை அலுவலகத்தில் வாசகர்களுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. ரூ.15 லட்சத்துக்கு அன்று ஒரே நாளில் ‘தி இந்து’வின் வெளியீடுகள் விற்பனையாயின. வாசகர்களுடனான சுவாரசியமான உரையாடலில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் இருவரும் பங்கேற்றனர். உரையாடலின் சில பகுதிகள்…

வாசகர் ராஜசேகரன்: தமிழ் மொழி அழிந்துவிடுமா?

சமஸ்: கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் பேசும் உயிர்ப்பான மொழி நம்முடையது. இந்த எண்ணிக்கை உலகில் தனித்த பல தேசங்களின் மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகமானது. எவ்வளவோ படையெடுப்புகளை, கலாச்சார மாற்றங்களை எதிர்கொண்டுவந்திருக்கிற மொழி நம்முடையது. அது அழிந்துவிடும் என்ற அச்சம் அர்த்தமற்றது.

சாரு நிவேதிதா: தமிழ் அழிந்துவிடும் என்று நானும் கருதவில்லை. ஆனால், உயிரோடு இருக்கும்போது அதன் நிலை என்னவாக இருக்கிறது என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது. ஒரு மொழிக்குள்ள உண்மையான செல்வாக்கை, அதிகாரத்தை ஒரு எழுத்தாளருக்கு அந்த மொழியிலும் சமூகத்திலும் என்ன மரியாதை இருக்கிறது என்பதைக் கொண்டுதான் அளவிட முடியும். ஆனால், இங்கே எழுத்தாளனின் நிலை என்ன? பிச்சைக்காரனைப் போல அவனை வைத்திருக்கும் ஒரு சமூகம் எப்படி அதிகாரத்தைக் கனவு காண முடியும்? இந்நிலை மாற வேண்டும்.

வாசகர் வெங்கடாசலம்: ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்றெல்லாம் கொண்டுவரும் இந்திய அரசு ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்தால் என்ன?

சமஸ்: நம் இந்திய நாட்டின் அடிப்படையே பன்மைத்துவம்தான். அதுவே இந்தப் பெருநிலத்தை ஒரு ஒன்றியமாக நீடிக்கவைக்கும் இணைப்புப் புள்ளி. எல்லா வண்ணங்களையும் ஒரே வண்ணமாக மாற்ற நினைப்பது பாசிஸ மனோபாவம். ‘ஒரே’ என்கிற வார்த்தையே அச்சமூட்டுவதாக இன்று மாறிவிட்டது. 1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டபோது, கல்வித் துறை மாநிலங்களின் அதிகாரத்திலேயே இருந்தது. விளைவாகவே தனித்துவமான தம்முடைய கல்விக் கொள்கைகளால் கேரளமும் தமிழகமும் இன்று முன்னணியில் இருக்கின்றன. படிப்படியாக மாநிலங்களின் அதிகாரம் பறிபோனதன் விளைவாகவே இன்று ‘நீட்’ தேர்வுத் திணிப்பை எதிர்கொள்கிறோம். இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரே பாடத்திட்டம் அவசியமில்லை. ஆனால், ஒரே கல்வித் தரம் வேண்டும்.

சாரு நிவேதிதா: இந்த ‘ஒரே’ எனும் கேள்விகள் எங்கிருந்து வருகிறது என்றால், பாரபட்சத்தினால் வருகிறது. அதுதான் ‘ஒரே’ எனும் ஒற்றைத்தன்மையிலுள்ள அபாயத்தை மறைத்துவிட்டு, நல்லது என்று நம்பவைக்கிறது. நகரத்தில் இருக்கும் வசதி இன்று கிராமத்தில் இல்லை. ஒரு நகரவாசிக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் கிராமவாசிக்கு இல்லை. இதுதான் ஒருவேளை ‘ஒரே’ என்பது சரியான தீர்வாக இருக்குமோ என்று யோசிக்கவைக்கிறது. வளர்ந்த நாடுகளில் இந்தக் கேள்வி எழாமலிருக்க என்ன செய்தார்கள் என்றால், அதிகாரப் பரவலாக்கம் செய்தார்கள். உதாரணமாக, எல்லா முக்கியமான அலுவலகங்களையும் சென்னையிலேயே குவிக்காமல், ஒன்று குமரியில், ஒன்று திருச்சியில்… இப்படி. அது வசதிகளையும் பரவலாக்கும்போது கிராமவாசி ஏன் ‘ஒரே’ முழக்கத்தை நம்பப்போகிறார்? இதுதான் பிரச்சினையோட வேர். ‘ஒரே’ முழக்கம் பெரிய ஆபத்து.

வாசகர் நதீம் அஹம்மது: இந்துத்துவத்தை எதிர்ப்பதுபோலவே வஹாபியத்தையும் எதிர்த்து ‘தி இந்து’ கட்டுரைகளை வெளியிட்டது. மதவாதம் என்றால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து ‘தி இந்து’ இப்படியான விஷயங்களை எழுத வேண்டும். அதேசமயம், எதிர்ப்பு வருவதால் வஹாபியத்தைப் பற்றி எழுதுவதில் தயக்கம் காட்டுகிறீர்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது…

சமஸ்: இன்றைக்குச் சமூகத்தில் முஸ்லிம்களைப் பற்றி வெளியே எப்படி தவறான கண்ணோட்டங்கள் பரப்பப்படுகின்றன, உள்ளே எல்லாச் சமூகங்களிலும் ஜனநாயகக் குரல்கள் எப்படி ஒலிக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணமாக நீங்கள் நிற்கிறீர்கள். வணக்கங்கள்! ‘தி இந்து’ எந்த மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை. எந்த ஒரு அமைப்புக்கும் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த போக்கோடும் மோதக்கூடிய துணிச்சல் மிக்கவராக எங்கள் ஆசிரியர் அசோகன் இருக்கிறார். ‘மோடியின் காலத்தை உணர்தல்!’ தொடர்கூட அதற்கான ஓர் உதாரணம்தான். இடதுசாரி, வலதுசாரி இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் வரும் என்று தெரிந்தேதான் தொடங்குகிறோம். உண்மைக்கு விசுவாசமாக இருப்பது என்று முடிவெடுத்துவிட்டால், உலகில் வேறு யாருக்கும் ஒருவர் விசுவாசமாக இருக்க முடியாது. ஆனால், வலதுசாரியோ, இடதுசாரியோ எல்லோரும் இன்று நிபந்தனையற்ற விசுவாசத்தை எதிர்பார்க்கிறார்கள். பத்து விஷயங்களில் ஒன்பதில் உடன்பட்டு, ஒரே ஒரு விஷயத்தில் முரண்பட்டால்கூட நம் மீது ஏதாவது முத்திரை குத்தி, ஒதுக்கிவிடத் துடிக்கிறார்கள். நாங்கள் அஞ்சுவதில்லை. எல்லா ஊடகங்களும் ஆளுங்கட்சியின் அதிகாரச் சண்டையில் நாளெல்லாம் மூழ்கிக் கிடந்த நாட்களில்தான் அவற்றைப் புறந்தள்ளி, தேசிய ஊடகங்களே கண்டுகொள்ளாத ‘சம்பாரண் சத்தியாகிரக’ நூற்றாண்டைப் பற்றி ஒரு வாரம் முழுக்க கட்டுரைகளை வெளியிட்டோம். மொழியுரிமைக்காகத் தொடர் கட்டுரைகளை வெளியிட்டோம். ஒட்டுமொத்த அலைக்கும் எதிராகப் போராட வேண்டும் என்றே நினைக்கிறோம். அலைகளை நாம் உருவாக்குவோம் என்று சொல்வார் ஆசிரியர் அசோகன். ஆக மதம், இனம், மொழி என்று எந்தப் பெயரில் அடிப்படைவாதம் வந்தாலும் அதற்கு எதிராகத் தயங்காமல் முழு மூச்சுடன் போராடுவோம்.

வாசகர் பன்னீர்செல்வம்: நவீன தமிழ் இலக்கியத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?

சாரு நிவேதிதா: என் ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ புத்தகத்தில் தமிழின் முக்கியமான முன்னோடிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். கு.ப.ரா., க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், சி.சு. செல்லப்பா புத்தகங்களை முதலில் வாசியுங்கள். என் நண்பர்களிடமெல்லாம் சொல்வேன் ‘தி. ஜானகிராமனைப் படிக்கவில்லையென்றால் நீங்கள் வீண்தான்’ என்று. அப்பேர்ப்பட்ட மேதை! லா.ச.ரா., ஒரு கடவுள்! சமீபத்தில் பா.வெங்கடேசன் எழுதிய ‘பாகிரதியின் மதியம்’ படித்தேன். அற்புதம்!

உரையாடல் இன்னும் விரிந்தது. வாசகர்கள் ‘தி இந்து’ அன்றாட வாழ்வில் எப்படிப் பிணைந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். இப்படியான உரையாடலை அடிக்கடி நடத்த வேண்டும் என்று கூறி, தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுவிட்டுப் புறப்பட்டார்கள்.

- இந்த நிகழ்வின் சுருக்கமான காணொலிப் பதிவை ‘ஸ்ருதி டிவி’யின் யூடியூப் அலைவரிசையில், இந்த இணைப்பில் காணலாம்:

https://goo.gl/fvHxXi

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x