Published : 31 Jul 2016 11:12 am

Updated : 14 Jun 2017 15:32 pm

 

Published : 31 Jul 2016 11:12 AM
Last Updated : 14 Jun 2017 03:32 PM

கர்னாடக இசைக் கச்சேரி: கலை நோக்கில் சில கேள்விகள்

கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, ‘உருவாகிவரும் தலைமை’ என்னும் பிரிவின் கீழ் இந்த ஆண்டுக்கான ராமன் மகசசே விருது வழங்கப்பட்டுள்ளது. பண்பாட்டுத் தளத்தில் சமூக இணக்கம் காண விழையும் அவரது முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தனித்துவமிக்க இசைக் கலைஞரான கிருஷ்ணா, இசைச் சூழல் குறித்த தனது கூர்மையான சிந்தனைகளையும் முன்வைத்துவருகிறார். விருதுபெற்றுள்ள இந்தத் தருணத்தில் ‘The Southern Music A Karnatic Story’ என்னும் அவரது நூலில் இடம்பெற்றுள்ள ‘The Karnatik Concert Today: A Critique’ என்னும் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகிறோம்:

இன்று கச்சேரி நடக்கும் விதத்தைப் பார்க்கும்போது ராகங்களின் தேர்வு, தாளங்கள், லயம், வாக்கேயக்காரர்கள், மொழிகள் ஆகிய அம்சங்களிடையே மேலோட்டமான தொடர்பே இருப்பதாகத் தோன்றுகிறது. பிரதான பாடல் / ராகத்துக்கு முன்பு சில கீர்த்தனைகள், ராகம் - தானம் - பல்லவிக்குப் பிறகு பல பாடல்கள் - இதுதான் கச்சேரியின் கட்டமைப்பு. இந்த அமைப்பு கீர்த்தனைகளைப் பாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பாடல்களின் உள்ளார்ந்த இசையின் சாரத்தை ஆராய்வதற்கு அல்ல.


இசைப் பாடல்களை (composition) வேகமாகப் பாடிச் செல்வதுதான் நம் வேலையா, அல்லது அவற்றின் உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்துவதும் நம் வேலையா? பல விதமான இசைப் பாடல்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றால் அவற்றை நம் கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் அழகியல் படைப்புகளாக நாம் காண வேண்டும். இசை சார்ந்த கற்பனைகளின் வாயிலாக அவை தம்மைச் சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கீர்த்தனைகளின் எண்ணிக்கை

அதிக எண்ணிக்கையில் கீர்த்தனைகள் பாடப்படும் பல கச்சேரிகள் நாம சங்கீர்த்தன நிகழ்வுகளைப் போல இருக்கின்றன. இது கச்சேரியின் அழகியலின் சாரத்தையே சிறுமைப்படுத்துகிறது. கீர்த்தனைகளைக் கலாபூர்வமாக மேம்படுத்தி வெளிப்படுத்துவதுதான் மனோதர்மத்தின் பங்கு. கீர்த்தனைகளை அதிகமாகப் பாடிச் செல்லும்பட்சத்தில் மனோதர்மத்தில் படைப்பம்சம் இருக்காது. பயிற்சிசெய்து நிகழ்த்தும் உத்தியாக அது மாறிவிடும். கச்சேரியில் கீர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதித்ததன் மூலம் இசையின் தரத்தைத் தாழ்த்தியிருக்கிறோம்.

நாம் பாடும் பல கீர்த்தனைகளைவிடவும் முழுமை யான கலை வடிவங்களாகப் பல வர்ணங்கள் உள்ளன. வர்ணத்தைக் கச்சேரியின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் அழகியல் படைப்பாக வழங்கலாம். ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் ஆகியவற்றுடன் இதை வழங்க வேண்டும். நிரவலுடன் ஒரு வர்ணத்தை வழங்குகையில் இசைக் கலைஞர்களுக்குத் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தப் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. வர்ணத்தின் அமைப்பே நிரவலுக்கு வித்தியாசமான அழகியலைத் தருகிறது. வர்ணம் தரும் இந்த வாய்ப்பைப் பொதுவாக நாம் உணருவதில்லை.

பதம் என்பதும் முக்கியமானதொரு இசை வடிவம். இது நகைகளில் செய்யப்படும் அதிநுட்பமான நகாசு வேலைப்பாடுகளைப் போன்றது. ராகத்தின் சிக்கலானதும் கம்பீரமானதுமான வெளிப்பாடு. ஆனால் கச்சேரியின் பிரதான பகுதியில் இதற்கு இடம் இல்லை. பதங்களின் வரிகளில் பாலுணர்வு ததும்புவதுதான் இதற்குக் காரணமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. இத்தகைய வரிகளைக் கச்சேரியின் பிரதான பகுதியில் இடம் பெறச் செய்வதும் மனோதர்மத்துக்கு, குறிப்பாக நிரவலுக்கு இதைப் பயன்படுத்துவதும் தூய்மைவாதிகளுக்கு அசௌகரியமாக இருந்திருக்கலாம். பாலுணர்வு ததும்பும் கவித்துவ வரிகளை நிரவலில் திரும்பத் திரும்பப் பாட வேண்டியிருக்கும் என்பதால் இது பிரதான பாடலாகப் பயன்படுத்தப்படுவதில்லையோ எனத் தோன்றுகிறது.

கச்சேரியில் சில சமயம் இடநிரப்பியாகக் கீர்த்த னைகள் பயன்படுத்தப்படுகின்றன. விஸ்தாரமான ஒரு விஷயம் முடிந்து கலாபூர்வமான இன்னொரு இசைப் பயணத்துக்குச் செல்வதற்கு முன் கலைஞரும் ரசிகர்களும் மனரீதியாக ஆசுவாசம் கொள்வதற்காக இடையில் சிறிய பாடல்கள் சிலவற்றைப் பாட வேண்டியிருக்கிறது என்பதுதான் இதற்குப் பின் உள்ள தர்க்கம். ஆனால் இது உண்மையிலேயே அவசியம்தானா? இடநிரப்பியாக வழங்கப்படும்போது கீர்த்தனைகள் அழகியல் ரீதியாக என்ன பங்களிப்பைச் செய்கின்றன?

இந்த இடநிரப்பிகள் பெரும்பாலும் வேகமாகப் பாடப்படுகின்றன. ஏனென்றால் இதற்கு முன்போ பின்போ பிரதானமாகப் பாடப்படும் கீர்த்தனையில் மனோதர்மம் இணைந்திருப்பதால் ஒப்பீட்டளவில் மெதுவாகப் பாடப்படும். வேகமாகப் பாடப்படும் பாடல்களில் மனோதர்மத்துக்கான இடம் குறைவுதான். இந்தப் பாடல்களைச் சிறுமைப்படுத்தும் போக்கையே இது பிரதிபலிக்கிறது.

கலாபூர்வமான வேறு எந்த இசை வடிவத்திலும் ஆசுவாசத்துக்காக என எதுவும் சேர்க்கப்படுவதில்லை. சிறியதோ, பெரியதோ, ஒவ்வொரு கீர்த்தனையும் சமமான தீவிரத் தன்மையுடன் வழங்கப்பட வேண்டும். ஒரு பாடல் அழகியல் அனுபவத்தைத் தரவில்லை என்றால் அதைத் தவிர்த்துவிடும் துணிவு நமக்கு இருக்க வேண்டும்.

சுயபரிசோதனை தேவை

கச்சேரி குறித்த நமது கருத்துகளையும் இசையை வழங்குவதில் நமக்குள்ள நோக்கங்களையும் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியது அவசியம். ரசிகர்களின் கரகோஷம் கலைஞரின் வரம். அது ஒரு போதை. பல ஆண்டுக்கால அனுபவத்தில் கலைஞர்கள் ரசிகர்களின் கரகோஷங்களைப் பெறும் கலையில் தேறிவிட்டார்கள். இதை நோக்கி நாம் ரசிகர்களைப் பயிற்றுவித்திருக்கிறோம். நமது முன்னுரிமைகளை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு இதை விடவும் மேலான இசை அனுபவத்தை நாம் வழங்க வேண்டும். கைத்தட்டல் வாங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு அம்சத்தையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆலாபனை பாடும் பாணி, கீர்த்தனைகளைப் பாடுதல், நிரவல், கல்பனா ஸ்வரங்கள், தனி ஆவர்த்தனம் ஆகியவை எப்படிக் கைத்தட்டல் வாங்குவது என்பதை வைத்துத் தீர்மானிக்கப்படக் கூடாது. பாராட்டுக்கள் இசையின் தன்மையைப் பொறுத்து எழ வேண்டும். இசையை வழங்குவதில் உள்ள சமத்காரங்களால் அல்ல.

கர்னாடக இசை என்னும் அலாதியான கலை வடிவம் நமக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றால் நாம் நமது தனிப்பட்ட முன் அனுமானங்களையும் சமூக ரீதியான முன்தீர்மானங்களையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

கச்சேரியின் கட்டமைப்பை நாம் மறுபரிசீலனை செய்தாக வேண்டிய தேவை உள்ளது. மனோதர்மம் புரிந்துகொள்ளப்படும் விதமும் கையாளப்படும் விதமும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இசையின் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் விதம், கலைஞர்களின் மனப்போக்கு ஆகியவையும் மறுபரிசீலனைக்கு ஆளாக வேண்டும்.

தமிழில் சுருக்கமாக: அரவிந்தன்
டி.எம்.கிருஷ்ணா, தொடர்புக்கு: tm.krishna@gmail.com

முன்கை எடுத்துச் செயல்பட வேண்டும்

கர்னாடக இசை உலகில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் ஆதிக்கம் நிலவுவது பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். பிற சமூகப் பிரிவுகளிலிருந்து வருபவர்களும் இந்தச் சூழலுக்கு ஏற்ற மாதிரி தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது இல்லையா?

ஆமாம். நீங்கள் இசையை மட்டும் உள்வாங்கிக்கொண்டால் போதாது. அதன் சமூக, கலாச்சார அம்சங்களையும் சேர்த்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய தேவை வந்துவிடுகிறது. கர்னாடக இசை உலகில் மட்டுமல்ல. பொது வாழ்விலும் இதே நிலைதான். ஆண்களின் உலகிற்கேற்பப் பெண்கள் தங்களை அடாப்ட் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதை உள்வாங்கி அதில் சிறந்து விளங்க அந்த அளவுகோலுக்குள்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்த ஆட்டத்தை ஆடியாக வேண்டும். எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். இந்த ஆட்டத்துக்குள்தான் நமக்கான இடத்தையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் பெரும்பகுதி சப்கான்ஷியஸில் நடக்கிறது.

இன்று இந்த அடையாளத்தைத் தாண்டி ஒரு கலைஞர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?

முடியும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு பிரிவினர் இசையில் ஆதிக்கம் செலுத்துவதால் அந்தப் பிரிவினருக்கும் பிறருக்குமான இடைவெளி ரொம்ப அதிகமாகிவிட்டது. அதுதான் அந்தச் சமூகத்தின் சோகம். நானும் அந்தச் சமூகத்துக்குள்தான் இருக்கிறேன். அந்தச் சமூகம் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டுவிட்டது. அதனால் இந்தச் சமூகம் தவிர்த்த பொது உலகம் இன்னும் விலகிப் போய்விட்டது. இசைச் சூழலுக்குள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மற்றவர்களை இழுத்துக்கொண்டு வர வேண்டியிருக்கிறது.

குறிப்பான முயற்சிகள் இல்லாமல் மாற்றம் வராது. இந்தச் சூழலின் எல்லைகளை எப்படி விரிவுபடுத்துவது என்பதுதான் என் கேள்வி. ‘நான் எப்போவாவது யாரையாவது எங்கிட்ட வந்து கத்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா?’ என்று குறைந்தது நூறு பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள். நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதாலேயே மாற்றம் நடந்துவிடாது. சில சமயம் நாமே முன்கை எடுத்துச் செயல்பட வேண்டியிருக்கிறது.

(2014 ‘தி இந்து' தீபாவளி மலரில் வெளியான பேட்டியிலிருந்து சந்திப்பு: அரவிந்தன்)


சில கேள்விகள்கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாகீர்த்தனைகளின் எண்ணிக்கைசுயபரிசோதனை தேவை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x