Published : 17 Jun 2017 09:44 AM
Last Updated : 17 Jun 2017 09:44 AM

செங்கோட்டையனுக்கு இரு பூங்கொத்துகள்!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் ஆரோக்கிய மான சலனங்களின் தொடர்ச்சியாக, முக்கியமான 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். பன்னெடுங்காலமாகப் பெற்றோரும் மாணவர்களும் ஏங்கிக்கொண்டிருந்த, தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்த பல கோரிக்கைகளுக்கு இந்த அறிவிப்புகளின் மூலம் செவிசாய்த்திருக்கிறது தமிழக அரசு. புதிதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்பதில் தொடங்கி, ‘4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்; கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நடத்தப்படும்; காணொலி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், கைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் அமைக்கப்படும்; அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும்” என்பது தொட்டு, உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும் என்பது வரையிலான 37 அறிவிப்புகளும் வரவேற்புக்குரியவை என்றாலும், இந்த அறிவிப்புகளின், புதிய போக்கின் மையமாக இருக்கும் ஒரு விஷயத்தையே இங்கே சுட்டிக்காட்டிக் கொண்டாட வேண்டியிருக்கிறது.

அது, பள்ளிக்கூடச் சுவர்களுக்கும் பாடப் புத்தகங்களுக்கும் வெளியில் நடக்கும் கற்றலைத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அங்கீகரித்துச் செயலாற்றும் முடிவை எடுத்திருப்பது. குறிப்பாக, புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் வாசிப்புக்கும் அது கொடுக்கத் தொடங்கியிருக்கும் முக்கியத்துவம் - இது நிச்சயம் பெரும் மாற்றத்தை உண்டாக்கும்!

புத்தக வாசிப்பு தொடர்பாக மட்டும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் முக்கியமான அறிவிப்புகள் இவை: “31,322 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடியில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்; ரூ.25 கோடியில் பொது நூலகங்களுக்கும், ரூ.5 கோடிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கும் புதிய நூல்கள் வாங்கப்படும்; அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ரூ.3 கோடியில் புத்தகக் காட்சி நடத்தப்படும்; மதுரையில் ரூ.6 கோடியில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்; ரூ.1.84 கோடியில் 123 முழுநேரக் கிளை நூலகங்களுக்கு மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி உண்டாக்கப்படும்; ரூ.2. கோடியில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்; அரிய வகை நூல்களையும் ஆவணங்களையும் பொதுமக்களிடமிருந்து கொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும்; அரிய வகை நூல்களைப் பாதுகாப்பதற்காகத் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும்; ரூ.5 கோடியில் நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.”

தமிழ் மக்களின் வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டுசெல்லும் உள்ளக்கிடக்கையை நேரடியாக வெளிப்படுத்துகின்றன இந்த அறிவிப்புகள். கல்வித் துறையை மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து பறிக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் மறைமுக நடவடிக்கைகளின் நடுவே, தமிழகக் கல்வித் துறை ஒரு பெரும் மூச்சுத்திணறலுக்கு நடுவே புத்துயிர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டத்தில் இந்த அறிவிப்புகள் எல்லாம் வெளியாவது உண்மையாகவே பெரிய ஆறுதல். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரச் சண்டைகளால், அரசின் பல்வேறு துறைகளிலும் தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து விதிவிலக்காகச் செயல்பட்டுவருகிறது பள்ளிக்கல்வித் துறை. இருவர் இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செயலர் த.உதயசந்திரன். இருவருக்கும் இந்த அறிவிப்புகளுக்காகப் பூங்கொத்துகள் வழங்கலாம் என்றால், செங்கோட்டையனுக்குக் கூடுதலாக இன்னொரு பூங்கொத்தும் வழங்க வேண்டும்.

சரியான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, படைப்பூக்கத்துடன் தொடர்ந்து செயல்படுவதற்கான உத்வேகத்தையும் அளிப்பதற்காகவே அந்த இரண்டாவது பூச்செண்டு. அறிவிப்புகள் காரியங்களாகட்டும், கனவுகள் மெய்ப்படட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x