Published : 25 Jun 2017 11:18 AM
Last Updated : 25 Jun 2017 11:18 AM

தேவதாஸ் 100: காதல் தோல்வியின் கதையல்ல...

வங்க மொழியின் மாபெரும் இலக்கிய ஆளுமைகளான ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி இருவரின் பாடல் வரிகள் தேசமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சரத் சந்திர சட்டோபாத்யாயா கவிஞர் இல்லை. ஆனால், அவரது கதாபாத்திரங்களான தேவதாஸும் பார்வதியும் இதிகாசப் பாத்திரங்களுக்கு இணையாக இந்தியர்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்கூட திரைப்படங்களின் வழியாக தேவதாஸையும் பார்வதியையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்திய மொழிகள் பலவற்றிலும் தேவதாஸ் நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கிறது. எம்.எம்.எஸ். காலகட்டத்தில் தேவதாஸின் இளமைப் பருவத்துக் காதல் எப்படி இருக்கக்கூடும் என்ற கற்பனையை அனுராக் கஷ்யப் ‘தேவ் டி’ என்ற தலைப்பில் திரைப்படமாக்கியுள்ளார்.

தேவதாஸ் நாவல், 1917-ல் வெளியானது. சரத் சந்திரர் அந்த நாவலை 17 வயதில் எழுதினார். எழுதப்பட்டு பதினேழு ஆண்டுகள் ஆன பிறகு அந்த நாவல் வெளிவந்தது என்று இரண்டு கருத்துகள் உலவுகின்றன. எனினும் ஆண்டுக்கணக்கில் இக்கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. சரத் சந்திரர் இளம் வயதில் எழுதிய நாவல், சில ஆண்டுகள் கடந்த பின்னரே வெளியானது என்பது மட்டும் உறுதி. கதேயின் இளம் வெர்தரின் துயரங்கள், பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ ஆகியவற்றுக்கு இணையாக அந்த நாவல் நிறைவேறாத காதல் விருப்பத்தின் துயரத்தைச் சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், அது காதல் தோல்வியின் கதை மட்டுமில்லை. அன்றைய நாளில் வங்கத்தில் வழக்கத்திலிருந்த பால்ய விவாக முறையாலும், பணம் கொடுத்து எண்ணற்ற பெண்களை மணந்துகொள்ளும் ‘குலீன்’மண முறையாலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் சித்தரிப்பும்கூட.

தேவதாஸ், பிஹாரின் பாகல்பூரில் வசித்தபோது தனது நண்பரின் தங்கையும் தீவிர இலக்கிய வாசகருமான நிருபமாவைக் காதலித்தார். கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த நிருபமா, சரத் சந்திரரின்மீது பெருமதிப்பு வைத்திருந்தார். பார்வதியைப் போல, திறமையும் அறிவும் அழகும் கொண்டவர் நிருபமா. ஆனால், சரத் சந்திரரின் காதலை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. காரணம், அவர் குழந்தைப் பருவத்திலேயே மணமானவர், கணவன் இறந்ததால் விதவையானவர். தனக்கு சமூகம் விதித்த கட்டுப்பாடுகளை மீற விரும்பாதவர். சில புத்தகங்களில் அவரது பெயர் தீரு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிருபமாவின் நற்பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்ற காரணத்துக்காகவே சரத் சந்திரர் பர்மாவுக்குப் போனார். பார்வதியைப் பிரிந்து கல்கத்தாவுக்குப் போன தேவதாஸ் போல. ஆனால், பாவம் சரத் சந்திரர். அவர் ஜமீன்தாரரின் மகனல்ல. ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வறுமையின் சகல விதமான துயரங்களையும் அனுபவித்தவர். இருந்தாலும் கதையில் வரும் தேவதாஸ் அவரேதான். தேவதாஸின் ஒட்டி உலர்ந்த கன்னங்களும், முகத்திலிருந்து தனியாகத் தெரியும் அந்த கூர் மூக்கும், காற்றில் அலையும் தலைமுடியும் சரத் சந்திரருடையவைதான். ஆனால் பார்வதி ஒருத்தியல்ல. சரத் சந்திரரின் ஆரம்பப் பள்ளி நாட்களில் அவராடு படித்தவள் காளிதாஸி. அவளோடுதான் அவர் நெருங்கிப் பழகினார். அவளை அடிக்கடி அழ விடும் பழக்கம் சரத் சந்திரருக்கு இருந்தது. இந்த அனுபவமே தேவதாஸ்- பார்வதியின் இளம் வயது நட்பாக உருமாறியிருக்கிறது.

பார்வதியைப் போலவே வாசகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட இன்னொரு பாத்திரம் சந்திரமுகி. அவளிடம் பார்வதியைக் கண்டடைய முயன்று தோற்கிறான் தேவதாஸ். அவளும் சரத் சந்திரரின் கற்பனையல்ல, அனுபவமே. அவள் காளிதாஸி என்ற பெயரில் சில கட்டுரைகளில் குறிப்பிடப்படுகிறாள். சரத் சந்திரரின் வாழ்க்கை வரலாறுகளில் இப்படி பெயர், இடம், ஆண்டு குழப்பங்கள் நிறைய உண்டு.

தன்னை நேசித்த, தான் நேசித்த ஒருத்தியின் மடியில் தலைசாய்த்து மரணிக்க வேண்டும், தனக்காக அவள் சிந்தும் கண்ணீரைக் காண வேண்டும் என்ற தேவதாஸின் கடைசி ஆசையும் நிறைவேறவில்லை. சபிக்கப்பட்ட அந்த மரணத்துக்கான காரணம் அவனேதான். அவனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதைவிடவும் பலமடங்கு அதிகமாக பார்வதியால் திருப்பியளிக்கப்பட்டது. ஆனாலும், அவன், அவளை மணந்துகொள்ளத் துணியவில்லை. அவனது மனத் தடைக்குக் காரணம், சாதிய உணர்வு மனோபாவம் மட்டுமே. காதலின் உணர்ச்சி வேகத்தில் அவளை மணந்துகொள்ள உறுதியளித்தாலும், குடும்பக் கட்டுப்பாட்டை மீறி அவளின் கைத்தலம் பற்ற அவன் தயாராக இல்லை. பார்வதியின் கனவுகள் நொறுங்கி, அவள் கைம்மை நோன்புக்கு ஆளாக்கப்பட்டதற்கு அவனது சாதிய மனோபாவமே காரணம். அந்தக் குற்றவுணர்ச்சிதான் அவனைக் கொன்று தின்றது.

‘தேவதாஸ்’ குடிவெறியில் எழுதப்பட்டது என்று சரத் சந்திரர் தனது நண்பர் பிரதம பாபுவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவரது பெரும்பாலான சுய விவரணைகள், எழுத்தாளர்களுக்கே உரிய மிகைப்படுத்தும் குணாம்சத்தோடு இருக்கின்றன. பர்மாவில் கூலித் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் வசித்தவர் அவர். அங்கு ஏழைகளின் நிலை கண்டு இரங்கி, அவர்களுக்கு உதவுவதற்காக ஹோமியோபதி கற்றுக்கொண்டவர் அவர். தேசபந்து சித்தரஞ்சன் தாஸுடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். கல்கத்தா மேயராகும் வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு சுபாஷ் சந்திர போஸ் வேண்டியபோது, அந்த அரசியல் தகுதி தனக்கில்லை என்று மறுத்தவர். ஆனால், அனைத்தையும் தாண்டி இளம் வயது அனுபவங்களைக் கொண்டு அவர் உருவாக்கிய கதாபாத்திரத்தின் சாயலோடுதான் பெரிதும் அடையாளம் காணப்படுகிறார்.

சாதிய உயர்வுதாழ்வுகளைக் கணக்கில் கொண்டு காதலை மறுத்த அவர், பர்மாவில் குடிகாரத் தந்தையிடமிருந்து காப்பாற்றுவதற்காக சாந்திதேவியை மணந்துகொண்டார். இயற்கை அதற்கு அனுமதிக்கவில்லை. சாந்திதேவியும் அவர்களுக்குப் பிறந்த பச்சிளம் குழந்தையும் இறந்துபோயினர். அதையடுத்து ஒரு ஏழைத் தந்தையின் வேண்டுகோளை ஏற்று, ஹிரண்மயி தேவியை மணந்துகொண்டார். சரத் சந்திரரின் புனைவுலகம் முழுவதிலும் பெண்கள் அனுபவிக்கும் துயரங்களே நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, இளம் வயதில் விதவையாக வாழ நேர்ந்தவர்களைப் பற்றி அவர் நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். சரித்திர ஹூன், பள்ளி சமாஜ்,

ஸ்ரீகாந்த், படோ தீதி, சேஷ் பிரச்ன என்று அந்தப் பட்டியல் நீளமானது. காலம் மாறிவிட்டது. இப்போது வங்கத்தில் பால்ய விவாகம் இல்லை. ஆனால், சட்டப்பூர்வமான திருமண வயதுக்கு முன்னரே பெண்களைத் திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் தொடர்கிறது. அதற்கு சாதியைக் காப்பாற்றும் விருப்பமும் ஒரு முக்கிய காரணம். இன்னமும் தேவதாஸ்கள் தெருவில்தான் அலைய வேண்டியிருக்கிறது.

-செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x