Last Updated : 04 Oct, 2014 11:33 AM

 

Published : 04 Oct 2014 11:33 AM
Last Updated : 04 Oct 2014 11:33 AM

ஒரு நூலகத்தின் கதை

மலையாளம் ஆட்சிமொழியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் 1823-ல் தமிழ்ப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. ஊர்திரி விலங்கியல் (டொமஸ்டிக் அனிமல்ஸ், 1836), மச்சவியல் (ஃபிஷஸ், 1842) வன விலங்கியல் (வைல்டு அனிமல்ஸ், 1843) என அறிவியல் நூற்கள் வந்துள்ளன. 1840-ல் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகை இங்கிருந்து வந்தது. 1843-ல் பெண்களுக்கான ‘மாதர்போதினி’ என்னும் பத்திரிகை வந்தது. இந்த அச்சு நூற்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் சென்றன. ஏறத்தாழ, இந்தக் காலகட்டத்திலேயே நூல் நிலையங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. அவை பள்ளிக்கூடங்களிலும் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் வீடுகளிலும் இருந்தன. இந்தக் காலகட்டத்தை அடுத்து பஜனை மடங்கள் நூல் நிலையங்களாகச் செயல்பட்டன; வாசிப்பு சாலை என்ற பெயரில்.

நாஞ்சில் நாட்டு வாசிப்புச் சாலைகள்

இந்தப் பஜனை மடங்களில் (வசன மடம் - பேச்சு வழக்கு) பெரும்பாலும் ‘சுதேசமித்திரன்’, ‘தி இந்து’ போன்ற நாளிதழ்களும் ‘அகிம்சாபுரட்சி’ போன்ற இதழ்களும் வந்தன. ஒருவர் படிக்க, மற்றவர் கேட்பது என்பது அப்போதைய வழக்கம். ‘காந்தி’, ‘சுதந்திரச் சங்கு’, ‘மணிக்கொடி’ போன்ற இதழ்களைப் படிப்பதற்கென்றே வாசகர்கள் இருந் தார்கள். இந்த வாசகர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் அனுதாபிகள். விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள். 1905-1942-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் நாஞ்சில் நாட்டில் 16-க்கு மேற்பட்ட ‘வாசிப்பு சாலைகள்’ இருந்தன. பெரும் பாலும் மகாத்மா, கஸ்தூர்பா, புலாபாய், ஆசாத், மோதிலால் போன்ற பெரிய தலைவர்கள் பெயர் களில் இயங்கின. இவற்றில் மிகச் சிலவே 1930 அளவில் நூல் நிலையங்களாயின. இதற்கு அடிப் படையான காரணங்கள் உண்டு.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு (1928) தீவிரமாய் நடந்துகொண்டிருந்த காலத்தில் காந்தியின் நெருங்கிய தொண்டராகவும் தியாகியாகவும் வாழ்ந்த மருத்துவர் எம். பெருமாள் நாயுடு என்பவர் நாகர்கோவிலில் நடத்திய ஊர்வலத்தில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அந்நியத் துணிகள் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அந்தக் கூட்டத்தில் சிறு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்திய அரசியல், காங்கிரஸ் பற்றித் தெரிந்துகொள்ள இந்தப் பிரசுரங்கள் உதவின. புத்தகம் படிக்கத் தூண்டி யதும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள்தாம்.

விவேகா அபிவிருத்தி நூல் நிலையம்

இந்தக் காலகட்டத்தில் நாஞ்சில் நாட்டில் ஹரிஜன சேவை, கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய செயல்பாடுகளில் தீவிரம் காட்டிப் பேசியவர்களில் தமிழறிஞர் திரிகூடசுந்தரம் பிள்ளையும் ஒருவர். அவர் தனது கூட்டங்களில் “வாசக சாலைகள் நேரம் போக்கும் இடங்கள் அல்ல; புத்தகங்களைப் பாதுகாக்கும் இடங்கள்; படிக்கும் இடங்கள்” என்று பிரச்சாரம் செய்தார். அன்றைய இளைஞர்களிடம் இது விழிப்புணர்வைக் கொடுத்தது. வாசிப்பு சாலைகள் படிப்படியாக நூல் நிலையங்களாயின. நாஞ்சில் நாட்டில் மருங்கூர் சண்முகானந்தா நூல்நிலையம், நாகர்கோவில் ஆசாத் நூல்நிலையம், நாகர்கோவில் முனிசிபல் நூல்நிலையம், திருப்பதிசாரம் நம்மாழ்வார் விவேகா அபிவிருத்தி நூல்நிலையம் எனச் சில பெரிய நூலகங்கள் உருவாயின.

பன்னிரு ஆழ்வார்களில் தலைமை சான்றவரான நம்மாழ்வாரின் அம்மா பிறந்த இடமாகக் கருதப் படும் திருப்பதிசாரத்தில் நம்மாழ்வார் விவேகா அபிவிருத்தி நூல்நிலையம் ஆரம்பத்தில் வாசக சாலையாகத்தான் இருந்தது. 1939-ல் இது நூல் நிலையமாகச் செயல்பட ஆரம்பித்தது. 1950-ல் இதற்கென கட்டிடமும் கட்டப்பட்டது. இந்த நூலகத் துக்கு தனிச்சிறப்புகள் உண்டு.

இந்த நூல்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலேயே கவிமணி தன் சொந்தப் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். அதில் செந்தமிழ்ச் செல்வி, கலைமகள் பைன்ட் வால்யும்கள் இருந் தன. 1950-ல் இந்த நூல் நிலையத்துக்குப் புதிய கட்டிடம் உருவானபோது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தேவையான நாற்காலி, மேஜை என எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். இப்படியான பாரம்பரியம் உடைய இந்த நூல்நிலையத்தை எண்பதுகளில் நான் பார்த்தபோது, பாழடைந்து கிடந்தது. இப்போது இந்த ஊர் இளைஞர்களின் அமைப்பான வ.உ.சி. பேரவை இந்த நூல் நிலையத்தைக் கையில் எடுத்துப் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. இப்போதும் 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கே உள்ளன. சினிமா நடிகைகளுக்காகக் கோயில் கட்டும் இந்தக் காலத்தில், வ.உ.சி. பேரில் அமைப்பு அரசு உதவியின்றி நூல் நிலையத்தை நடத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா? இளைஞர்களிடம் இன்றும் நம்பிக்கை வைக்கலாம். மற்ற ஊர் மக்களும் இவர்களைப் பின்தொடரலாம்.

- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்

‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com படம்: சுந்தரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x