Published : 01 Jun 2019 08:58 AM
Last Updated : 01 Jun 2019 08:58 AM

360: கன்னடத்தில் பெரியார்

கன்னடத்தில் பெரியார்

கர்நாடக அரசின் மொழிபெயர்ப்பு நிறுவனமான ‘குவெம்பு பாஷா பாரதி’ வெளியிட்ட பெரியார் சிந்தனைகள் தொகுப்பின் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்து, தற்போது அடுத்த பதிப்பு வெளிவந்திருக்கிறது. பெங்களூர் பல்கலையின் முன்னாள் பேராசிரியர் தமிழவன் தொகுத்த இந்நூல், பெரியாரின் தத்துவம், அவரது போராட்டங்கள், பொருள்முதல்வாதம், சமதர்மம் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் மற்றும் காந்தி, ஜின்னா, அம்பேத்கர் போன்ற தலைவர்களோடு அவருக்கு இருந்த தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. தமிழைத் தாண்டி மற்ற மொழியினரிடமும் பெரியாரை அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ‘இந்தியில் பெரியார் நூல்கள் கிடைக்குமா?’ என்று வடஇந்திய வாசகர்கள் தன்னிடம் தொடர்ந்து விசாரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ‘கருப்புப் பிரதிகள்’ நீலகண்டன்.

நூற்றுக்கு நூறு

பள்ளி ஆசிரியரான தனது மனைவி சிவகாமசுந்தரியின் பணிநிறைவு விழாவை வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறார் எழுத்தாளர் நாறும்பூநாதன். பாளையங்கோட்டையில் காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சிவகாமசுந்தரியின் பணி வாழ்க்கையைப் பற்றியும், பள்ளி வளர்ச்சியில் அவரது பங்களிப்புகள் பற்றியும் ‘நூற்றுக்கு நூறு’ என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்து அதைப் பணிநிறைவுப் பரிசாக அளித்திருக்கிறார். இந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசன் கலந்துகொண்டு பாராட்டுரை வழங்கியதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள் சிவகாமசுந்தரியும் நாறும்பூநாதனும்.

ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி

நாதம் கீதம் புக்ஸ் மற்றும் தமிழ்நாடு தமிழ்நூல் விற்பனையாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி, ராஜபாளையத்திலுள்ள காந்தி கலைமன்றத்தில் மே 24 முதல் ஜூன் 10 வரை நடக்கிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் அனைத்தும் சிறப்புச் சலுகை விலையில் கிடைக்கும். தொடர்புக்கு: 9444159852

தலைமைச் செயலகத்தின் தமிழ் மன்றம்

பரபரப்பான அன்றாட அலுவல் பணிகளுக்கு இடையிலும் தங்களது கலை இலக்கிய ரசனைக்கு மேடையமைத்துக்கொண்டிருக்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள். தலைமைச் செயலக தமிழ் மன்றத்தில் இணைந்திருக்கும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கடந்த மே 19 அன்று சென்னை அருங்காட்சியகக் கலையரங்கில் ஆண்டுவிழாவை நடத்தினார்கள். பட்டிமன்றம், கவியரங்கம், சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள் என்று முழுநாள் கொண்டாட்டம். இந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரிகளும் பங்கெடுத்துக்கொண்டிருப்பது ஊக்கமளிக்கும் செய்தி. மற்ற அரசு அலுவலகங்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x