Last Updated : 06 Sep, 2014 10:17 AM

 

Published : 06 Sep 2014 10:17 AM
Last Updated : 06 Sep 2014 10:17 AM

நம் சமூகத்திற்கென்று கலைப் பிரக்ஞை இருக்கிறதா?

தனி அடையாளத்துடனும் அசாத்தியமான படைப்பாளுமையுடனும் இசை உலகில் இயங்கிவரும் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2014-ம் ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டுள்ளது. தனித்துவமான குரல், பாடும் பாணி, கச்சேரியை அணுகும் விதத்தில் புதுமை ஆகியவற்றால் மேடையிலும், கர்னாடக இசையின் கட்டமைப்பு குறித்து எழுப்பும் ஆழமான கேள்விகளால் மேடைக்கு வெளியிலும் முக்கியமான ஆளுமையாக மதிக்கப்படும் கிருஷ்ணா ‘தி இந்து’வுக்காகப் பேசியதிலிருந்து…

விருதுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விருது எப்படிக் கொடுக்கப்படுகிறது என்பதுதான் விருதின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கிறது. இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்குரியவர்களைத் தீர்மானிக்கும் விதம் அதன் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான வழிமுறைகளின் மூலம், முறையான விவாதங்களின் மூலம் இந்த விருது வழங்கப்படுகிறது. தொடங்கிய நான்கைந்து ஆண்டுகளில் இதற்கென்று ஒரு மரியாதை ஏற்பட்டுள்ளது.

நான் ஜே. கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்தவன். ஜே.கே.யின் சிந்தனைகளால் கவரப்பட்டவன். விருதுகள் என்பதில் அடிப்படையில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் இந்த விருது வழங்கப்படும் விதம் அதன் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கலைஞரின் பங்களிப்புக்கான நேர்மையான அங்கீகாரமாக எனக்கு இது படுகிறது. இந்த மரியாதையை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

விருது என்பது அதைக் கொடுக்கும் அமைப்புக்கும் வாங்கும் கலைஞருக்கும் இடையிலான சமநிலையிலான உறவாக இருக்க வேண்டும். இந்த விருது அப்படிப்பட்டதாக இருக்கிறது என்றே நம்புகிறேன்.

காப்பாற்றிக்கொள்வது என்று சொன்னீர்கள். இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். நீங்கள் இசை உலகை, அதன் அமைப்புகளை நோக்கிப் பல தீவிரமான கேள்விகளை எழுப்பிவருகிறீர்கள். பலவீனமானவர்கள் இந்தக் கேள்விகளை எழுப்பினால் அமைப்பு அலட்சியம் செய்துவிடும். வலுவான நிலையில் இருந்து கேள்வி கேட்கும்போது அமைப்பு அரவணைத்து பலவீனப்படுத்தும். இந்த மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக உங்கள் கேள்விகளைக் குறைத்துக்கொள்வீர்களா?

ஒருவர் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தால் விருதைக் கொடுத்து வாயடைத்துவிடுவது நடக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த விருதை நான் அப்படிப் பார்க்கவில்லை. என்னுடைய இசை, இசை சார்ந்த என்னுடைய பிற செயல்பாடுகள் ஆகிய எல்லாவற்றுக்குமான அங்கீகாரமாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். என்னை நானே நேர்மையுடன் தொடர்ந்து சுயபரிசோதனை செய்துகொண்டிருப்பதைத்தான் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வது என்று குறிப்பிடுகிறேன்.

நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காகத்தான் இந்த மரியாதை. அதைச் செய்வதைத் தடுப்பதாக ஒரு விருது இருக்குமானால் அப்படிப்பட்ட விருது எனக்குத் தேவையில்லை. நான் கலை உலகில் என்னுடைய இடத்தையும் காப்பாற்றிக்கொண்டு, கலை உலகம் தொடர்பான என் கேள்விகளையும் எழுப்பிக்கொண்டிருப்பதற்கான அங்கீகாரமாகத்தான் இந்த விருதைப் பார்க்கிறேன். எனவே நான் விருதுக்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.

பொதுவாக நீங்கள் எழுப்பும் கேள்விகள் இசை உலகின் அதிகாரக் கட்டமைப்புகள், மேடைக் கச்சேரிகளின் இறுக்கமான அமைப்பிலிருந்து இசையின் அழகியலை மீட்டெடுத்தல், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாரபட்சம் ஆகியவை குறித்தவையாக இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்?

இசையை ஒரு கலை வடிவமாக அணுகி அதை ரசிக்கும் மனநிலையை வளர்க்க வேண்டும். இசை எல்லோரையும் சென்றடையும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சபாக்களில் மட்டுமின்றி அனைவரும் அணுகக்கூடிய பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகள் அதிகம் நடக்க வேண்டும். கோவில் கச்சேரிகள் இதைச் செய்துவந்தன. ஆனால் இன்று அவை பெருமளவில் குறைந்துவிட்டன. கேரளத்தில் இன்றும் அந்த மரபு உள்ளது. இதனால் சாதாரண மக்களின் இசை ரசனை அங்கு மேம்பட்டதாக உள்ளது. இசை ரசிகர்களும் மேட்டுக்குடியினராக இருக்கும் நிலை அங்கு இல்லை.

இசையைச் சகல தரப்பினருக்கும் கற்றுத்தர என்ன செய்யலாம்?

கலைஞர்கள் இதில் முன்னின்று செயல்பட வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இசையைச் சொல்லித்தர வேண்டும். நான் மாநகராட்சிப் பள்ளிகளில் சென்று இதைச் செய்துவருகிறேன். அவர்கள் எந்த மனத்தடையும் இல்லாமல் உற்சாகமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

நம் சமூகத்திற்கென்று கலைப் பிரக்ஞை இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இத்தனைக்கும் சமூகத்தின் சகல இடங்களிலும் கலை வெளிப்பாடுகள் பல வகைகளில் கொட்டிக் கிடக்கும் மரபு நம்முடையது. செவ்வியல் இசை ஒரு தரப்பினருக்கானதாகக் குறுகிவிட்டதுதான் இதற்குக் காரணம். இசைக் கச்சேரிகளைச் சமுதாயத்தில் பல பிரிவினரால் அணுக முடிவதில்லை. அவர்கள் இருக்கும் இடத்திற்கு இசையைக் கொண்டுசெல்ல வேண்டும்.

இந்திரா சிவசைலம் நினைவு விருது

டாஃபே நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மல்லிகா ஸ்ரீநிவாசன் தன் அன்னை இந்திரா சிவசைலத்தின் நினைவாகத் தொடங்கிய அமைப்பு இந்திரா சிவசைலம் அறக்கட்டளை. இந்தியாவின் வளமான மரபுகளைக் காப்பாற்றி அதன் கலை வடிவங்களை வலுப்படுத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த இந்திரா சிவசைலத்தின் கனவை நனவாக்குவதற்காகவே இந்த அமைப்பைத் தொடங்கியதாக மல்லிகா ஸ்ரீநிவாசன் குறிப்பிடுகிறார். சென்னை மியூசிக் அகாடமியுடன் இணைந்து இந்திரா சிவசைலம் நினைவு விருதை இந்த அறக்கட்டளை உருவாக்கியுள்ளது.

இசைக்குச் சிறந்த பங்களிப்பைச் செலுத்தும் கலைஞர்களுக்குப் பதக்கம் வழங்கி கவுரவிப்பதுடன் நவராத்திரி சமயத்தில் இலவச இசைக் கச்சேரிகளையும் இந்த அறக்கட்டளை நடத்திவருகிறது. 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும் இந்தப் பதக்கம் இதுவரை சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்பிரமணியன், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x