Last Updated : 09 Mar, 2019 09:37 AM

 

Published : 09 Mar 2019 09:37 AM
Last Updated : 09 Mar 2019 09:37 AM

வெங்கட் சாமிநாதன்: கலை உன்னதங்களின் உபாசகர்

என் ஈடுபாடுகளில் ஒன்றாக நவீனக் கலை அமைந்ததற்கு வெங்கட் சாமிநாதனின் எழுத்துகள்தான் முதல் வித்து. அதிலிருந்து முளைத்து விரிந்து கிளைத்ததுதான் நவீனக் கலையுடனான என் நெடும் பயணம். வெங்கட் சாமிநாதனின் ‘கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு’ என்ற நூலை 1982-ன் மத்தியில் ‘அன்னம்’ பதிப்பகம் வெளியிட்டது. நவீனக் கலை குறித்தும் அதன் வெளிப்பாடுகள் குறித்தும் அதுபற்றிய நம் அறியாமை குறித்தும் அலட்சியமான உதாசீனம் குறித்தும் ஆழமாக விவாதித்த நூல். நம் பார்வைக் கோளாறுக்கான அறுவைச் சிகிச்சையாக அமைந்து புது வெளிச்சம் தந்தது. நவீனக் கலை குறித்த என் கவனக் குவிப்புக்கு முகாந்திரமாக அமைந்த இந்நூல், நவீனக் கலைவெளிப் பாதையிலான என் பயணத்துக்கும் பின்னாளில் நவீனக் கலை குறித்து நான் எழுதுவதற்கும் உத்வேகமாக அமைந்தது.

2002 தொடக்கத்தில் நான் ‘புனைகளம்’ என்ற காலாண்டிதழை இலக்கியம், நவீனக் கலை, நாட்டார் கலை ஆகியவற்றுக்கான களமாகக் கொண்டுவந்தேன். அதற்கு முன்னோட்டமாக 2001 செப்டம்பர் – அக்டோபர் மாதங்களின் சனி, ஞாயிறுகளில் சென்னைக் கடற்கரையில் சென்னைக் கலைப்பள்ளியின் முதல் முதல்வரான தேவி பிரசாத் ராய் செளத்ரி வடிவமைத்த காந்தி சிலை அருகில் நடைபெற்றது. 4 வாரங்களில் 8 நாட்கள் மாலை நேரங்களில் நடைபெற்ற இந்த முகாம், பெரும் கொண்டாட்டமாக அமைந்தது. 40-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்துகொண்டார்கள். 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உருவப்படங்கள் வரையப்பட்டன. குழந்தைகளின் ஈடுபாடு மிகுந்த பரவசமளிப்பதாக இருந்தது. புல்வெளியில் ஓவியர்கள் அமர்ந்து வரைந்துகொண்டிருக்க, சிறுபத்திரிகை வாசகர்களும் படைப்பாளிகளும் ஆங்காங்கே அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். வெளிச்சம் மறைந்த பிறகு, ஓவியர்களும் உரையாடலில் கலந்துகொண்டனர்.

கடைசி ஞாயிறன்று சாமிநாதன் வந்திருந்தார். நிகழ்வைப் பார்த்து வியப்பும் பரவசமும் பெருமிதமும் அடைந்தார். “ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா” என்றார். அவ்வளவு ஓவியர்கள் ஒன்றுகூடி ஒரு சிறுபத்திரிகை இயக்கத்துக்காக வரைந்துகொண்டிருப்பது அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் தந்திருந்தது. ஓவியர்கள் சந்ரு, விஸ்வம், மனோகரன், நெடுஞ்செழியன் எனப் பலரோடும் அமர்ந்து உரையாடினார். அன்றைய ஓவியச் சூழல் பற்றிக் கேட்டபடி இருந்தார்.

அன்று இரவு மது அருந்த ஆசைப்பட்டார். என்னோடு அறைக்கு வந்தார். முதல் இதழ் பற்றிய என் திட்டங்களைச் சொன்னேன். இலக்கியம், நவீனக் கலை, நாட்டார் கலை ஆகிய மூன்றுக்குமான களமாக அதை உருவாக்க விழையும் என்

எண்ணங்களைச் சொன்னேன். அதைக் கேட்டு சாமிநாதன் பெருமகிழ்ச்சி கொண்டார். நவீனக் கலை பற்றி அவர் தொடர்ச்சியாக அதில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அப்போது நான் பாளையங்கோட்டையில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் பதிப்புத்துறையில் பகுதி நேரப் பணியாளராகப் பணிபுரிந்ததால், நாட்டார் கலைகளின் மகத்துவத்தை அறிய முடிந்திருந்தது. கலைஞர்கள் தங்கள் கலை வெளிப்பாட்டில் பித்துநிலையின் உச்சத்தைத் தொட்டு விகாசிக்கும் பேரனுபவத்தைக் கண்டு திளைத்திருக்கிறேன்.

‘புனைகளம்’ முதல் இதழில் ‘சோழ வெண்கலச் சிற்பங்களும் ஹென்ரி மூரும்’ என்ற சாமிநாதனின் கட்டுரை இடம்பெற்றது. இக்கட்டுரைக்கு அனுசரணையாக அமைய வேண்டிய படைப்புகளின் படங்கள் குறித்து இருவரும் அமர்ந்து முடிவெடுத்தோம். ஜாப் தாமஸின் ‘திருவெண்காடு சிற்பங்கள்’ புத்தகத்தையும் ‘ஹென்றி மூர் சிற்பங்கள்’ புத்தகத்தையும் வைத்துக்கொண்டு படங்களைத் தேர்ந்தெடுத்தோம். இரண்டு புத்தகங்களுமே என் வசம் இருந்தன. மிக நுட்பமான கட்டுரை அது. தான் கைக்கொண்ட சாதனத்தின் எல்லைகளைத் தம் கலை மேதமையால் விஸ்தரிக்கும் வகையில் அதன் எல்லைகளை மீறும் அசாத்திய கலைஞர்களாகத் திருவெண்காட்டுச் சிற்பிகளையும், தான் எடுத்துக்கொண்ட சாதனத்தின் சாத்தியங்களையே முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாதவராக ஹென்ரி மூரையும் அணுகும் அருமையான கட்டுரை. கட்டுரைக்கு இணக்கமான படங்களைத் தேர்வுசெய்தபோது அவரிடம் வெளிப்பட்ட கலைப் பார்வை பிரமிப்பைத் தந்தது.

சாமிநாதனோடு மது அருந்துவது பரவசமூட்டும் அனுபவம். அந்த வாய்ப்பு சில முறை கிட்டியிருக்கிறது. சதா பீடி புகைத்துக்கொண்டிருந்த சாமிநாதன் இதய பாதிப்பு சிகிச்சைக்குப் பின் புகைப்பதைக் கைவிட்டார்.

அதேசமயம், வாய்க்கும் நல்ல தருணங்களில் அளவாக மது அருந்தினார். மிதமான, இதமான போதையில் அவர் கலைகளின் மகத்துவம் பற்றிப் பேசக் கேட்பது சுகம். எனில், சூழலின் மொண்ணைத்தனம் மற்றும் பொய்மைகள் பற்றிய ஆவேசமோ அறச் சீற்றத்தை எழுப்புவது. சென்னையில் தி.ஜானகிராமன் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் ஒன்றை சாகித்ய அகாடமி 2000-ல் நடத்தியது. முதல் நாள் அமர்வில் ஜானகிராமன் சிறுகதைகள் பற்றி சாமிநாதன் உரை நிகழ்த்தினார். மறுநாள் நாவல் பற்றிய கருத்தரங்கில் நான் பேச வேண்டும். முதல் நாள் கூட்டம் முடிந்த பின்பு, எங்களோடு வீட்டுக்கு வந்தார் சாமிநாதன். அப்போது நான், நண்பர்கள் தளவாய்சுந்தரம், ராஜகோபால் மூவரும் முகப்பேரில் குடியிருந்தோம். இரவு வீட்டிலேயே சமையல். மது விருந்து. உரையாடல். உடனிருப்பவர்களிடம் சிறு சிறு கேள்விகள் கேட்டு அபிப்ராயங்களை வெளிப்படுத்தவைக்கும், வாயைப் பிடுங்கும் வித்தகம் அறிந்தவர். அன்றைய கருத்தரங்கில் கல்வியாளர்களால் வாசிக்கப்பட்ட, எவ்விதப் பார்வை தீட்சண்யமுமற்ற கட்டுரைகள் பற்றிய பேச்சிலிருந்து ஆரம்பித்து, உரையாடல் நோக்கி நகர்ந்தது. நான் மறுநாள் கருத்தரங்கில் பேசுவதற்கான கட்டுரையை எழுதியிருக்கவில்லை. குறிப்புகள் மட்டுமே எடுத்துவைத்திருந்தேன். இரவு ஒரு மணி வரை கலந்திருந்துவிட்டு, கட்டுரையை எழுதத் தனி அறைக்குப் போய்விட்டேன்.

முதல் நாள் அமர்வில் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருந்ததால் நான் கச்சிதமாக மூன்று பக்கத்துக்குள் ஜானகிராமன் நாவல்களின் சாரத்தை முன்வைக்கும் வகையில் கட்டுரையை அமைத்திருந்தேன். பலரும் கடும் பிராயாசை எடுத்து பல பக்கங்களை எழுதிவைத்திருந்து அதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருந்தார்கள். பொதுவாகவே, கட்டுரைகளில் விஸ்தாரமாக ஆலாபனை செய்யும் சாமிநாதன், இதில் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தார். மறுநாள் கருத்தரங்கில் என் கட்டுரையைக் கேட்டுவிட்டு, “பெரிய கில்லாடியா நீ. நேத்து நோட்டம் பாக்க வந்திருக்க... அப்படித்தானே?” என்றார் சிரித்தபடி. ஒருபோதும் வற்றாத உத்வேக ஊற்று அவர்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு:

kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x