Published : 13 Jan 2019 09:15 AM
Last Updated : 13 Jan 2019 09:15 AM

கவிஞன் அறிந்ததற்கும் அறியாததற்கும் கவிதையில் இடமுண்டு! - சபரிநாதன் பேட்டி

கவிதை என்பதையும் அந்த வடிவத்தையும் தீவிரமாகவும் பொறுப்பாகவும் எதிர்கொள்ளும் கலைஞர்கள் தலைமுறைதோறும் அரிதாகவே வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சபரிநாதன். கவிதையையும் விமர்சனத்தையும் மொழிபெயர்ப்புகளையும் செய்துவரும் சபரிநாதன், ‘களம் காலம் ஆட்டம்’, ‘வால்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் மூலம் கவனம் பெற்றவர். ஸ்கான்டிநேவியக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை ‘உறைபனிக்குக் கீழே’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். தத்துவம், வாழ்க்கை வரலாறு, அறிவியல் என வாசிப்பும் ஈடுபாடும் பரந்த சபரிநாதனுக்கு வயது 29. இவருடன் பேசியதிலிருந்து...

கவிதை என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைச் சொல்ல முடியுமா?

இலக்கியம், படைப்புச்சூழல் பற்றியெல்லாம் அறிவதற்கு முன்பே நான் ஒரு கவிஞன் என்று நம்பிக்கை வலுத்துவிட்டது. இயல்பிலேயே பதின்பருவ மனோதர்மத்துக்கு நெருக்கமான வடிவம் கவிதைதானே. தவிர கவிதை மீது தமிழ் மனத்துக்கு ஒரு தொன்மக் கவர்ச்சியும் உள்ளது. கவிதையைத் தேர்ந் தெடுத்தது நானில்லை, கவிதைதான் தேர்ந்தெடுத்தது என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதை ஓர் அழைப்பு என்றே அழைக்க ஆசைப்படுகிறேன். மறக்க முடியாத வாசகம் ஒன்று, பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் பெறும் நாளில் என் தலைமை ஆசிரியர் என்னிடம் கூறினார் ‘எழுதப்படாத பாடல்கள் எப்போதும் இருக்கும்’ என்று. அந்த நம்பிக்கையில்தானே மூத்த கவிஞரிலிருந்து யாரிடமும் காட்டாது எழுதிப் பழகும் ஓர் இளைஞன் வரை ஒவ்வொருவரும் இங்கு ஒரு புதிய கவிதையை எழுதத் தொடங்குகிறோம்.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றிக் கூறுங்கள்?

சுவீரா ஜெய்ஸ்வால் எழுதிய ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ புத்தகம்தான் தற்போது வாசிப்பில் இருக்கிறது. இந்திய மதங்களின் வரலாறு பற்றி எழுதப்பட்ட முக்கியமான முன்னோடி நூலாக அறியப்படுவது இது. மார்க்ஸிய நோக்கில் மத உருவாக்கத்தையும் அதன் பரிணாமத்தையும் ஆராய முற்படும் படைப்பு. எப்படி பல்வேறு இனக்குழு வழிபாட்டு மரபுகள் கலந்து திரிந்து ஒரு பெருமத வடிவை ஏற்கின்றன என்ற சித்திரம் இதில் உள்ளது. ஓர் எழுத்தாளானாக எனக்கு அவ்வடிவமைப்பில் கதைகளும் புராணங்களும் ஆற்றிய பாத்திரம் வியப்பூட்டியது. இந்தக் கதைகளின் வழியாகத்தான் பல்தெய்வக் கோட்பாடும் இங்கு நிலைநிறுத்தப்பட்டதோ என்று படுகிறது. சொல்லப்போனால் பல தெய்வங்கள் இருந்தால் மட்டுமே தெய்வம் ஒரு பிரச்சினையாக மாறுவதில்லை.

உங்கள் கவிதைகளில் உங்களது பள்ளிப்பருவ நினைவுகளும் உங்கள் அம்மாவும் இடம்பெறுகிறார்கள்.. அந்த நினைவுகளைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் சொல்லுங்கள்?

பெரும்பாலான கவிஞர்களைப் போலவே ‘பாய்ஹுட்’ மீதான மோகம் எனக்கும் உண்டு. அதன் சுதந்திரமும் வெள்ளந்தித்தனமும் ஒரு கனவுநிலமாக அதைத் காட்சியளிக்கச் செய்கிறது. அது உண்மையா என்பது வேறு விஷயம். நான் கழுகுமலை எனும் சிற்றூரிலும் கோவில்பட்டி எனும் சிறுநகரிலுமாய் இருவேறு கிறித்தவப் பள்ளிகளில் பயின்றேன். இரண்டுமே எனது இலக்கிய சகவாசத்துக்கு இசைவாக இருந்தன. பொதுவாகவே நினைவிலிருந்து திடீரென எழும்பிவரும் காட்சியோ படிமமோ தன்னெழுச்சியாகவே கவிதைச் சாத்தியத்தை ஏற்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளி இறுதி மணியை நானே அடித்த காட்சியும், அந்தப் பேரழகான மாலையும் ஞாபகம் வந்தது சமீபத்தில். அது தன்னளவிலேயே கவிதைதான் என்று பட்டது. விசாலமான வெளிக்காகவும் ஒளிமிக்க காற்றோட்டத்துக்காகவுமே அந்தப் புனைநிலத்துக்கு அவ்வப்போது செல்கிறேன்போல. மற்றபடி அம்மாவைக் குறித்துக் கூறுவதென்றால் அவருடனான எனது உறவு அழகாகத் தோன்றுமளவுக்கு சிக்கலானது.

தமிழில் காத்திரமாக விமர்சனங்களையும் எழுதிவருபவர்களில் நீங்களும் ஒருவர். தற்போதைய விமர்சனச் சூழல் எப்படி இருக்கிறது?

எழுத்தாளுமைகளே முக்கிய விமர்சகர்களாகவும் செயல்படும் எதார்த்தம்தான் தமிழில் பெருவழக்காக உள்ளது. அத்தகைய கவி-விமர்சகர் மரபே எனது விமர்சன அடிப்படைகளையும் உருவாக்கியது. அந்த வகையில் அடுத்தடுத்த தலைமுறையினரில் விமர்சனத்துக்குப் பெரிய அளவில் பங்காற்றும் இளைஞர்களின் வரத்து குறைந்துள்ளது. அதுவும் சமூக ஊடக வருகைக்குப் பிறகு விமர்சனம் பல புதிய வடிவங்களை எடுத்தாலும் அத்தகைய வடிவங்கள் போதுமானவையாகவும் விரிந்த உரையாடலுக்குப் பொருத்தமானவையாகவும் இல்லை. குறைந்தபட்சம் வாசிப்பாவது பகிரப்படலாம். கலை இலக்கியம் பற்றிய அபுனைவுக்கு இன்னும் அதிக இடமும் அவ்வகைமைக்குக் கூடுதல் அங்கீகாரமும் அளிக்கப்பட வேண்டும். கட்டாயம் புதியவர்கள் அதிகம் எழுத முன்வர வேண்டும். நல்ல விமர்சனமானது அடிப்படையில் இலக்கியம் எனும் செயல்பாட்டின் மீதான நம்பிக்கையை மீட்டுத்தருவதாக அமையும்.

தத்துவம், வாழ்க்கை வரலாறுகளில் ஆர்வம் உள்ள உங்களுக்கு உங்கள் கவிதையின் மீது அந்த வாசிப்பு செலுத்தும் தாக்கம் என்ன?

கவிஞன் என்ற முழு உயிரியால் கவிதை இயற்றப்படுகிறது. அது ஒரு உயிர்த்துவ நிகழ்வு. அவனது தேடல்களும் ஆர்வங்களும் ஆழமாகக் கரைந்திருக்கும் பட்சத்தில் அவை படைப்பில் வெளிப்பாடு கொள்வது இயல்பு. அத்தகைய இயல்பான வெளிப்பாட்டையே நான் அனுமதிக்கிறேன். அவ்விதம் சொற்பிரயோகத்தில் இருந்து மையப்படிமம் வரை எது வேண்டுமானாலும் இதர பிராந்தியங்களிலிருந்து கவிதையில் வருகை தரலாம். ஆனால், என் கவிதையில் அப்படியான தாக்கம் என்ன என்று குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியாது. அதை மற்றவர்கள்தான் சொல்லக்கூடும். வீட்டை வெளியிலிருந்துதான் காண முடியும் இல்லையா? முக்கியமானது, கவிஞன் அறிந்ததற்கு மட்டுமல்ல அறியாததற்கும் கவிதையில் இடமுண்டு என்பதே.

உங்கள் மீது தாக்கம் செலுத்திய தமிழ் எழுத்துக் கலைஞர்கள்…

நவீனக் கவிதையின் சுவை ஆத்மாநாம் வழியாக அறிமுகமானது. புதுமைப்பித்தன் வழியாகவே தமிழின் நவீனத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பிறகுதான் பிரமிள் மாதிரியான பெரிய கவிஞரின் கவிதைகளிலும் அபுனைவுகளிலும் பிடி கிடைத்தது. பின்னர் தேவதேவன், தேவதச்சன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, சுகுமாரன். இப்படியாக இவர்களெல்லாம் கவிதை குறித்த ரசனை மதிப்பீடுகளை உருவாக்கினர். எனது கவிதைகளை எந்த அளவுக்குப் பாதித்துள்ளனர் என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. ஜெயமோகன், கோணங்கி இவர்களின் தாக்கம் உண்டு என்று நினைக்கிறேன். உலகளவில் ரஷ்ய இலக்கியங்களின் பிடிப்பும், கிழக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கவிஞர்களின் தாக்கமும் இருக்கலாம்.

உங்கள் கருத்துலகின் மீது தாக்கம் செலுத்தியவர்களைச் சொல்ல முடியுமா?

கார்ல் மார்க்ஸ், நீட்ஷே, ஷோபன்ஹேர், கீர்ககார்ட், யுங், தோரோ போன்றோரது சிந்தனைகளின் செல்வாக்குக்குச் சாத்தியமுண்டு.

உங்களுக்கு நினைவு தெரிந்து முதலில் உங்களை ஆட்கொண்ட தீவிரமான படைப்பு குறித்த ஞாபகங்களைச் சொல்லுங்கள்?

கல்லூரியின் இரண்டாவது விடுமுறை காலத்தில் ஒரு விபத்தெனக் கையில் கிடைத்த டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலின் மொழிபெயர்ப்பைச் சொல்லலாம். அப்பா தனக்குத் தெரிந்த தோழர் ஒருவரிடமிருந்து வாங்கித் தந்திருந்தார். அந்த வயதில் அந்த மூன்று பாகத்தையும் இடைவெளி விடாது படிக்கச்செய்தது எதுவென்று தெரியாது. அதற்கு முன்னர் நான் பெரிதாக புனைவிலக்கியமும் படித்திருந்ததில்லை. அதன் கதை அப்படியே நினைவிருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். முதன்முதலாக முழுவாழ்வையும் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு என்பதாலா? ஒரு நதி முழுக்க உங்கள் கண் முன்னே ஓடித் தீர்ந்து மறைந்தால் எப்படி இருக்கும்? படித்து முடித்த இரவு மொட்டைமாடியில் வானம் பார்த்துக் கிடந்தபோது, மனதில் எந்த மனப்பதிவும் இல்லை. அபிப்ராயம் எதுவும் இல்லை. அது அபாரமான தருணம்; அத்தனை நிசப்தம் அத்தனை தொலைவு. லட்சக்கணக்கான சொற்களின் மௌனம்.

கவிதை குறித்த உங்கள் அடிப்படையிலான வரையறை என்னவாக இருக்கிறது?

தேவதச்சன் சொன்னதுபோல கவிதைக்கென்று சில பல பணிகள் இருக்கலாம். உதாரணத்துக்கு ஒரு கணத்திற்கேனும் - உங்களது துக்கத்துக்கோ சந்தோஷத்துக்கு கோபத்துக்கு பிரிவுக்கோ சூழ்ந்துள்ள ஒளிக்கோ இருளுக்கோ - கவிதை உங்களை விழித்துக்கொள்ளச் செய்கிறது. அனுபவத்துக்கு அடிக்கோடிடுகிறது. இது கவிதையினுடைய ஒரு விளைவு. கவிஞர்களை நாடுகடத்த வேண்டும் என்று கூறிய பிளேட்டோ ஓரிடத்தில் ‘கவிஞன் ஓர் எடையற்ற சிறகுள்ள புனிதமான பொருள்’ என்கிறார். அப்படியென்றால் கவிதை என்ன விதமான பொருள் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x