Last Updated : 29 Dec, 2018 08:15 AM

 

Published : 29 Dec 2018 08:15 AM
Last Updated : 29 Dec 2018 08:15 AM

பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பது புத்தகம் அல்ல; பொக்கிஷம்!

எனக்குப் புதிய புத்தகங்கள் மீதே விருப்பமிருந்தது. புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் எழுந்துபோக நேர்ந்தால் அப்புத்தகத்தை விரித்தபடி அப்படியே கவிழ்த்துவைப்பதிலோ, எதுவரை வாசித்திருக்கிறோம் என்பது தெரிவதற்காகக் காகிதங்களின் முனை மடிப்பதிலோ, குறிப்புகளுக்காகப் புத்தகங்களில் கிறுக்குவதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதற்காகவே வேறு யாருக்கும் புத்தகங்கள் தருவதில்கூட பாரபட்சம் பார்ப்பதுண்டு. ஆக, தாறுமாறாகச் சிதறிக் கிடக்கும் அழுக்கு படிந்த பழைய புத்தகக் கடைப் புத்தகங்கள் மீது ஒருவித ஒவ்வாமை இருந்தது. ஆனால், ஒருமுறை பழைய புத்தகக் கடையில் தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ நாவலின் முதல் பதிப்பும், 150 வருடப் பழமையான மேற்கத்திய இசை குறித்த புத்தகமும் கிடைத்தது. அந்த அழுக்குநிறப் புத்தகத்தைக் கண்டெடுத்த மனநிலை அலாதியானது. அப்போது ஒரு விஷயம் பிடிபட்டது. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பது புத்தகம் அல்ல; பொக்கிஷம்.

பல்லாயிரக்கணக்கான பொக்கிஷங்களைப் பல்வேறு ஆளுமைகளுக்கும் வாசகர்களுக்கும் வாரிவழங்கிய பொக்கிஷக்காரர் ஆர்.கே.ஆழ்வார்(95), டிசம்பர் 21 அன்று உடல்நலிவால் மறைந்தார். மயிலாப்பூர் லஸ் கார்னர் காமதேனு திருமண மண்டபத்தின் எதிரேயுள்ள ஆழ்வாரின் பழைய புத்தகக் கடை, சென்னையின் புராதன அடையாளமாகவே திகழ்ந்தது. கருத்த உருவம். நீண்ட தாடி. ‘வெறும் புத்தக விற்பனையாளன் மட்டுமல்ல; நானும் ஒரு அறிவுஜீவி’ என்பது போன்ற மிடுக்கான பேச்சு.

‘தாடி தாத்தா’ என வாடிக்கையாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆழ்வார், தனது தொழிலின் வெகுமதியை உணர்ந்திருந்ததால் புத்தக விற்பனை மட்டுமே அவரது நோக்கமாக இருக்கவில்லை. புத்தகங்கள் குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார். பெரும் குவியல்களுக்கிடையேயும் துல்லியமாகப் புத்தகங்களைத் தேடி எடுத்துவிடும் மாயாவி. தனது மகளின் திருமணத்தன்று கடை திறந்து வைத்திருந்ததும், தனது கடைசி காலத்தில் நினைவு தப்பிய பிறகும்கூட புத்தகங்கள் பற்றி பிதற்றியதும் ஆழ்வாரின் புத்தகக் காதலுக்கான உதாரணங்கள்.

ஆழ்வாரின் கடையை ‘வாழ்வின் சில உன்னதங்கள்’ புத்தகத்தில் இப்படி வர்ணிக்கிறார் எழுத்தாளர் விட்டல்ராவ்: ‘நான்கைந்து நீண்ட உயர்ந்த வரிசைகளில் அடுக்கப்பட்டிருந்த புத்தகச் சுவர்கள். ஒவ்வொரு புத்தகச் சுவருக்கும் அடுத்து நிற்பதற்கும் மூன்றடி இடைவெளி. ஒரு இடைவெளியிலிருந்து அடுத்த இடைவெளிக்குப் போக முடியும். ஐந்து புத்தக வரிசைச் சுவர்களும் முடியும் முனையில் அதே உயர நீளத்துக்கு மறைப்புச் சுவராய் ஒரு புத்தக அடுக்கு. ஒரு சுரங்க மாளிகைபோல. கூரை எதுவுமில்லை. மேலேயிருந்து வரும் வெளிச்சமே போதுமானதாயிருந்தது. இரவில் எல்லாவற்றையும் சேர்த்துப் போர்த்தி மூட தார்பாலின் போர்வை. நல்ல ஏற்பாடுதான்.’

பழைய புத்தகங்களைத் தேடித் தேடி சேகரிக்கும் கல்லூரி மாணவர் அருண் பிரசாத், “ஆழ்வார்க்கடையில் புத்தகங்கள் ஒரு ‘மேஸ்’ போல அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். மாநகராட்சி பல முறை அவரது கடையை அகற்றியிருக்கிறது. பிறகு, ஆள் வைத்து ஒரு தொகை தந்து மீட்டுவருவார். கடந்த ஆண்டு ஆழ்வார் கடைக்குச் செல்லும்போது தள்ளாடும் வயதில் அவர் மனைவிதான் கடையைப் பார்த்துக்கொண்டிருந்தார். தேர்வுகளுக்கான புத்தகங்களும் பாடப்புத்தகங்களும்தான் நிறைந்திருந்தன. ஆழ்வார் கடைக்குரிய தனித்துவம் இல்லாதிருந்தது. நான் அப்போதே ஆழ்வார் இறந்துபோய்விட்டதாக நினைத்தேன்” என்றார். ஆழ்வார் செயலிழந்துபோன பிறகே அந்தக் கடை தனது பொலிவை இழக்கத் தொடங்கிவிட்டது. ஆனாலும், புத்தகங்கள் மீது ஆழ்வார் கொண்டிருந்த காதலை உணர்ந்த அவரது மனைவி மேரி அப்புத்தகக் கடையை நடத்திவந்தார். ஜனவரியில் மேரியின் மரணம். இப்போது டிசம்பரில் ஆழ்வார்.

கே.கே.நகரில் பழைய புத்தகக் கடை நடத்தும் நூல் பாண்டியனிடம் பேசினேன். புத்தகங்கள் மீது ஈடுபாடில்லாத பள்ளிப்பருவத்தின்போதே ஆழ்வாருடனான தனது பழக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். ஒரு பழைய புத்தக விற்பனையாளராகத் தனது முன்னோடி ஆழ்வார் குறித்துச் சொல்கிறார்: “மழை பெஞ்சுச்சுன்னா அவர் புத்தகக்த்தைக் காக்கப் போராடுவார். எல்லாத்தையும் காபந்து பண்ணி முடிக்கும்போது தொப்புதொப்பா நனஞ்சிருப்பாரு. புத்தகம் நனஞ்சு தனக்கு வியாபாரம் போய்டும்னு அவர் அப்படிப் போராடல.

 புத்தகம் மேல அவருக்கு அவ்வளவு அன்பு இருந்துச்சு. கஷ்டப்பட்ட பையங்ககிட்ட பணம் எதிர்பாக்க மாட்டார். இப்போ இணையகாலத்துல புத்தகத்தைத் தேடுறது சுலபமாயிடுச்சு. அந்தக் காலத்துல அரிய புத்தகங்களைத் தேடி அவர்கிட்ட வருவாங்க. ஆழ்வார்கிட்ட சரஸ்வதி ரொம்பக் காலம் வாழ்ந்திருக்கா!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x