Last Updated : 16 Nov, 2018 09:37 AM

 

Published : 16 Nov 2018 09:37 AM
Last Updated : 16 Nov 2018 09:37 AM

பார்த்திபன் கனவு 52: மாரப்பனின் மனக் கலக்கம்!

பல்லக்கும் பரிவாரங்களும் போனபிறகு மாரப்பன் சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றான். தான் இப்போது கண்டதும் கேட்டதும் கனவல்ல என்று நிச்சயம் செய்து கொண்டபின், பக்கத்தில் வந்து நின்ற புரவியின் மீது மறுபடியும் ஏறிக்கொண்டான். அச்சுதவர்மருடன் சென்ற மொட்டைச் சாமியாரின் நினைவு வந்தது. வாதாபிப் போரில் வென்ற தளபதி பரஞ்சோதியைப் பற்றியும் மாரப்பன் கேள்விப்பட்டதுண்டு. அந்நாளில் அவர் பார்த்திப மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என்றும் கேட்டிருந்தான். எனவே, அவர்தான் அவ்வப்போது ஜடாமகுட வேஷம் பூண்ட சிவனடியாராய்த் தோன்றி நடித்து வந்தாரோ, என்னவோ? ஏன் இருக்கக்கூடாது? - இதன் உண்மையை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால், எப்படி? பொன்னனையும் வள்ளியையும் சிநேகம் செய்துகொண்டு, அவர்கள் மூலமாகத்தான் இதை நிறைவேற்ற வேண்டும். உடனே மாரப்ப பூபதிக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. தான் அன்று தோணித் துறைக்குப் போகும் காவேரிக் கரைச் சாலையில் வெகு தூரம் போய் விட்டுத் திரும்பியிருந்தும், போகும்போதோ, வரும்போதோ பொன்னனையும் வள்ளியையும் சந்திக்கவில்லை. ஆகவே, அவர்கள் இன்றிரவு உறையூரில் தான் இருப்பார்கள். எங்கே தங்கியிருப்பார்கள்? வள்ளியின் பாட்டன் வீட்டில் ஒரு வேளை இருக்கலாமல்லவா!...

உடனே மாரப்பன் விரைவாகக் குதிரையை விட்டுக்கொண்டு சென்று, தன் மாளிகையை அடைந்தான். வாசலில் நின்ற ஏவலாளர்களிடம் குதிரையைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து கால்நடையாகக் கிளம்பினான். இரவு சாப்பாட்டைப் பற்றிய நினைவே அவனுக்கில்லை. பசி தாகமெல்லாம் மறந்துபோய் விட்டது. பொன்னனையும் வள்ளியையும் இன்றிரவு சந்திக்க வேண்டுமென்னும் ஆவலினால் உறையூர்க் கம்மாளத்தெருவை நோக்கி நடக்கலுற்றான்.

அப்போது அஸ்தமித்து ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். உறையூரின் வீதிகளில் ஜனங்களின் நடமாட்டம் பெரிதும் குறைந்திருந்தது. சந்தடி அநேகமாக அடங்கிவிட்டது. ஆலயங்களுக்குப் போய்விட்டுத் திரும்புவோர், தெருக்கூத்துப் பார்க்கச் செல்வோர், இராப் பிச்சைக்காரர் ஆகியவர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாய்க் காணப்பட்டனர். எங்கேயோ வெகுதூரத்தில், "அகோ வாரும் பிள்ளாய்! அரிச்சந்திர மகாராஜனே!" என்று விசுவாமித்திர முனிவர் அலறிக் கொண்டிருந்தார்!

மாரப்பன் வீதிகளின் ஓரமாகத் தன்னை யாரும் கவனிக்காதபடி நடந்து விரைந்து போய்க் கொண்டிருந் தான். அவன் கம்மாளத்தெருவை நெருங்கியபோது திடீரென்று பேய் பிசாசைக் கண்டவன் போல் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டான். ஏனென்றால் கம்மாளத்தெரு திரும்பும் முனையில் அப்போதுதான் அணைந்து கொண்டிருந்த அகல்விளக்கின் வெளிச்சத்தில் அவன் ஒரு உருவத்தைக் கண்டான். அது, அவனுடைய உள்ளத்தில் நிலை பெற்றிருந்த சிவனடியாரின் உருவந்தான். அந்த உருவத்தை அவன் பார்த்த அதே சமயத்தில் விளக்கு அணைந்து போய்விட்டது. திகைத்து நின்ற மாரப்ப பூபதி மறுகணம் அந்த உருவம் நின்ற இடத்தை நோக்கி விரைந்து ஓடினான். ஆகா! அந்தப் பொல்லாத வஞ்சக வேஷதாரியை அன்றிரவு கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தித் திருமகளின் முன்னால் நிறுத்தினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அந்த ஆவலுடனே அவன் ஓடினான். ஆனால், விளக்குத் தூணின் அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒருவரையும் காணவில்லை. அந்த இடத்திலிருந்த நான்கு திசையிலும் நாலு வீதிகள் போய்க் கொண்டிருந்தன. அவற்றுள் எந்த வீதி வழியாகச் சிவனடியார் போயிருக்கக்கூடுமென்று தீர்மானிக்க முடியவில்லை.

மாரப்ப பூபதியின் உள்ளத்தில் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. ஆம்; தான் பார்த்த உருவம் அந்தச் சிவனடியாராயிருக்கும் பட்சத்தில், அவர் பொன்னனையும் வள்ளியையும் பார்ப்பதற்குத்தான் அங்கு வந்திருக்க வேண்டும். வீரபத்திர ஆச்சாரியின் வீட்டுக்குத்தான் போயிருப்பார். இன்னும் என்ன சதியா லோசனைக்காக அவர்கள் அங்கே கூடுகிறார்களோ, என்னவோ தெரியவில்லை. நரசிம்மவர்ம சக்கரவர்த்தி உறையூருக்கு வந்திருக்கும் சமயத்தில் இந்தச் சதியாலோசனை நடக்கிறது! ஆகா! குற்றம் செய்வதில் ஈடுபட்டிருக்கும்போதே மூன்று பேரையும் கையும் மெய்யுமாய்ப் பிடித்துவிட முடியுமானால்? சக்கரவர்த்திக்குத் தன் பேரில் அகாரணமாக ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விடலாமல்லவா? பிறகு...

இப்படி சிந்தித்துக்கொண்டே மரப்பன் வீரபத்திர ஆச்சாரியின் வீட்டை நெருங்கியபோது, இன்னொரு அதிசயம் அவனுக்கு அங்கே காத்திருந்தது. அந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு இருவர் வெளியில் வந்தார்கள். மாரப்பன் ஒரு வீட்டுத் திண்ணை ஓரத்தில் தூண் மறைவில் நின்றபடி உற்றுக் கவனித்தான். வெளியே வந்தவர்கள் பொன்னனும் வள்ளியுந்தான். வள்ளி இடையில் வைத்திருந்த விளக்கைச் சேலைத் தலைப்பினால் மறைத்து எடுத்துக்கொண்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் இருவரும் வீரபத்திர ஆச்சாரி வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சந்தின் வழியாக வடக்கு நோக்கிச் சென்றார்கள்.

"இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; இவர்கள் ஏதோ பெரிய சதித்தொழில் இன்று செய்யப்போகிறார்கள். இதில் அந்தச் சிவனடியாரும் சேர்ந்திருக்கிறார். அவர் முன்னால் போயிருக்கும் இடத்துக்கு இவர்கள் பின்தொடர்ந்து போகிறார்கள்" என்று மாரப்பன் தீர்மானித்துக் கொண்டான். சொல்லமுடியாத பரபரப் பும் உற்சாகமும் அவனை ஒரு புது மனிதனாகச் செய்துவிட்டன. பொன்னனும் வள்ளியும் போன வழியே, அவர்கள் கண்ணுக்கு மறையாத தூரத்தில் மாரப்பன் சிறிதும் ஓசை கேட்காதபடி நடந்து போனான்.

அந்தச் சந்து வழியே பொன்னனும் வள்ளியும் சென்று காவேரிக் கரையை அடைந்தார்கள். அங்கே ஒரு மரத்தின் வேரில் கட்டிப் போட்டிருந்த படகில் வள்ளி ஏறி உட்கார்ந்து கொண்டாள். கூடையைப் படகின் அடியில் வைத்துப் பத்திரமாய் மூடிக்கொண்டாள். சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தபடியே பொன்னன் படகை இழுத்துக்கொண்டு போய் அரண்மனைத் தோட்டத்தின் மதிலை அடைந்ததும் படகை அங்கேயே கட்டிப் போட்டுவிட்டு, வள்ளியையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தான்.

அந்த தோட்டம், பார்த்திப மகாராஜா வாழ்ந்த பழைய சோழ வம்சத்து அரண்மனைத் தோட்டம் என்பதை மாரப்பன் அறிந்திருந்தான். அந்த அரண்மனையில் அச்சமயம் யாருமில்லை. அது சக்கரவர்த்தி யின் கட்டளையினால் பூட்டிக் கிடந்தது என்பதும்

அவனுக்குத் தெரிந்ததுதான். ஆகவே, பொன்னனும் வள்ளியும் அந்த அரண்மனைக்குள் கொல்லைப்புரத் தின் வழியாக நுழைவது ஏதோ கெட்ட காரியத்திற்கா கத்தான் என்றும், அநேகமாக அந்த அரண்மனைக்குள் அச்சமயம் சிவனடியார் இருக்கலாமென்றும் மாரப்ப பூபதி ஊகித்தான். இன்னும் ஒரு பயங்கரமான - விபரீ தமான சந்தேகம் அச்சமயம் அவனுடைய உள்ளத்தில் உதித்தது. பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்த செய்தியே ஒரு சமயம் பொய்யாயிருக்குமோ? அவர் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி, பிறகு இப்படிச் சிவனடியாரின் வேஷத்தில் வந்து விபரீதமான காரியங்களையெல்லாம் செய்து வருகிறாரோ? - என்று நினைத்தான். எப்படியிருந்தாலும் இன்று இரவு எல்லா மர்மங்களும் வெளியாகிவிடப் போகின்றன! இந்த நம்பிக்கையுடன் அவன் மதிற்கதவின் வெளிப்புற நாதாங்கியைப் போட்டுவிட்டு, பொன்னன் திரும்பி வருவதற்குள் தன்னுடைய ஆட்களை உதவிக்கு அழைத்துக்கொண்டு, அங்கே வந்து விடுவது என்ற தீர்மானத்துடன் விரைந்து சென்றான்.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x