Last Updated : 07 Oct, 2018 02:29 AM

 

Published : 07 Oct 2018 02:29 AM
Last Updated : 07 Oct 2018 02:29 AM

எஸ்.சம்பத்: பாதியில் முறிந்த பயணம்

சிந்தனை உலகுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இருக்க வேண்டிய அவசியமான உறவின் இசைமையைப் புனைவின்வழி அற்புதமாகப் பிணைத்தவர் சம்பத். அடிப்படை விஷயங்களில் உழலும் புனைவு மனம் இவருடையது. ஆண்-பெண் உறவும் சாவும் இவரைப் பெரிதும் வாட்டிய விஷயங்கள். அவருடைய சிறுகதைகளும் குறுநாவல்களும் ஒரே நாவலான ‘இடைவெளி’யும் இத்தன்மைகளில் உருவாகியிருக்கும் படைப்புகளே.

தன் அனுபவங்களின் ஊடாக அறியவரும் வாழ்வின் விசித்திர குணங்களும், அனுபவங்களின் சாரத்தில் உருக்கொள்ளும் கருத்துகளும் கேள்விகளும் அலைக்கழிப்புகளும் சம்பத்தின் புனைவுப் பாதையை வடிவமைக்கின்றன. அந்தப் பாதையில் உள்ளுணர்வின் ஒளியோடு பிரச்சினைகளுக்கான விடைகளைத் தர்க்கரீதியாகக் கண்டடையும் முனைப்பில் இழைஇழையாய் இழைந்து இவரின் படைப்புலகம் உருக்கொள்கிறது. மிகக் குறைவாக எழுதியிருக்கும் இவர், மிக அதிகமாக எழுதும் ஆசையும் கனவுகளும் கொண்டிருந்தவர். இலக்கிய உலகில் தஸ்தாயேவ்ஸ்கியின் இடத்தை அடைந்துவிட வேண்டுமென்ற பேராசை கொண்டிருந்தார். அதற்கான தகிக்கும் படைப்பு மன உளைச்சல்கள் இவரை உலுக்கியபடியே இருந்தன. மரணம் அவருடைய கனவைப் பறித்தது; பயணத்தைப் பாதியில் முறித்தது.

தமிழின் முதல் முழுமுற்றான கருத்துலக நாவல் ‘இடைவெளி’. சிந்தனை உலகில் சுயமான, அசலான, தீவிரமான புனைவுப் பயணம் இதில் நிகழ்ந்திருக்கிறது. ஒரு அசலான கண்டுபிடிப்பின் வீரியத்தையும் புது மலர்ச்சியையும் இப்படைப்பு கொண்டிருக்கிறது. தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட நவீனப் படைப்பாளியாக அறியப்பட்டு, அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால், அவருடைய படைப்புகளில் புனைவுப் பயணத்திலிருந்து, அது வசப்படுத்தும் மெய்யறிவிலிருந்து சிந்தனைகள் உருக்கொள்வதில்லை. சமகாலக் கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை சுவீகரித்துக்கொண்டு அதற்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். மாறாக, படைப்பின் புனைவுவழியான மெய்யறிவுப் பயணத்திலிருந்து அறியக் கிடைக்கும் மனிதரைப் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான அவதானிப்புகளிலிருந்தும், அவை முன்மொழியும் புதிய சாத்தியங்களிலிருந்தும் பிற அமைப்புகள், கொள்கைகள், துறைசார் அறிவுகள் தம்மைச் செழுமைப்படுத்திக்கொள்ள முடியும்; முடிந்திருக்கிறது. உதாரணம் ஃப்ராய்டு, தாஸ்தாயேவ்ஸ்கி. கலை, இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். அப்படியான ஒரு தனித்துவத் தன்மையை ‘இடைவெளி’ நாவல் கொண்டிருக்கிறது. ‘இடைவெளி’ நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சினை ஆட்கொள்ளும்போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. உள்ளுணர்வு வழிநடத்தும் பாதையில் தர்க்கத்தின் துணையோடு கொண்ட பயணத்தில் நிகழ்ந்திருக்கும் புனைவுக் கண்டுபிடிப்பாக அது அமைந்திருக்கிறது. அதுவே இப்படைப்பை அரியதும் முக்கியமானதுமான படைப்பாக ஆக்கியிருக்கிறது.

சாவு என்ற பிரச்சினையைச் சாவு பற்றிய சித்தாந்த உலகத்திலிருந்தோ மருத்துவத் துறை சார்ந்த உடற்கூறு உலகத்திலிருந்தோ அணுகாமல், கலை மனம் சார்ந்த யூக உலகிலிருந்து அணுகியிருக்கும் படைப்பு இது. சாவை ஒரு சட்டரீதியான சமூகப் பிரச்சினையாகவோ இருத்தலியல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினையாகவோ அல்லாமல், அதன் அடிப்படைத் தன்மையை யூகங்களின் வழியாகக் கண்டடையும் ஒரு அறிவியல் தன்மையுடனான கலைப் பயணமாக அணுகியிருக்கிறது. இப்பயணத்தில் படைப்பின் மந்திர சக்தியென ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தவும் செய்கிறது. தமிழில் இதுவரை இப்படியான ஒரு அசாத்தியக் கலை முயற்சி நிகழ்ந்திருக்கவில்லை. ஒரு படைப்பு, காலத்தில் நகர்வதும் அதன் இருப்பை அவசியமாகக் கொண்டிருப்பதும் அதன் கருத்துகளால் அல்ல. மாறாக, அதன் புனைவுப் பயணத்தில் உயிர் கொண்டிருக்கும் மந்திர சக்தியால்தான். இது ‘இடைவெளி’யில் கூடிவந்திருக்கிறது. சாவு விஷயத்தில் அவர் உழன்று உழன்று கண்டடைந்தது, அவரே விரும்பியதுபோல், கடைசிபட்சமாக ஒரு குழந்தைக்கும் புரியும்படியானதாக அமைந்துவிடும் அபூர்வம் வியப்பும் திகைப்பும் அளிக்கிறது.

நவீன செவ்வியல் குறும்படைப்பு என்பதற்கான சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது ‘இடைவெளி’. பரந்துவிரிந்த பிரம்மாண்டமான தளம் இல்லையென்றாலும் சிறிய, ஆழமான, நுட்பமான நவீனப் படைப்பு. படைப்புலகம் இட்டுச்செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக்கொடுத்து, அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்டவர் சம்பத். தமிழில் நான் அதிகமுறை படித்த நாவல் இதுதான். பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலாக வில்லியம் ஃபாக்னர், ஜேம்ஸ் ஜாய்ஸை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, “ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதுபோன்ற நம்பிக்கையோடு ஜாய்ஸின் ‘யூலிஸஸை’ நீங்கள் அணுக வேண்டும்” என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் எப்போதும் இருந்துவருகிறது.

ஒரு நாவலாசிரியன் மகத்தான புனைவுவாதி மட்டுமல்ல; அவன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும் புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட ‘இடைவெளி’, தமிழின் பெறுமதியான நாவலாகியிருக்கிறது. இந்த இடத்தில் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி.எச்.லாரன்ஸ், ‘ஒய் நாவல் மேட்டர்ஸ்’ என்ற கட்டுரையில் முன்வைத்திருக்கும் ஒரு ஆதங்கத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்: “பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக்கதைக் காலங்களிலிருந்து உருவாகிவந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை, ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைப்படுத்திக்கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல, தனித்தனியே பிரிந்துபோயின. இதன் காரணமாக, நாவல் மேலோட்டமானதாகவும் தத்துவம் அருவமானதாகவும் வறண்டுபோயின. நாவலில் இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.”

இத்தகையதோர் இணைவில் புனைவாகியிருக்கும் நாவல்தான் ‘இடைவெளி’. இதனாலேயே தமிழின் முதல் முழுமுற்றான கருத்துலக நாவலாக ‘இடைவெளி’ தனித்துவம் பெற்றிருக்கிறது. உலக இலக்கிய வளத்துக்கு நம் கொடையாக அமையும் தனித்துவமும் ஆற்றலும் கொண்டது. இந்த நாவல் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது உலக இலக்கியப் பரப்புக்கான பேரிழப்பு.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x