Published : 11 Aug 2018 09:18 AM
Last Updated : 11 Aug 2018 09:18 AM

தொடு கறி: யாழ்.ரமணன் மறைந்தார்!

சென்னையில் புகைப்படத் திருவிழா!

சென்னை சர்வதேசப் புகைப்படத் திருவிழா, வரும் பிப்ரவரி 22 முதல் மார்ச் 24 வரை ‘சென்னை போட்டோ பியான்னலே’ சார்பில் நடத்தப்படுகிறது. 2016-ல் சென்னையில் முதன்முதலில் இந்த நிகழ்வை முன்னெடுத்தது ‘சென்னை போட்டோ பியான்னலே’. இது இரண்டாம் நிகழ்வு. ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும்கூட உலகப் புகழ்பெற்ற புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்படவிருக்கின்றன. பொதுமக்கள் நிதியளிப்பின் மூலம் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நிதியுதவி செய்ய விரும்புபவர்கள் contact@chennaiphotobiennale.com என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம்!

யாழ்.ரமணன் மறைந்தார்!

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு இசையால் எழுச்சியூட்டிய யாழ்.ரமணன் ஆகஸ்ட் 9 அன்று மறைந்தார். அவரது மறைவு இலங்கை இசையுலகில் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிகச் சிறந்த கித்தார் இசைக் கலைஞரான ரமணன் இசையமைத்த, ‘ஓ! மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத் தா, உன் பாதணிகளை எனக்குத் தா!’ என்ற பாடல் மிகவும் பிரசித்திபெற்றது. யாழ்.ரமணனுக்கு அஞ்சலிகள்!

தமிழில் பிக்கெட்டி!

சமீப ஆண்டுகளில் பொருளாதாரத் துறையில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த புத்தகம் தாமஸ் பிக்கெட்டியின் ‘21-ம் நூற்றாண்டில் மூலதனம்’. கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலின் முதல் பாகம் வெளிவந்து 150 ஆண்டுகள் ஆகும் இத்தருணத்தில் அவரது கருத்துகளுக்கு வலுசேர்க்கும் பிக்கெட்டியின் புத்தகம் தமிழுக்கு வந்துசேர்கிறது. தாவரவியல் அறிஞரான கு.வி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ள இந்தப் புத்தகத்தைப் பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. இன்று மாலை அண்ணாசாலை எல்எல்ஏ நூலக அரங்கத்தில் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான பிரபாத் பட்நாயக் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

அசத்தும் நூலகம்!

சென்னை திருவொற்றியூர் கிளை நூலகம் 2015-ல் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துவருகிறது. இந்த மாத சிறப்பு நிகழ்ச்சியில் சுகி.சிவம் கலந்துகொள்கிறார். இன்று மாலை 6 மணிக்கு நிகழ்வு தொடங்குகிறது. தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக 2014, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசிடமிருந்து விருது பெற்ற நூலகம் இது. 1958-ல் நிறுவப்பட்ட இந்நூலகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் நூலகத்தின் பணி சிறக்கட்டும்!

சென்னை தினக் கொண்டாட்டம்!

சென்னை தினத்தைக் கொண்டாடும் விதமாக இரண்டு நிகழ்வுகளை முன்னெடுத்திருக்கிறது சென்னை ரோஜா முத்தையா நூலகம். ஆகஸ்ட் 18 மாலை 5 மணிக்கு சிறுபத்திரிகைகள் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. பல்வேறு அரிய சிறுபத்திரிகைகள் காட்சிக்கு வைக்கப்படவிருக்கின்றன. அன்று பேராசிரியர்கள் வீ.அரசும், அழகரசனும் உரையாற்றுகிறார்கள். ஆகஸ்ட் 23 மாலை 5.30 மணிக்கு ‘சென்னையில் சித்தர்கள்’ எனும் தலைப்பில் கரு.ஆறுமுகத்தமிழன் பேசுகிறார். தொடர்புக்கு: 044-22542551/52

நான்கு மொழிகளில் சூஃபி இசை!

தமிழ், அரபு, உருது, மலையாளம் என நான்கு மொழிகளில் மாபெரும் சூஃபி இசை நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெறவிருக்கிறது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் சமீர் பின்ஸி மற்றும் இமாம் மஜ்பூர் குழுவினர் பங்குகொள்கிறார்கள். சென்னை மழைக்கு நடுவே, இசை மழையில் நனைய வாருங்கள்!

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x