Last Updated : 13 Jul, 2018 10:47 AM

 

Published : 13 Jul 2018 10:47 AM
Last Updated : 13 Jul 2018 10:47 AM

பார்த்திபன் கனவு 38: வயதான தோஷந்தான்!

அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியவர், “என்ன குழந்தாய்! சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா? ஆகா, அவரைப் பார்க்கத்தானே அம்மா நான் முக்கியமாக யாத்திரை கிளம்பினேன்? நான் அவரைப்பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத் தேடிக்கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா! அந்தப் பிள்ளைக்கு ‘ஞானசம்பந்தன்’ என்ற பெயர் எவ்வளவு பொருத்தம்! பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று? என்ன அருள்வாக்கு! அவர் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை இல்லை, அம்மா! ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை! இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா?” என்றெல்லாம் அப்பர் பெருமான் வர்ணித்துக்கொண்டே போனார்.

குந்தவி பொறுத்துப் பொறுத்துப்பார்த்தாள். கடைசியில் குறுக்கிட்டு,“சுவாமி! நான் ஒருவரைப் பற்றிக்கேட்கிறேன். தாங்கள் இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார், முகத்தில் மீசை முளைக்காதவர் அல்ல; ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தியவர்” என்றாள்.

“குழந்தாய்! நீ யாரைப்பற்றிக் கேட்கிறாயோ எனக்குத் தெரியாது! ஜடா மகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு!” என்றார் நாவுக்கரசர்.

“நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம்தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்கு விரோதமாகக் கலகங்களை உண்டுபண்ணுகிறாராம்...”

“அதிசயமாய் இருக்கிறதே! அப்படிப்பட்ட சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது. சைவத்தையும், வைஷ்ணவத்தையும் இரு கண்களைப்போல் காத்து வளர்த்து வருகிறவர் ஆயிற்றே உன் தந்தை!

நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும்? அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக்கிளப்புவதா? வேடிக்கைதான்! அப்படி யாராவது இருந்தால், அவன்சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான் செய்யலாம்.”

“நான் போய் வருகிறேன் சுவாமி!”

என்று குந்தவி அவருக்கு நமஸ்கரித்து விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள். பல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும்போது அவள் பின்வருமாறு எண்ணமிட்டாள்:

“முதுமை வந்துவிட்டால் எவ்வளவு பெரிய வர்களாய் இருந்தாலும் இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் வளவளவென்று பேசிக்கொண்டே போகிறார்! கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால், கிடையாது! எல்லாம் வயதான தோஷந்தான்!”

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x