Last Updated : 07 Jul, 2018 11:30 PM

 

Published : 07 Jul 2018 11:30 PM
Last Updated : 07 Jul 2018 11:30 PM

ஜி.நாகராஜன்: கடைசி தினம்

‘சா

வும் அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும்போதே வரும்’ என்று ஒருமுறை ஜி.நாகராஜன் குறிப்பிட்டார். உடல்நலம் குன்றி மிகவும் நலிவுற்றிருந்த அவரிடம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாமென எவ்வளவோ முறை நண்பர்கள் வற்புறுத்தியபோதெல்லாம் மறுத்துவந்தவர், மரணத்துக்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து, தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படிக் கேட்டுக்கொண்டார். அதனையடுத்து, சிவராமகிருஷ்ணன் தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்தார். மறுநாள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல இருப்பதைத் தெரிவிப்பதற்காக, முதல் நாள் இரவு, அவர் கடைசி காலத்தில் தங்கியிருந்த விடிசி தனிப்பயிற்சிக் கல்லூரி விடுதியின் காவலாளி அறைக்கு நானும் சிவராமகிருஷ்ணனும் சென்றோம்.

சுற்றிலும் சார்மினார் சிகரெட் பாக்கெட்டுகள் குவிந்தும் சிதறியும் கிடக்க, வேதனையும் வலியும் நிரம்பிய முகத்தோடு ஒரு நைந்த பாயில் படுத்துக்கிடந்தார். எங்களைப் பார்த்ததும் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தார். மிக மோசமான இருமல் அவரை உலுக்கியெடுத்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல இருப்பதைத் தெரிவித்தோம். அவர் உடனடியாக சரி என்று சொன்னது ஆச்சரியமும் சந்தோஷமும் தந்தது. கடைசி நேரத்தில் அவர் மறுத்துவிடக் கூடும் என்ற சந்தேகம் எங்களிடம் இருந்தது.

1981-ம் ஆண்டு பிப்ரவரி 18 காலையில் அவரை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அங்கு பணிபுரிந்த ஒரு மருத்துவர் உதவியுடன் தேவையான எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கூடமாகச் சென்று பரிசோதனைகள் எல்லாம் முடித்த பிறகு பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய காலகட்டத்தில் பரிசோதனை முடிவுகள் மறுநாள் காலையில்தான் தெரியவரும். அதன் பிறகே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். எனினும், அவர் மிகவும் பலஹீனமாக இருந்ததால் அவருக்கு சிரைவழிக் கரைசல் உடனடியாகச் செலுத்தப்பட்டது. மதியம் 2 மணிபோல, ஓய்வெடுக்கும்படியும் மாலை வருவதாகவும் கூறி நாங்கள் பிரிய முற்பட்டபோது, “கஞ்சா ஏதும் போட வேண்டாம். வெளியில் அனுப்பும்படி ஆகிவிடக் கூடாது” என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலமும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் இருப்பதாகவும், டாய்லெட் போய் போட்டுக்கொள்வதாகவும் கூறினார். “சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன். தேவைப்பட்டால் இரவில் டாய்லெட்டில் புகைத்துக்கொள்ளுங்கள்” என்றேன். எவ்வித மறுப்புமின்றி உடனடியாக அவற்றை என்னிடம் கொடுத்துவிட்டார்.

மாலை 5 மணியளவில் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தோம். பார்த்தவுடன் ஆர்வமாக அதைத்தான் கேட்டார். “போடத் தெரியலை. அவசியம் தேவைப்பட்டால் இரவு டாய்லெட்டில் போட்டுக்கொள்ளுங்கள்” என்று அவரிடம் திருப்பிக்கொடுத்தேன். கொஞ்சம் தெம்பாகத் தெரிந்தார். அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஜெருசலேமை முன்வைத்து நடக்கும் மோதல்கள் பற்றி கவலை தோய்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். கடவுளின் பெயரால் நடக்கும் இத்தகைய யுத்தங்களால் மனித இனம் மாண்டுகொண்டிருப்பது குறித்த வேதனை வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க சிரமப்பட்டார். இருவரும் கைத்தாங்கலாகக் கூட்டிச்சென்றோம். டாய்லெட்டில் அவரால் உட்கார முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்கம் கொண்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய்விட்டுக் கதறி அழுதார். ஒருவழியாக, திரும்பக் கூட்டி வந்து படுக்க வைத்தோம்.

குளிர் அவரை மிகவும் உலுக்கியது. சிவராமகிருஷ்ணன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த போர்வையை எடுத்துப் போர்த்தினார். ‘குளிருது, ரொம்பக் குளிருது... சிதையில் போய்ப் படுத்துக்கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்’ என்றார். நாங்கள் செய்வதறியாது மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தோம். சிறிது நேரம் கழித்து, ‘ஐ ஃபால் அபான் தி தோர்ன்ஸ் ஆஃப் லைஃப்! ஐ ப்லீட்..’ என்றபடி கண்களை மூடிக்கொண்டார். நாங்கள் வீடு திரும்பினோம்.

மறுநாள் காலை மருத்துவமனை சென்று வார்டுக்குள் நுழைந்தபோது, ஜிஎன்னின் படுக்கை காலியாக இருந்தது. எங்களைப் பார்த்ததும் நோயாளிகள் சிலரும், அவர்களுடைய உறவினர்களில் சிலரும் எங்களைச் சூழ்ந்துகொண்டு, ஜிஎன் இறந்துவிட்டதைத் தெரிவித்து எங்களைக் கடிந்துகொண்டார்கள். அவருடைய பையன்களென்று எங்களை நினைத்துவிட்டார்கள். உடலைப் பிண அறைக்குக் கொண்டுசென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்கள். வார்டு மருத்துவரைப் பார்த்தோம். காலையில்தான் ஜிஎன்னுடைய எல்லா பரிசோதனை அறிக்கைகளையும் பார்த்ததாகவும், அவர் இவ்வளவு காலம் எப்படி உயிருடனிருந்தார் என்பதே பெரும் ஆச்சரியமாக இருப்பதாகவும் சொன்னார். ஒருபக்க நுரையீரலே இல்லை என்று கூறி வியந்தார். உடலைப் பிண அறையிலிருந்து எடுத்துக்கொள்ளாலாமென்று கூறினார். அப்போதுதான் நாங்கள் ஒரு இக்கட்டான நிலையிலிருப்பதை உணர்ந்தோம். எங்கள் நிலையை எடுத்துச்சொல்லி, “அவருடைய மனைவியைச் சந்தித்துப் பேசிவிட்டு உடலை எடுத்துக்கொள்கிறோம். அதுவரை உடல் பிணவறையில் இருக்கலாமா?” என்று கேட்டோம். “அதுவொன்றும் பிரச்சினை இல்லை. பிணவறைக்குச் சென்று உடலைப் பார்த்துவிட்டு, அங்குள்ள பணியாளரைக் கவனித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார் மருத்துவ நண்பர்.

பிணவறையில் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவர் கொஞ்சம் நிம்மதியாக இருந்துகொண்டிருப்பதுபோல அப்போது எனக்குத் தோன்றியது. பிணவறைப் பணியாளரிடம், சில ஏற்பாடுகள் செய்துவிட்டு எடுத்துக்கொள்ள இருப்பதாகச் சொன்னோம். ‘ஐஸ் பார்’ வாங்கப் பணம் கேட்டார். சிவராமகிருஷ்ணன் கொடுத்தார். “போயிட்டு வாங்க சாமி. நான் நல்லா பாத்துக்கிறேன்” என்றார் .

ஜிஎன்னின் மனைவி அந்நேரத்தில் பள்ளிக்கூடத்தில்தான் இருப்பார் என்பதால் அவர் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிக்கூடம் சென்று பார்த்தோம். விவரம் சொன்னதும் ஒருகணம் திடுக்கிட்டுப்போனார். அவருடைய நிலையும் இக்கட்டானதுதான். மகள் ஆனந்தியுடன் ஒரு மகளிர் விடுதியில் அவர் தங்கியிருந்தார். இளைய மகன் கண்ணன் அவருடைய அண்ணன் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தான். அவருடைய அண்ணனுடன் கலந்து பேசிவிட்டுச் சொல்வதாகச் சொன்னார். அதன்படி, மறுநாள் காலை 7 மணிபோல மருத்துவமனையிலிருந்து உடலை நேரடியாகத் தத்தநேரி சுடுகாட்டுக்கு நாங்கள் கொண்டுவந்துவிடுவதென்றும், அங்கு வைத்து அவர்கள் காரியங்கள் செய்துகொள்வதென்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் காலை, அதற்கேற்ப காரியங்கள் நடந்தன. நெருங்கிய நண்பர்கள் சிலரும் உறவினர்கள் சிலருமாக அதிகபட்சம் 15 பேர் கூடியிருக்க, நவீனத் தமிழ் இலக்கியத்துக்குப் புது வெளிச்சம் தந்த ஜிஎன் உடல் எரிக்கப்பட்டது!

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x