

தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் நிதித்துறையின் மூலமாக தமிழ்நாடு அரசு, ஒரு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. இந்த நூலின் செய்நேர்த்தி சிறப்பாக உள்ளது. நூலின் உள்ளடக்கமும் என்னை வெகுவாக யோசிக்க வைத்து விட்டது. தமிழரின் செல் நெறி எது என்பதை அறிந்து, மானுடத்தின் அறிவு இணக்கத்தை எல்லாம் ஓடி ஓடித் தேடித் தேடி மலர் இணைத்திருக்கிறது. அரசாங்கம் என்பது ஆளுங்கட்சிக்கானது, என்ற கடந்த காலத் தடுமாற்றங்கள் மலரில் இல்லை.
தமிழரின் தொன்மையான நிதி மேலாண்மையை, உலக நிதி நிர்வாக வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது காலத்தின் தேவை. இந்த ஒப்பீடு பல துறைகளில் நம்மிடம் இல்லை. இந்தத் திசையில் நூல் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழ் நிலம், மூத்த விவசாய நிலம். கரிகாலனின் கல்லணை, தாமிரபரணியில் பாண்டியர்கள் கட்டிய மருதூர் அணை, பாண்டிய நாட்டின் கண்மாய் உருவாக்கத்தின் இருப்பைக் குடி கிழவன் என்று இவையெல்லாம் உலக நீர் மேலாண்மையில் நிகரற்றவையாகக் கருதப்படுகின்றன.